ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள்
ஆகஸ்ட் 21, 2011 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியின் 2011-12 கல்வி ஆண்டுத் துவக்க நாள் சிறப்பாக நடந்தது. ஏறக்குறைய 180 குழந்தைகளுடன் இந்தக் கல்வியாண்டு துவங்குகிறது. காலையில் குழந்தைகளுடன் ஆசிரியர்களும், பெற்றோரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, பள்ளி முதல்வர் சுந்தரி குமார் வரவேற்புரை ஆற்றினார்.

பின்னர், புதிய மாணவர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. அன்றைய தினம் இந்திய சுதந்திர தினம் பற்றியும், நம் நாட்டுத் தியாகிகள் பற்றியும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விளக்கினர். முதல் நாளன்றே இத்தகைய தொகுப்பு வழங்கியதைப் பெற்றோர்கள் வரவேற்றனர். பெற்றோர்கள் அனைவரும் தத்தம் குழந்தைகளை வகுப்புவரை சென்று வழியனுப்பி, வகுப்பு முடிந்ததும் புன்னகையுடன் வந்த குழந்தைகளைப் பெருமையோடு அணைத்த காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்.

முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று மாணவர்களின் சேர்க்கைப் பதிவு நடந்தது. இந்தப் பள்ளி CTA பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

ராஜி முத்து,
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி, ஜார்ஜியா

© TamilOnline.com