இருமல்கள் பல விதம்
அதிகம் இருமினால் அது காசநோய் என்று கலங்கிய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் காசநோயே அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் கலங்கடிக்கும் இருமல் வந்து வந்து போவதுண்டு. இருமல்களில் பலவிதம் உண்டு. அவற்றைப்பற்றித் தெரிந்துகொள்வோமா?

கிருமி இருமல்
நுண்ணுயிர்க் கிருமிகளினால் இருமல் வருவதுண்டு. பலருக்கு தொண்டை கட்டிப்போய் அதனால் சளியுடன் இருமல் வருவதுண்டு. இது இடியுடன் பெய்யும் மழைபோல் வரும் சளியுடன் கலந்த இருமல் இதற்கு 'Cold' என்று செல்லப் பெயரும் உண்டு. இதற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம். சளி மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்து (Antibiotics) தேவைப்படும். இருமல் அதிகமாகித் தொண்டை வலித்தால் அதற்கு இருமல் திரவ மருந்துகள் உட்கொள்ளலாம். இரவில் தூக்கத்தைக் கெடுக்கும் இருமல் இருந்தால் அதற்கென்று உறங்கம்தரும் இருமல் சிரப்புகள் மருந்துச் சீட்டுக்குக் கிடைக்கும்.

வறட்டு இருமல்
சளியில்லாத வறட்டு இருமல் மிகவும் தொந்தரவு செய்துவிடும். இதுவும் வைரஸால் ஏற்படலாம். அப்படி இருந்தால் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்க கூடும். தொடர்ந்து இருக்கும் வறட்டு இருமலுக்கான காரணங்கள்

  • ஒவ்வாமை (Allergy)
  • ஆஸ்த்மா (Asthma)
  • வயிற்றில் அமிலம் அதிகமாவதால் வரும் இருமல் (Acid Reflux disease)
  • நுரையீரல் பிரச்சனை (Lung disease)
  • இருதய நோய் (Heart disease)

இருதய நோய் அல்லது நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இருமலுடன் வேறு சில அறிகுறிகளும் காணப்படும்

ஒவ்வாமை மற்றும் ஆஸ்த்மா
ஒவ்வாமை மற்றும் ஆஸ்த்மா மிகவும் பிரபலமானவை. இவை இரண்டும் உடன்பிறவா சகோதரிகள் என்று சொன்னால் மிகையாகாது. வசந்த காலத்தில் மொட்டுகள், இலைதழைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சாலையில் வாகன நெரிசலில் வெளியாகும் கரி வாயு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். வீடுகளில் சுத்தம் செய்யும்போது கிளம்பும் தூசுப் படலம் ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இந்த ஒவ்வாமையால் ஒரு சிலருக்கு நாசி அருவியாகக் கொட்டும், கண்களில் அரிப்பு ஏற்படும்; சிலருக்கு வறட்டு இருமலாகத் தொண்டை கனைக்கும். சிலருக்குத் தட்பவெப்ப நிலை மாறும்போது இது அதிகமாகும். குறிப்பாகக் கடும் கோடைக்காலத்தில் குளிர் சாதனத்தை உபயோகிக்கும்போது குளிர்காற்று முகத்தில் பட்டதும் இருமல் ஆரம்பமாகிவிடும். இன்னும் பலருக்குத் தொடர்ந்து பேசினால் அல்லது சிரித்தால் இந்த வறட்டு இருமல் ஆரம்பமாகிவிடும்.

தடுப்பு, சிகிச்சை
ஒவ்வாமை ஏற்படுவது பெரும்பாலும் அவரவர் மரபணுக்களில் வருவது. இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஒவ்வாமை இருப்பதைக் கண்டுபிடித்தால் அவற்றைச் சரியாகக் கையாண்டு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். கூடுமானவரை தூசு தட்டும்போது முகத்தை மூடிக்கொள்வது நல்லது. வெளியில் செல்லும்போது தவிர்க்க முடியாமல் ஒவ்வாமைப் பொருட்கள் தாக்க நேர்ந்தால், வீட்டுக்கு வந்தவுடன் தலைக்குக் குளிக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வாமைப் பொருட்கள் மற்றும் மகரந்தத் துகள்கலிலிருந்து தப்பிக்கலாம்.

மருந்துக் கடைகளில் ஒவ்வாமையை நிவர்த்தி செய்யச் சில மருந்துகள் கிடைக்கின்றன. இவை Zyrtec, Claritin, Allegra வகையை சார்ந்தவை. இவற்றை தினமும் குறைந்தது ஒரு மாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் தீவிரமாவதற்கு முன்னரே இவற்றை உட்கொள்வது சிறந்தது. அருகிலிருக்கும் வயல்வெளிகளில் தயார் செய்யப்பட தேனை உண்ணுவதன்மூலம் மகரந்த ஒவ்வாமையை சிறுகச்சிறுக குணப்படுத்தலாம். இதைத் தவிரவும் நோய் தீவிரமானால் வேறு (Nasonex, Flonase) சில மருந்துகள் அளிக்கப்படும். இவை மூக்கில் உறிஞ்சும் மருந்தாகவும் இருக்கலாம். இதற்கு மேலும் தேவைப்பட்டால் வாராவாரம் ஊசி மூலம் இந்த ஒவ்வாமையை
ஓழிக்க முயலலாம்.

ஆஸ்த்மா அதிகமானால் இழுப்பு ஏற்படும். இவர்களுக்கு மூச்சில் உள்ளிழுக்கும் மருந்துகள் (Inhaler) தேவைப்படும். இவர்கள் எப்போதும் இந்த மருந்தைக் கையோடு கொண்டுசெல்ல வேண்டும். அதிக நடை அல்லது மலையேற்றம் போன்ற வேளைகளில் இந்த மருந்தின் தேவை அதிகரிக்கும்.

வயிற்றில் அமிலம் அதிகமாவதால் வரும் இருமல்:
வயிற்றில் அமிலம் அதிகமானால் வயிற்றுப் புண் ஏற்பட்டு வலி வரும். ஆனால் சிலருக்கு இந்த அமிலம் உணவுக் குழாய் வழியே மேல் ஏறித் தொண்டையில் தங்கி விடலாம் (Heart burn). இது வறட்டு இருமலாகத் தொந்தரவு தரலாம்.

தடுப்பு, சிகிச்சை
முதலில் காபி குடிப்பதைக் குறைக்க வேண்டும். தவிர, அமிலம் அதிகரிக்கும் உணவுப் பொருட்களாகிய ஆரஞ்சு, புதினா, சாக்லேட்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வேளாவேளைக்கு உணவு உண்ண வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் நல்லதல்ல. பசியுடன் அதிக நேரம் இருக்கக்கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது. உடல் எடை குறைப்பதும் முக்கியம். இதையும் மீறி அமிலம் அதிகம் சுரந்தால் அதற்கு மாத்திரைகள் (Prilosec, Nexium, Prevacid) உள்ளன. இவற்றை 6 வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் வயிற்றுப் புண் ஆறும்.

ஆகப் பல உருவங்களில் வரும் இருமலை இல்லாததாக்கத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com