அதுவும் சுயநலமே
அன்புள்ள சிநேகிதியே

நான் பலவருடத் தென்றல் வாசகி. 'அன்புள்ள சிநேகிதி'யைத் தவறாமல் படித்து வருபவள். ஒவ்வொரு முறையும் என்னுடைய மன உளைச்சல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் தயக்கம். என்னுடைய அந்தரங்கம் பிறத்தியாருக்குத் தெரிந்துவிடப் போகிறதே என்ற சங்கடம். இப்போது ஒரு வாரமாக எந்தக் காரணத்தாலோ அந்த பயம் இல்லை. தெரிந்தால் என்ன என்பதுபோல் ஒரு அலட்சிய சுபாவம். அந்த உணர்ச்சி நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.

எனக்கு வயது 57.
அம்மா, அப்பாவைப் பிரிந்து வந்துவிட்டாள். எனக்கு அவர் முகம் தெரியாது. எனக்கு 3 வயது. அக்காவுக்கு 9 வயது. அப்பா, அம்மாவை (பெண் விஷயத்தில்) ஏமாற்றி விட்டதாய் என் பாட்டிதான் சொன்னாள். அம்மா இரண்டு இடத்தில் வேலை பார்த்து இரவு வரும்போது 9-9.30 ஆகிவிடும். என் அம்மாவைப் பெற்ற பாட்டியிடம்தான் வளர்ந்தோம். அம்மா மெஷின்போல வேலை பார்த்து எங்களைப் படிக்க வைத்தாள். வாழ்க்கையில் பாசமும் பார்க்கவில்லை. பணமும் பார்க்கவில்லை. ஏதோ வளர்ந்தோம். என் அக்காவுக்குத் திருமணம் ஆக என் அம்மா மிகவும் சிரமப்பட்டாள். குடும்பத் தலைவன் உயிரோடு இருந்தும், கூட இல்லையே! எப்படியோ ஒரு சாதாரண இடத்தில் இடம் அமைந்தது. அக்கா பி.ஏ. அவள் கணவர் டிப்ளமோ ஹோல்டர். இந்த நிலைமையைப் பார்த்து நான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டேன். அம்மாவுக்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. பாட்டியை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும். அக்காவுக்கு இந்தக் கல்யாணத்தால் காம்ப்ளக்ஸ் வரக்கூடாது என்று சதா யோசித்துக்கொண்டே இருப்பேன்.

நான் மாஸ்டர்ஸ் முடித்து வேலையில் இருந்தபோது இந்த அருமையான நபரைப் பார்த்தேன். அவருக்குப் பெரிய குடும்பம். அவருக்கும் அப்பா இல்லை. அண்ணாதான் படிக்க உதவி செய்திருக்கிறார். என்னைப் போல் எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். ஒரு அக்கா, திருமணம் ஆகி 3 வருடம் ஆகியிருந்தது. 2 தங்கைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். யாரையுமே குறை சொல்லத் தெரியாத மனிதர். அண்ணா திருமணம் ஆகி 6 மாதத்திலேயே அந்த மனைவி தனிக் குடித்தனம் போகச் செய்துவிட்டாள். "பாவம் என்ன செய்வாள் என் மன்னி. அம்மாவின் கோபத்துக்கும் என் தங்கைகளின் டிமாண்டுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இவர் முழுக் குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். எனக்கு இவரைப் போலத் தன்னலம் இல்லாது இருப்பவர் ஒருவர் கணவராகக் கிடைத்தால் எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வேன். எனக்குக் கல்யாண வயது வந்தபோது நான் பார்த்தே இராத அப்பா காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தது. ஆகவே, அம்மா விதவை என்ற நிலைக்கு அங்கீகாரப்பட்டிருந்தாள். அக்காவின் திருமணப் பிரச்சனைகள் எனக்கு அவ்வளவாக இல்லை. அம்மாவும் பள்ளி முதல்வர் ஆகியிருந்தாள். நான் எக்ஸிக்யூடிவ் ஆக இருந்தேன். நிறையப் பேர் பெண் கேட்டு வந்தார்கள்.

ஆனால், என் அம்மாவுக்கு முழுச் சம்மதம் இல்லாமல் போனாலும் என்னுடன் வேலை பார்த்த இவரிடம் வெட்கம் இல்லாமல் என் காதலைத் தெரிவித்து கல்யாணத்திற்கு இசைய வைத்தேன். அவர் வீட்டில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது. தங்கைகளுக்குத் திருமணம் செய்துவிட்டுத் தன்னைப் பற்றிச் சிந்தித்திருக்கக் கூடாதா என்று அவர் அம்மா கேட்டிருக்கிறார். சகோதரிகளுக்கும் கொஞ்சம் பயம். மூத்த அண்ணாவைப் போல இவரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய்விடுவாரோ என்று சந்தேகம்.

எனக்கு அவர் முக்கியமாகப் பட்டதால் அவருடைய எந்த நிபந்தனைக்கும் சம்மதித்தேன். கூட்டுக் குடும்பம். ஒரே 'பாத்ரூம்' புறாக்கூண்டு போல 2 அறைகள். மும்பையில் அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்? நான் கொஞ்சம் சௌகரியமாகத்தான் திருமணத்திற்கு முன்பு இருந்தேன்.

அவரிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாது. என்னால்தான் ஓரளவுக்கு மேல் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் சகித்துக் கொண்டேன். வெளிநாட்டு வாய்ப்புகள் வந்தபோது இவர் மட்டும் 2 வருடம் தனியாகப் போய்விட்டு பணம் சேகரித்துக் கொண்டு வந்தார். நானும் போயிருக்கலாம். ஆனால், குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், என்னுடைய சம்பளம் உதவியாக இருக்குமென்றும் அவர் தாழ்ந்து கேட்டுக்கொண்டார். நாத்தனார்களுக்குத் திருமணம் ஆனதும் நம்முடையதுதானே வாழ்க்கை என்று பொறுத்துக் கொண்டேன். நானே நல்ல வரன்கள் தேடி அவர்கள் விருப்பப்படி திருமணம் ஏற்பாடு செய்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். ஆனால், அதையும் தள்ளிப்போட்டோம். அவர் அக்காவிற்குத் திருமணம் ஆகி, குழந்தை பிறக்காது இருந்ததால் "நாம் முதலில் பெற்றுக்கொண்டால் வருத்தப்படுவாள்" என்று இவருக்குக் குற்ற உணர்ச்சி.

எப்படியோ 7, 8 வருடங்கள் கழிந்து இங்கு வந்து செட்டில் ஆனோம். அதற்குள் எனக்கு 35 வயது ஆகிவிட்டது. ஒரே ஒரு பெண் இங்கு வந்து பிறந்தாள். அவர் அம்மா கூட வந்து இருந்தார். என்னால் இங்கு வந்து வேலைக்குப் போக முடியவில்லை. குழந்தை, மாமியார் என்று பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய குடும்பத்து மக்கள் ஒவ்வொருவராக வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். நான், அவர் தன் குடும்ப மனிதர்களுக்கு வாரி வழங்கியதைத் தவறாக நினைத்ததில்லை. அவருடன் பணத்தைப்பற்றி எந்த வாக்குவாதமும் செய்ததில்லை. 'இருப்பது ஒரு பெண்தானே, கரையேற்றி விடுவோம்' என்ற நம்பிக்கை. இவர் பணம் அனுப்பி, இவர் அம்மாவின் பெயரில் ஒரு அபார்ட்மெண்ட் இருந்தது. ஒன்றுமில்லையென்றால் அங்கே போய்த் தங்கிக்கொள்ளலாம், வயதாகி விட்டால் என்ற பாதுகாப்பும் இருந்தது.

போன மாதம் என்னுடைய மாமியார் காலமாகிவிட்டார். அவருடைய காரியங்களைச் செய்ய இந்தியா சென்றோம். எல்லாம் முடிந்த பிறகு வீட்டைப் பற்றிய விவரம் எனக்குத் தெரியவந்தது. அவருடைய 3 சகோதரிகளும் தங்கள் பேரில் எழுதி வாங்கி வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். என் மாமியார் அடிக்கடி பெண்களைப் பார்க்க இந்தியா செல்வார். நானே கொண்டு போய் விட்டுவிட்டுப் பின்னர் அழைத்து வந்திருக்கிறேன். அந்தச் சந்தர்ப்பத்தில் எழுதி வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரிய அண்ணா வீட்டிற்கு உதவியாக இல்லை. பிரிந்து போய்விட்டான். சின்னவன் அமெரிக்காவில் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இந்த வீட்டின் பாகம் அவனுக்குப் பெரியதில்லை என்று அவர்களே முடிவு பண்ணி விட்டார்கள். நான் தைரியம் வந்து கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டதற்கு "இது அண்ணா அம்மாவிற்குத் தன் சம்பாத்யத்தில் வாங்கிக் கொடுத்ததுதானே! அவன் கேட்கட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம்" என்றார்கள். இவர் அதைக் கேட்டும் பேசாமல் இருந்தார்.

எனக்கு அந்தச் சமயத்தில் எல்லாமே வெறுத்துப் போய்விட்டது. பணம், பங்கு பெரிதாகப் படவில்லை. ஆனால் அவர்களுடைய அந்த எண்ணம், பார்வை என்னை மிகவும் உதாசீனப்படுத்தியது போலத் தோன்றியது. இவ்வளவுக்கும் அவருடைய குடும்பத்துக்கு அவருடன் கூடச்சேர்ந்து முன்னுக்குக் கொண்டு வந்ததற்கு எனக்கு ஒரு கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்து விட்டார்களே என்று மனம் நொந்துபோய் விட்டேன். இவரை "ஏன், அப்படிக் கேட்டுக்கொண்டு இருந்தீர்கள்" என்று கேட்டதற்கு, "விடு. அவர்கள் குணம் அப்படி என்று தெரிந்ததுதானே? நான் அம்மாவிற்குக் கொடுத்ததை யாருக்கு வேண்டுமோ கொடுக்க உரிமையிருக்கிறதே. நான் கடனா கொடுத்தேன்? கடமையைத்தானே செய்தேன். நாம் சம்பாதித்துக் கொள்ளலாம்" என்று என்னைச் சமாதானப்படுத்தினார். மிகவும் கசப்பான நினைவுகளோடு நான் ஃப்ளைட் ஏறி இங்கு வந்து சேர்ந்தேன். அவர்கள் யாரிடமும் குழைந்து பேசி விடைபெறவில்லை. மனம் மரத்துப் போய்விட்டது. நீங்கள் உறவு முக்கியம் என்று எப்போதும் எழுதுகிறீர்களே, இதுபோன்ற உறவுகளையா இத்தனை வருஷம் கட்டிக் காத்தேன்? சுயநலமாக இருப்பவர்களுக்கு எல்லாமே நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை வீணாகப் போய்விட்டது. இவருக்கு இன்னும் புரியவில்லை. எனக்குப் புரிகிறது. கொட்டித் தீர்த்து விட்டேன். பதில் என்னவாக இருக்கும் என்றும் அனுமானித்து விட்டேன்.

இப்படிக்கு
..................

அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய கருத்துக்களை அனுமானித்து விட்டீர்கள் என்பதால் பதில் எழுதவில்லை. அதே சமயம் உங்கள் உணர்ச்சிகளை நான் பரிபூரணமாகப் புரிந்து கொள்கிறேன். எப்படியும் ஒரே வரியில் என் கருத்து "பிறர் நலம் வேண்டுவதும் ஒருவகையில் சுயநலமே". இதை இன்னும் விரிவாக அடுத்த இதழில்...

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com