கணிதப்புதிர்கள்
1. ஒரு பெட்டியில் சில பொற்காசுகள் இருந்தன. தந்தை அவற்றைச் சமமாகப் பிரித்துக் கொள்ளும்படித் தன் மகன்களிடம் கூறிவிட்டுச் சென்றார். முதல் மகன் யாருக்கும் தெரியாமல் பெட்டியில் இருப்பதை நான்காகப் பிரித்து தனது பங்கை எடுத்துக் கொண்டான். அதை அறியாத இரண்டாவது மகன் பெட்டியில் இருப்பதை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும், கூடுதலாக ஒரு பொற்காசையும் எடுத்துக் கொண்டான். மூன்றாவது மகனும் அதே போல நான்காகப் பிரித்துக் கூடுதலாக இரண்டு பொற்காசுகளை எடுத்துக் கொண்டான். நான்காவது மகன் வந்து பார்த்தபோது அதில் நான்கு பொற்காசுகள் மட்டுமே இருந்தன. அதை அவன் தனக்கு எடுத்துக் கொண்டான். அப்படியானால் பெட்டியில் இருந்த பொற்காசுகள் எத்தனை? யாருக்கு எத்தனை காசுகள் கிடைத்தன?

2. கமலா, விமலா, மாலாவின் வயதைப் பெருக்கினால் 36 வரும். கூட்டினால் 13 வரும். இவர்களில் மூத்தவளான மாலாவுக்கு மட்டுமே மாடி ஏறத் தெரியும். அப்படியானால் அவர்களது சரியான வயது என்னவாக இருக்கும்.

3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 1, 1, 4, 8, ...... ?

4. சேகரிடம் இருக்கும் பெட்டிகளில் இரண்டை பிரபுவிடம் கொடுத்தால் இருவரது பெட்டிகளின் எண்ணிக்கையும் சமமாகி விடுகிறது. பிரபுவிடம் இருக்கும் பெட்டிகளில் இரண்டை சேகரிடம் கொடுத்தால், அவனது பெட்டிகளின் எண்ணிக்கை இரு மடங்காகி விடுகிறது. இருவரிடமும் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5. A, B, C என்னும் மூவரும் வியாபாரிகள். A, B இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. B, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. A, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரும் செய்த விற்பனைத் தொகை எவ்வளவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com