கேரளத்து விஷு சமையல்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விஷு என்பது கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை. சூரியன் மேஷ ராசிக்கு வரும் முதல் நாளில் இது கொண்டாடப்படுகிறது. அதுவே புத்தாண்டின் முதல் நாளுமாகும். அதில் கனி காணல் மிகவும் முக்கியம். விஷுவிற்கு முதல் நாள் இரவு வீட்டின் மூத்த தலைவி இந்த விஷுக்கனியை தயார் செய்வார்.

ஒரு வெண்கல உருளியில் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொன்றைப் பூ, தங்க நகைகள், தானியங்கள், காசுகள் ஆகியவை வைக்கப்படும். இந்த உருளியின் பின்னால் ஒரு கண்ணாடியும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் படமும் வைக்கப்படும். பல விளக்குகளையும் ஏற்றுவர். காலையில் கண் விழித்ததும் வீட்டின் பெரியவர்கள் முதலில் இந்தக் கனியைக் காண்பார்கள். பின்னர், வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளை கண்களை மூடிக் கொண்டு வரச் செய்து, முதன் முதலில் கனிகாணச் செய்வர். பின்னர் பெரியோர்களை குழந்தைகள் வணங்க, அவர்களுக்கு ஆசிகள் கூறி காசுகளை அளிப்பர். இதை விஷு கைநீட்டம் என்று சொல்வர்.

இவ்விதம் மங்கலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட விஷுக்கனியை முதன் முதலில் காண்பதால் வருடம் முழுவதும் நன்மையும் இன்பமும் கூடிவரும் என்பது நம்பிக்கை. விஷு அன்று விஷுக்கோடி (புத்தாடை) உடுத்தி மகிழ்வர்.

விஷு கொண்டாடும் இந்த மாதத்தில் கேரள சமையலைச் செய்து மகிழலாமா?

விஷுகஞ்சி

தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி (rosematta rice) - 1/2 கிண்ணம்
பச்சரிசி - 1/8 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
தண்ணீர் - 4 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அரிசியை அதில் போட்டு நன்கு வேகவிடவும். வெந்த பின்னர் உப்பு மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லத் தண்ணீரை அதில் சேர்க்கவும்.

அது நன்றாகக் கொதித்து கெட்டியாக வந்த பின்னர் தேங்காய்த் துருவல் சேர்த்து மிதமான சூட்டில் மேலும் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறிய பின்னர் உண்ணவும். சிவப்பு அரிசி, இந்திய கடைகளிலும் amazon.com-லும் கிடைக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com