BATM வழங்கிய 'பாரதிக்கு பரதாஞ்சலி'
ஜூன் 19, 2011 அன்று மில்பிடாஸ் இந்தியா கம்யூனிடி சென்டர் அரங்கத்தில் 'பாரதிக்கு பரதாஞ்சலி' என்ற நிகழ்ச்சியை சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்ச் சங்கம் நடத்தியது. குரு.சரோஜா வைத்தியநாதன் அவர்கள் தமது மாணவியருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினார். மகாகவி பாரதியாரின் கணபதிராயன் பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

பாரதியின் பெண்விடுதலை, தேசபக்தி, இயற்கை வர்ணனை, தெய்வ பக்தி, சமுதாய மனிதநேயக் கண்ணோட்டம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவனவாகப் பாடல்கள் அமைந்திருந்தன. 'விடுதலை, விடுதலை' பாடலில் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற வரிகளின் அடவில் வரதட்சணை, பெண் கருச்சிதைவு கொடுமைகளைக் கண்டிப்பதாகச் சித்திரித்தது அருமை. 'கரும்புத் தோட்டத்திலே' பாடலில் நெஞ்சை உருக்கும் கொடுமைகளைக் கண்ணீர் மல்க மேடையில் காண்பித்தார்கள். ஸ்நிக்தா வெங்கட்ரமணி, இசுமி சாட்டோ, அக்ஷயா கணேஷ், நேஹா பட்னாகர், கீர்த்திகா இராமகிருஷ்ணன், ஸ்ரீவித்வதா ஸ்ரீதர், நவீன் நாதன், ஆறுமுகம் அப்பாதுரை ஆகியோர் சிறப்பாக நடனமாடினர். ஸ்ரீவித்யா ஸ்ரீதர் அழகாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுப்புரை வழங்கினார். அருண் விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீதரன் மைனரின் ஒலியமைப்பு சிறப்பாக அமைந்திருந்தது.

ஒரு நாட்டிய நாடகம்போலப் பல பாடல்கள் உணர்ச்சிபூர்வமாக தொகுக்கப் பட்டிருந்தது மக்களைக் கவர்ந்தது. 'விடுதலை, விடுதலை' பாடலிலும், 'சக்தி' பாடலின் காற்று, மின்னல், மழைப் பகுதியிலும் ஒலி, ஒளி அமைப்பு சிறப்பாக இருந்தது. இந்தியா கம்யூனிடி சென்டரின் நவீன ஒலி, ஒளிக் கருவிகள் ஒரு காரணம். தவிர, ஒரு லட்ச ரூபாய் செலவில் நிகழ்ச்சிக்கான ஒலித்தட்டு பதிவு செய்துகொண்டு வந்தது மற்றொரு காரணம். ஒளியமைப்பில் பாகீரதி சேஷப்பன் உதவினார். தமிழ்மன்றத் தலைவர் சரவணன் அவர்கள் தனது உரையில் தமிழ்மன்றம் வழங்கிய விழாக்களிலே இது மற்றுமொரு சிறப்பு மிக்க விழா, முழுநேர பரதநாட்டியம் கொண்ட முதல் நிகழ்வு என்று குறிப்பிட்டார். 'வாழிய செந்தமிழ்' என்ற பாரதியின் தமிழ் வாழ்த்துடன் பரதாஞ்சலி இனிதே நிறைவு பெற்றது.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com