தென்றல் பேசுகிறது
உலகக் கோப்பைப் பந்தயத்திலிருந்து ஜாம்பவான்களான இந்தியாவும் பாகிஸ்தானும் வெறுங்கையோடு புறப்பட்டாயிற்று. பாகிஸ்தான் அணி குறித்த துயரச் சம்பவத்தை எழுத வார்த்தைகள் இல்லை.

தனிநபரைச் சார்ந்த விளையாட்டல்ல கிரிக்கெட் என்பதை இந்திய அணி உணரவேண்டும். பெர்முடாவை அடித்ததில் பெருமை எதுவும் இல்லை. நல்ல பயிற்சியும், முயற்சியும், கட்டுப்பாடும் கொண்டிருந்த பங்களாதேஷிடம் தோற்றது இந்திய அணியின் கண்ணைத் திறந்திருக்க வேண்டும். முக்கியமான ஆட்டத்தில் ராகுல் திராவிடுக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஏதோ இயற்கைதானே என்று தோன்றலாம். ஆனால், முதல் சுற்று ஆட்டங்களிலேயே இப்படி வருவது நமது அணியின் உடல் தகுதியைப் பற்றிய குற்றப் பத்திரிகைதான்.

நிர்வாகம், வீரர்கள், விளையாட்டு, பொருளாதாரம் எல்லாமே செழிக்கும்படியான ஒரு செயல்திட்டத்தை அமலாக்குவதில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருக்கிறது. அது நீடித்த பலனையும் கொடுத்திருக்கிறது. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோமா?

மொழி, தமிழகத்தின் வாழ்க்கைமுறை, கலாசாரம் இவற்றை இங்கு வளரும் நம் குழந்தைகளுக்குச் சுட்டிக்காட்ட நாம் தமிழ்ச் சேனல்களில் வரும் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது.அதில் வரும் அப்பா/கணவர்/அண்ணன் எப்போது தம்பி/மனைவி/தங்கையை அறைவார் என்று சொல்லவே முடியாது. அறை வாங்குவது குழந்தையாகவும் இருக்கலாம். அப்போது நாம் 'இதுதான் எமது பண்பாடு' என்று நம் குழந்தைகளிடம் சொல்லிக் கொள்ள முடியாமல், மெதுவாக வேறு சேனலுக்குத் திருப்ப வேண்டியதாகிவிடுகிறது. இத்தகைய உடல்சார்ந்த வன்முறைக்கு நாகரிக உலகில் இடமில்லை. சிகரெட், மது, அரிவாள் இவையும் ஏராளமாகப் புழங்குகின்றன. படங்களில் ஒடும் ரத்த ஆறு பிரமிக்க வைக்கிறது. அண்மையில் செய்த ஓர் ஆய்வு தமிழ்நாட்டில் தான் மனைவியரை அடிப்பது அதிகம் என்று தெரிவிக்கிறது. இதிலும் பெருமைப்பட ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் ஊடகங்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். ஊடகங்கள் அனைவரும் சேர்ந்து தாங்களாகவே தமக்கென்று சரியான விதிகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடந்தால், அரசாங்கம் விதிகள் இயற்ற வேண்டிய நிர்பந்ததைத் தவிர்க்கலாம்.

சர் சி.வி. ராமன், சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்ற தமிழர்கள். அப்பரிசுக்குத் தகுதியான மற்றொரு தமிழரை நாம் இந்த இதழில் சந்திக்கிறோம். அவர்தான் பேராசிரியர். வீரபத்ரன் ராமநாதன். சுற்றுச்சூழல் மாசுபற்றிய மிக முக்கியமான கருத்தாங்கங்கள் இவரது ஆய்வுகளில் வெளிப்பட்டவைதாம். பசுமையக விளைவு, பழுப்பு மேகம், குளோரோ·ப்ளூரோ கார்பன்களின் தீமை என்று இவ்வாறு பலவற்றையும் கண்டுபிடித்துக் கூறி உலகை உசுப்பியது இவரது அறிவியல் சாதனை. இவரது பங்களிப்பின் முக்கியத்துவம் கருதி, இந்த இதழில் மிக விரிவான நேர்காணலை வெளியிட்டிருக்கிறோம்.

தற்போது தென்றலை அடிப்படையாக வைத்து தமிழ் ஆன்லைன் (www.tamilonline.com) தொடங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சென்று பாருங்கள். இலவசமாகப் பதிவு செய்துகொண்டால் தென்றல் இதழையும் வளைதளத்திலேயே புரட்டிப் பார்க்கலாம்! ஒவ்வொரு மாதமும் 12 ஆம் தேதிக்கு மேல் தென்றல் முழுமையாகப் பார்க்கக் கிடைக்கும். உலகெங்கிலுமிருந்து தமிழர்கள் வந்து பதிவு செய்துகொள்வது எமக்கு மிக உற்சாகத்தைத் தருகிறது.

தென்கலி·போர்னியாவில் வாழும் தமிழர்களின் சங்கமமாக 'தென்கலி·போர்னியத் தமிழ் மன்றம்' தொடங்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்கிறோம். தென்றல் குடும்பத்துக்கு அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தென்றல் ஆசிரியர் குழுவில் சேரும் திரு. அரவிந்த் சுவாமிநாதனை வரவேற்கிறோம்.

தென்றல் வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.ஏப்ரல் 2007

© TamilOnline.com