போஜராஜன் ரசனை
பெ.நா. அப்புஸ்வாமி தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை வழங்கியவர். அவரது 'தேன் துளி' என்ற நூலில் நான் ரசித்த பகுதியை இங்கே தருகிறேன்.

மன்னன் போஜராஜன் சிறந்த கவிஞர். கொடையாளி. இலக்கிய ரசிகர். கவிஞர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் கவிதையையும், கவிஞர்களையும் கௌரவப்படுத்துவது போஜராஜனின் சிறப்பு. ஒரு தடவை தன்னுடைய சபைக்கு வந்த ஒரு முதிய பார்ப்பனரையும் அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியவர்களைப் பார்த்து "எடுத்த கருமத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது வல்லவர்களுக்கு; துணைக் கருவிகளைப் பொறுத்ததன்று" என்னும் அடிகளை எடுத்துக் கொடுத்தான்.

அதற்கு பார்ப்பனர் கூறிய கவிதையின் கருத்து: "பிறப்பிடமோ மண்குடம்; சுற்றத்தாரோ காட்டு விலங்குகள். ஆடையோ மரவுரி. வாழ்க்கையோ காட்டினில். ஊனோ கேவாம் கிழங்கு முதலியன. ஆயினும் அகத்தியர் என்பவர் நீர் நிறைந்த கடல் முழுவதையும் தாமரையை ஒத்த தம் அங்கையின் சிறு குழிவினில் அடக்கினார். அதனால் எடுத்த கருமத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது, வல்லவர்களுக்கு; துணைக் கருவிகளைப் பொறுத்ததன்று." இக்கவிதைகளுக்காக பதினாறு விலையுயர்ந்த ரத்தினங்களை போஜராஜன் அளித்தான்.

அதன் பின்னர் பார்ப்பனரின் மனைவி கூறிய கவிதையின் கருத்து: "ஏறிய தேருக்கு உருளை ஒன்றே. அதை இழுக்கும் குதிரைகளோ ஏழு. அவற்றின் கடிவாளங்கள் யாவும் சீறும் பாம்புகள். செல்லும் வழியோ பிடிப்பற்றது. தேர்ப்பாகனோ கால் முடமான நொண்டி. ஆயினும் எல்லையற்ற வானவெளியின் மறுகரையை நாள்தோறும் தவறாது அடைந்து வருகிறான் சூரியதேவன். ஆதலால் எடுத்த கருமத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது, வல்லவர்களுக்கு; துணைக் கருவிகளைப் பொறுத்தன்று." பார்ப்பனர் பாடியதைக் காட்டிலும் அவர் மனைவி கூறிய கவிதையின் கருத்து சிறந்தது என்று போஜன் கருதியதால் பதினேழு யானைகளையும் ஏழு குதிரைகளையும் பரிசாக அளித்தான்.

பின்னர் பார்ப்பனரின் வாலிப மகனைப் பார்த்து, "நீரும் ஒரு கவிதை சொல்லும்" என்றான். வாலிபன் கூறிய பாடலின் கருத்து: "வென்று தீர வேண்டியதோ இலங்கைப் பெருந்தீவு. கால்நடையாய் நடந்து தீர வேண்டியதோ நீர்நிறை பெருங்கடல். எதிரியோ பிரம்மாவின் புத்திரன் ஆன புலஸ்தியனுடைய வம்சத்தில் தோன்றிய இராவணன். போர்க்களத்தில் படைத் துணைவரோ வெறும் குரங்குகள். தானோ தேர் முதலிய வாகனங்கள் இல்லாத வெறும் காலாள். சாக்காட்டுக்குட்பட்ட மனிதன் ஆயினும் இராமன் ஒருவனாக இராக்கத குலம் அனைத்தையும் கொன்று அழித்தான். ஆதலால் எடுத்த கருமத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது, வல்லவர்களுக்கு; துணைக் கருவிகளைப் பொறுத்தன்று." தாய் சொன்னதைக் காட்டிலும் மகன் சொன்னது சிறப்புற இருந்தமையால் அவனுக்குப் பதினெட்டு யானைகளைப் பரிசளித்தான்.

பிறகு தன்முன் நின்ற அழகு மிக்கவளாகவும் யௌவன பிராயத்தளாயும் விளங்கிய மருமகளையும் ஒரு செய்யுள் சொல்லும்படிக் கேட்டான் போஜ மன்னன். அவ்விளம் பெண் கூறிய கவிதையின் கருத்து: "தன்னுடைய வில்லோ பூவினால் செய்தது. அவ்வில்லின் நாணோ தேன் இயற்றும் வண்டுகளால் அமைந்தது. அதன் அம்போ இடைவிடாது சலித்துக்கொண்டே இருக்கும் பெண்களின் கடைவிழியின் கோணற் குறுநோக்கு. தன்னுடைய தோழனோ சிறிதும் உணர்ச்சி இல்லாதவனான, இதமற்ற பனிக்கதிர்களை வீசும் சந்திரன். தானோ ஒருவன். மேலும் உருவிலி. ஆயினும் உலகம் முழுவதையும் ஒரே கலக்காகக் கலக்கி வெற்றி கொள்கிறான் மன்மதன். ஆதலால் எடுத்த காரியத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது, வல்லவர்களுக்கு; துணைக் கருவிகளைப் பொறுத்ததன்று."

அதைக் கேட்ட அரசன், அவள் கூறிய பாட்டுக்கு எதுவுமே ஈடாகாது என்று சொல்லி அளவற்ற பொன்னையும் மணியையும் தன் மனைவி லீலாவதியின் அணிகளையும் பரிசாகக் கொடுத்து விட்டான்.

அஷ்டாவதானி ஸ்ரீ வேதாந்தாச்சாரியார் என்ற பெரியாரிடம், "எடுத்த கருமத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது வல்லவர்களுக்கு; துணைக்கருவியைப் பொறுத்ததன்று" என்ற அதே கருத்தைச் சொல்லி, பூர்த்தி செய்யும்படி சிறந்த வழக்கறிஞரும், நீதிபதியும், கொடையாளியுமான திரு வே. கிருஷ்ணசாமி ஐயர் கேட்டுக் கொண்டார். அதற்கு அஷ்டாவதானியார் அளித்த கவிதையின் சாரமாவது:

"ஊன்றிய தறிகள் இல்லை. நூற்றுக்கோத்த நூல்கள் இல்லை. முன் பின்னாக ஓடும் நூனாழி இல்லை. ஆயினும் கௌரவர்கள் சபை நடுவே பாஞ்சாலி அழுதரற்ற கணக்கில்லாத துகிலாடை அளித்தருளினான் கண்ணன். ஆதலால் எடுத்த காரியத்தை முடித்தல் திறமையைப் பொறுத்தது, வல்லவர்களுக்கு. துணைக் கருவிகளைப் பொறுத்தன்று."

இதைக் கேட்டதும் ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் மனமகிழ்ந்து, "போஜராஜனுடைய சபையிலே குறிப்பிட்ட செயல்களுள் ஒவ்வொன்றுக்கும் யாதானாயினும் ஒரு துணையோ, துணைக்கருவியோ இருந்தது. அவ்வகையான யாதொரு துணைக்கருவியும் இல்லாத ஒரு சிறந்த உதாரணத்தை நீங்கள் எடுத்துச் சொல்லியது மிகவும் நன்றாக இருக்கிறது" என்று அவரைப் பெரிதும் பாராட்டினார்.

சுபத்ரா பெருமாள்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com