பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது!
போன மாதத் தென்றல் இதழில் நான் ஒரு case-study (பெற்றோர்-இளவயதினர் நட்புறவைப் பற்றியது) எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். இந்த இதழில் அந்த விவரத்தை எழுதுகின்றேன். இதெல்லாம் 10-12 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிகழ்வுகள். ஆனால், உறவுகளின் பரிமாணங்கள் மட்டும் மாறவேயில்லை. பிரச்சனைகள் அதே, அதே.

ஒருமுறை விடுமுறைக்குப் போய்விட்டுத் திரும்பிய போது, இந்தியாவிலிருந்து 2, 3 முறை அந்த நம்பரை காலர்-ஐடியில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என்னுடைய நெருங்கிய தோழி. ஆனால் பார்த்து, பேசி பல வருடங்கள் ஆகிவிட்டன. வாழ்க்கை நம்மைச் செலுத்தும் வேகத்தில், எத்தனை உறவுகள் பின்தள்ளிப் போகின்றன என்று யோசித்தபடியே, அவளுடன் தொடர்பு கொண்டேன். ஆத்மார்த்த நட்புக்கு காலம் ஒரு கணக்கு இல்லை என்ற நினைப்பும் தோன்றியது.

"பீனாவுக்கு புத்தி பேதலித்து விட்டது" என்றாள். (பெயரை மாற்றியிருக்கிறேன்). பீனா என்று சொன்னது என் தோழியின் இரண்டாவது பெண். வயது 21. அந்த பீனா ஒருவனைக் காதலிக்கிறாள். அவர்கள் குலம், மொழி, ஜாதி எல்லாம் ஒன்றுதான். ஆனால் வயது 35; விவாகரத்து செய்தவன்; அவளுடைய கோச். என்ன செய்வதென்றே தெரியவில்லை. "இந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படி மூளை கெட்டுப்போய் விட்டது. காலேஜுக்கு சௌத் இண்டியா போய்ப் படிக்கிறேன் என்று ஆசைப்பட்டாள். பேசாமல் அனுப்பியிருக்க வேண்டும். சேகரின் கசின் இருந்தாள். நானும் முட்டாள்தனம் செய்துவிட்டேன். நானும், என் பெண்ணும் இப்போது பரம எதிரிகளாகி விட்டோம். அவளிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவனிடமும் போய்க் கெஞ்சினேன். 'உனக்கு வயதாகி விட்டது. டிவோர்ஸ் வேறு. குடும்ப நண்பன் என்ற உரிமையை ஏன் exploit செய்து என் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறாய்' என்றும் கேட்டேன். அவனுக்கு 'புஸ்புஸ்' என்று கோபம் வந்துவிட்டது. பீனாவிடம், 'உன் அம்மா என்னை வெறுக்கிறாள். நமக்குத் திருமணம் ஆனால், உன் அம்மா வரக்கூடாது' என்று கண்டிஷன் போட்டுவிட்டான். பீனா, என்னிடம், 'என் வாழ்க்கையை நீதான் பாழ் செய்கிறாய். என்னுடைய இஷ்டம். நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறேன். நீ ஏன் அவன் வயதை, வாழ்க்கையை குத்திக் காட்டினாய்? நீயும்தானே அப்பாவைக் காதலிச்சு, அவருடைய உறவுகளைப் பிரித்து விட்டாய். அதேபோல்தான் உனக்கும் ஆகிறது' என்று கோபத்தில் கத்துகிறாள். எனக்கு சேகருடனேயே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா? ஏன் இந்தக் குழந்தைகளுக்காக உயிரை வைத்துக் கொண்டிருந்தேன்" என்று அழுது, விவரம் முழுவதையும் சொல்லி முடித்தாள் என் தோழி.

எனக்கும் அவளுடைய மன உளைச்சல் புரிந்தது. அவள் சேகருடன் (பெயர் மாற்றம்) பழகிய காலத்திலிருந்து எனக்குத் தெரியும். வடக்கு-தெற்கு, பஞ்சாபி-தமிழ் என்று நிறைய வேற்றுமைகள் இருந்து இரண்டு குடும்பங்களும் எதிர்த்தாலும் கருத்து ஒற்றுமைகள் நிறைய இருந்ததால் அவர்கள் காதல், போராட்டங்களை மீறித் திருமணத்தில் முடிந்தது. இரண்டு பேரும் அருமையான நண்பர்கள். கார் விபத்தில் (பெரிய பெண்ணுக்கு வயது 17, பீனாவுக்கு 15) அடிபட்டு குடும்பமே பிழைத்தது. ஆனால் 6 மாதத்தில் திடீரென்று சேகர் போய்விட்டார், ஒரு சாதாரண காய்ச்சலில். அப்போது அவளுக்கு ஆதரவாக அடிக்கடி 'போன்' செய்வேன். இப்போதும் அதுபோல செய்யத் தொடங்கினேன்.

"பீனாவிடம் சிநேகிதியாக இரு. தாயாக இருக்காதே" என்ற கருத்தைத்தான் நான் வலியுறுத்தினேன். அவளுக்கு அது புரிபடவும் இல்லை; பிடிக்கவும் இல்லை என்றே நினைக்கிறேன். "என்ன ஃப்ரெண்ட்லியாக இருந்து என்ன பிரயோசனம்? அவள் வழிக்கு வரமாட்டேன் என்கிறாள். எனக்கு இதற்குமேல் எப்படி ஃப்ரெண்ட்ஷிப் வளர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை" என்று வருத்தப்பட்டாள். அப்புறம் Plan A, Plan B, Plan C என்று சில வழிமுறைகளைச் சொன்னேன். என்னை பீனாவிடம் பேசிப் பார்க்கச் சொன்னாள். அந்த இடத்தில் நான் தீர்க்கமாக மறுத்தேன். என் தலையீட்டால் அவளுக்கும், அவளுடைய பெண்ணிற்கும் தோழமை ஏன் வளராது என்றும் எடுத்துச் சொன்னேன். பிறகு நான் சொன்ன சில ஐடியாக்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. காரணம், பீனா கல்லூரி முடித்து மேற்படிப்புக்குத் தயார் செய்யும் நிலையில் இருந்தாள். (ஆனால் தன் காதலனைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராகக் காத்திருந்தாள்) அவன் வெளிநாட்டுக்கு ஒரு மாதப் பயிற்சிக்காகப் போக இருந்தான். இது மிகவும் சாதக நிலையாக எனக்குத் தோன்றியது. என் தோழியிடம், அவனுடைய வயது, மணவாழ்வு கூட முக்கியமில்லை. அவனுடைய நடத்தை, பழக்கவழக்கங்கள், கொள்கைகள் பற்றிக் கேட்டிருந்தேன். அவனுக்கு அடிக்கடி கோபம் வரும். அவன் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தை வரும்; மிகவும் ஆசையாக இருப்பான்; திடீரென்று அடித்துவிட்டுப் போய்விடுவான். எல்லாவற்றிலும் ஒரு வெறி. அதேசமயம் பார்ப்பதற்கு எந்தப் பெண்ணும் மயங்கும் அளவுக்கு மிக அழகாக அட்டகாசமாக இருப்பான். நிறையச் செலவு செய்வான். இதுபோன்ற வர்ணனை.

கொஞ்சம் எனக்கு அந்த முன்னுக்குப்பின் முரணான நடத்தை முறை (Inconsistent Behavior Pattern) கவலையைக் கொடுத்தது. பீனாவுக்குத் தகுந்தவன் இல்லையென்று தோன்றியது. ஆனால், நான் யார் அதை நிரூபிக்க. ஆகவே, என் சிநேகிதியிடம் சொன்னேன். "நீ உன் பெண்ணிடம் அவனைப் பற்றிப் பேசுவதை மட்டும் தவிர்த்து மீதி எல்லாவற்றிலும் அக்கறை காட்டு. வெளிநாட்டுப் படிப்புக்கு ஆசைப்பட்டால் அதற்கு வீட்டை விற்று, நிலத்தை விற்று அனுப்பத் தயாராக இருப்பதை எடுத்துச் சொல். திருமணம் என்ற பேச்சை எடுத்தால் அதற்கும் ஒத்துப் போவதாகச் சொல். அதற்கு உன்னுடைய கருத்தைக் கேட்டால்?!! அவளுக்கு 21 வயது ஆகி, அவள் வாழ்க்கைக்கு அவள் பொறுப்பேற்று, முடிவு எடுத்துச் செலவுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல். அவள் வழியில் விட்டால், அவளே அவனுடைய குணத்தைப் பார்த்து, தன் முடிவை மாற்றிக் கொள்வாள். நீ எதிர்க்க எதிர்க்க அவனுடன்தான் உறவை முறுக்கிக் கொள்வாள். ஆகவே நீ எதிர்க்காதே. அவளுடைய சிந்திக்கும் சக்தியைத் தூண்டிவிடு. அவளுடைய பொறுப்பை அவளே ஏற்கும் வழியைக் காட்டிக் கொடு. என்னுடைய கணிப்பில் நிச்சயம் இந்தத் திருமணம் நடக்காது என்றுதான் தோன்றுகிறது" என்றேன்.

ஆனால், அவன் வெளிநாடு போவதற்குள் இவளைத் திருமணம் செய்துகொண்டு ஹனிமூனுக்கு அழைத்துச் செல்லப் போவதாக ஆசை காட்டித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக என் தோழி பாவம் பதறிக் கொண்டு மீண்டும் என்னுடன் மீண்டும் ஒருநாள் தொடர்பு கொண்டாள். "பதட்டப்படாதே! இன்னும் அவகாசம் இருக்கிறது. அவன் செல்லும் நாட்டுக்கு உடனே விசா கிடைப்பது கஷ்டம். அதை மட்டும் பதவிசாக பீனாவிடம் சொல்லி வை. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும், அவனை இழிவாகவோ, அவனிடம் நம்பிக்கை இல்லாதவள் போலவோ பேசாதே! மாறாக அவளது சுயமுடிவில் நீ வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றியே ஆதரவாகப் பேசு. நிறையப் பேருக்குத் தெரியாது-சுதந்திரம் எவ்வளவு கனம் என்று" என்று சொன்னேன். அவள் அழகாக அந்த உத்திகளைப் பிரயோகப்படுத்தினாள்.

ஒருநாள் பீனா தாயின் மடியில் வந்து அழுதாள். அவன் ஏதோ கோபத்தில் வார்த்தைகளால் கடித்துக் குதறினானாம். "நான் அவனைப் பண்ணிக் கொள்ள மாட்டேன், done with him" என்று சொன்னாளாம். "நான் முன்பே அடித்துச் சொன்னேனே கேட்டாயா?" என்று மட்டும் சொல்லாதே. அவளுடைய அந்த முடிவுக்கும் அவளே பொறுப்பு என்று சொல்லி ஆதரவாக, அவளுடைய வெளிநாட்டுப் படிப்புக்கு உடனே ஆராய்ச்சி செய்து அவளுக்கு உதவி செய் என்றேன்.

நான் சொல்லி விடுகிறேனே தவிர, அந்தத் தாய்தான் தன் முழு முயற்சியுடன் தன்னுடைய தாயின் பதவியிலிருந்து விலகும் நேரத்தில் விலகி, தோழியாக இருந்து, எப்படியோ அந்த உறவைச் சீர்படுத்தி விட்டாள். பீனா வெளிநாட்டில் படிப்பை முடித்து, மீண்டும் இந்தியா சென்று தனக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து..... இப்போது அவளே இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

பெருமையாக இருக்கிறது, என் சிநேகிதியை நினைத்து.

வாழ்த்துக்கள்

டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com