பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 30, 2011 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டை சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் கொண்டாடியது. இயல், இசை, பட்டிமன்றம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்ட விழாவில் ஹவாய் சிவாய சுப்ரமணிய சுவாமி ஆலயத்தைச் சேர்ந்த சிவராம் ஈஸ்வரன் அவர்கள் தமிழ் கலாசாரத்தில் இந்து மதத்தின் மேன்மை என்பது குறித்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

கல்பகம் கவுசிக் அவர்களின் மாணவர்கள் பாடிய கடவுள் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் முதலில் கர ஆண்டை வரவேற்றுக் குழந்தைகள் சேர்ந்திசை வழங்கினார்கள். சங்கச் செயலர் திருமுடி, கௌரி, கார்த்திக், இட்ஸ்டிஃப் ஸ்ரீகாந்த் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தனர். தலைவர் ராகவேந்திரன் சங்கத்தின் நோக்கம், தமிழ்ப் புத்தாண்டின் சிறப்பு ஆகியவை குறித்துப் பேசினார். தொடர்ந்து பக்திப் பாடல், மெல்லிசைப் பாடல், கிராமியப் பாடல், கர்நாடக இசைப் பாடல் போன்றவற்றை இளம் கலைஞர்கள் வழங்கினர். வாத்திய இசை, வாய்ப்பாட்டுக் கச்சேரிகளைத் தொடர்ந்து பரத நாட்டிய நடனங்கள் அரங்கேறின. கிட்டத்தட்ட தீபா மஹாதேவன், கௌரி, நித்யவதி, அகிலா நந்தகுமார், மீனா சுரேஷ், லதா ஸ்ரீநிவாசன், ஜெயஸ்ரீ, சுந்தரி, மீனாட்சி, கமலா, சுபா, ஸ்ரீலதா, திருமதி சரவணன், ரம்யா, சஃபாரி கிட்ஸ் பள்ளி ஆகியோரின் இயக்கத்தில் பல்சுவை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன.

பின்னர் பிரபல நாடக இயக்குனரும் நடிகரும் பேச்சாளருமான மணிராம் அவர்கள் தலைமையில் 'இன்றைய நெருக்கடியான வாழ்வில் பின்பற்ற வேண்டியது சத்தியமே, சாமர்த்தியமே' என்ற தலைப்பில் ஒரு சுவாரசியமான பட்டிமன்றம் அரங்கேறியது. சத்தியமே என்ற தலைப்பில் ரேவதி, விஸ்வநாதன், பத்மநாபன் ஆகியோரும் சாமர்த்தியமே என்ற தலைப்பில் கனகா குருப்ரசாத், அந்தோணி தாஸ், காமாட்சி சுந்தரம் ஆகியோரும் விறுவிறுப்பான விவாதங்களை எடுத்து வைத்தனர்.

ஜூன்: அன்னதானம்

ஜுன் 17, 2011 அன்று 'அன்னபூர்ணா' என்ற உணவுக்கொடை நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. வீடில்லாதவர்களுக்கு உணவுப் பொருட்களை அளிக்க இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு உதவ விரும்புவோர் கீழ்க்கண்ட ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்:

அருட்செல்வன்: 916.316.6954
நித்யவதி: 510.687.1950

ஜூலை: நூல் வெளியீட்டு விழா

ஜூலை 3, 2011, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு Breaking India என்ற நூலின் வெளியீட்டு விழாவை பாரதி தமிழ்ச் சங்கம், HP Oakroom Conference Hall, Cupertino என்ற இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இன்ஃபினிடி பவுண்டேஷன் தலைவர் ராஜீவ் மல்ஹோத்ரா, ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் இந்தியாவின் தேசீய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்க முயலும் பல்வேறு சக்திகளை ஆதாரங்களுடன் அடையாளம் காண்பிக்கின்ற நூலாகும். நூலாசிரியர்களில் ஒருவரான ராஜீவ் மல்ஹோத்ரா புத்தகத்தை இவ்விழாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு: ராகவேந்திரன் - 785.979.5497

ராகவேந்திரன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com