தெரியுமா?: லட்சுமி சங்கர்
1988ம் ஆண்டிலேயே அட்லாண்டாவில் 'லட்சுமி தமிழ் பயிலும் மையம்' என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவியவர் லட்சுமி சங்கர். மிகச் சவாலானது என்று கருதப்படும் தென்றல் குறுக்கெழுத்துப் போட்டியில் பலமுறை 'புதிர் அரசி'யாக வந்துள்ள லட்சுமி சங்கர் 5ம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வி கற்று, பின்னர் தமிழை இரண்டாம் பாடமாகக் கொண்டு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்லூரிக் காலத்தில் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். புத்தகப் பித்தரான இவர் வருங்கால சந்ததியினர் பொன்னியின் செல்வன், பாரதியார் கவிதைகள் போன்ற அருமையான தமிழ் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற தொலைநோக்கில் இந்தப் பள்ளியைத் தொடங்கினார்.

தமிழ் நாடு மற்றும் சிங்கப்பூர் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும் இந்தப் பள்ளியில், 1999ம் ஆண்டிலிருந்து கணினியில் தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி அச்சடிக்கப்பட்ட தேர்வுகளும் வீட்டுப் பாடங்களும் மாணவர்களுக்குத் தரப்படுகின்றன. இன்னும் இரண்டே ஆண்டுகளில் வெள்ளி விழா காணப்போகும், இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு, ஆசிரியர்களின் அயராத உழைப்பும், ஒற்றுமையும், ஒரு தோழியாக நின்று தோள்கொடுக்கும் ஆசிரியர் ராஜி ராமச்சந்திரனின் பெரும்பங்கும்தான் காரணம் என்கிறார் லட்சுமி சங்கர். 10 ஆசிரியர்களையும் 57 மாணவர்களையும் கொண்டிருக்கும் இந்தப் பள்ளியில் தற்போது அமெரிக்கரும், பிற மொழி பேசும் இந்தியர்களும் கூட மாணவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா

© TamilOnline.com