ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஜனவரி 7, 2006 அன்று கலிஃபோர்னியா மாநிலப் பல்கலை ஹேவர்ட் அரங்கில் குரு இந்துமதி அவர்களின் சிஷ்யையும், நிருத்யோல்லாசா அகாடமியின் மாணவியுமான ரஞ்சனி சுகுமாரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது.

இறைவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, புஷ்பாஞ்சலி மற்றும் 'நாரதகான' என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடலுடன் களைகட்டத் தொடங்கியது.

ரஞ்சனியின் உழைப்பும், திறமையும் சுத்த சாவேரி ராக ஜதிஸ்வரத்திற்கு அவர் ஆடியதில் வெளிவந்தது. கமாஸ் ராக வர்ணத்தின் மூலம் அம்பாளின் பலவித அம்சங்களையும், ரூபங்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்தார். அடவுகள் அதற்கு மேலும் மெருகேற்றின. அவர் ஆடிய பதமோ ரசிகர்களின் ரசானுபாவத்தைத் தட்டி எழுப்பக் கூடியதாக அமைந்தது. ராமாயண நிகழ்ச்சிகளை நவரசத்தோடு அவர் வெளிப்படுத்திய விதம் நிகழ்ச்சிக்குச் சிகரம்.

காண்போர் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது அவர் ஆடிய பாகேஸ்வரி ராக மீரா பஜன். ஒருதேர்ந்த கலைஞரின் லாகவத்தோடு கண்ணனும், ராதையும் கோபியருடன் கூடி பிருந்தாவனத்தில் நடத்திய ராசலீலையை நம் முன் நிகழ்த்திக் காட்டியது அருமை. முத்தாய்ப்பாக அமைந்தது மிஸ்ர சிவரஞ்சனியில் அமைந்த தில்லானா.

ஆஷா ரமேஷ் (குரலிசை), குரு இந்துமதி கணேஷ் (நட்டுவாங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் நிகழ்ச்சிக்கு நல்ல பக்கபலம்.

லதா ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com