அக்சஸ் பிரெய்லி: காயத்ரி சத்யா கச்சேரி
ஏப்ரல் 23, 2011 அன்று மில்பிடாஸ் ஷீரடி சாயி திருக்கோவிலில் காயத்ரி சத்யா அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி நடந்தது. 'Access Braille' என்கிற லாப நோக்கற்ற தன்னார்வ நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக இந்தக் கச்சேரி நடத்தப்பட்டது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள கண்ணற்ற சிறார்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை எழுத, படிக்க உதவும் கருவிப் பெட்டிகளை அனுப்பித் தரவும், பள்ளிகளுக்குச் சென்று கற்க முடியாதவர்களுக்காக நடமாடும் பார்வையற்றோர் பள்ளிகளை நடத்தவும் 'அக்சஸ் பிரெய்லி' அமைப்பு நிதி திரட்டி உதவுகிறது.

இந்த முயற்சியில் பல இளம் தொண்டர்கள் பங்கேற்று உதவினார்கள். "அரங்கில் பொங்கிப் பரவிய இசையும், பாதிக்கப்பட்டோருக்கு உதவுகின்றோம் என்கிற உணர்வும் அவர்களில் நிரம்பிவிட்டன. முதலில் அவர்களை ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இத்தகைய செயல்பாட்டில் ஈடுபடுத்துவது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், சேவையின் சுவையை உணர்ந்துவிட்ட அவர்கள் மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்தத் துடிக்கிறார்கள்" என்கின்றனர் இதன் அமைப்பாளர்கள்.

கச்சேரிக்கு லக்ஷ்மி சுப்ரமண்யா வயலினும், ரவீந்திரபாரதி மிருதங்கமும் வாசித்து சிறப்பான பக்கபலமாக இருந்தனர்.

மேலும் தகவலுக்கு: Access Braille

யாமினி வெங்கடராமன்,
கூபர்டினோ, கலி.

© TamilOnline.com