சிகாகோ முத்தமிழ் விழா
ஏப்ரல் 23, 2011 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் முத்தமிழ் விழாவை லெமாண்ட் இந்துக் கோவில் கலையரங்கில் கொண்டாடியது.

தொடக்க நிகழ்ச்சியாக 'திருக்குறளின் சிறப்பும் தற்காலத் தமிழர் வாழ்வும்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார் முனைவர் பிரான்சிஸ் சவரிமுத்து. வினாயகரைப் போற்றிய கரகாட்டமும், முருகனைத் துதித்த குறத்தி நடனமும் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. நாட்டுப்புறப் பாடல்களுக்கான கிராமிய நடனங்கள் வெகு அழகாக இருந்தன. இந்தியத் திரையுலகின் கவனத்தை 8 வயதிலேயே ஈர்த்துவிட்ட ரோனி அகுராட்டி என்ற சிறுவனின் 'ரோபோ' இசைக்கான நடனம் புதுமையிலும் புதுமை.

'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'சிறுதுளி பெரு வெள்ளம்' ஆகிய, சிறுவர்கள் நடித்த குறுநாடகங்கள் கருத்துச் செறிந்தவையாக இருந்தன. கௌதமன், நீலன் சகோதரர்கள் சரளமான தமிழில் வழங்கிய ஸ்டேண்டப் காமெடி ஒரு சிரிப்புச் சரவெடி. சுஷ்மிதா சுரேஷின் 'மன்மத அம்பு' பாடல் மனதில் சுகமாகத் தைத்தது. சினிமாப் பாடல் ரீமிக்ஸ் நடனம் ஜனரஞ்சகமாக இருந்தது. 'கொலுசு', 'இனி ஒரு ராஜகுமாரன்' ஆகிய புதுக்கவிதைகள் கவிதை நேரத்துக்குச் சுவாரசியம் ஊட்டின.

அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு நிவாரண நிதி சேகரித்து வழங்கிய உறுப்பினர்களுக்கு சங்கத் தலைவர் டோனி சூ நன்றி தெரிவித்தார். விழாவின் நிறைவாக பிரதாப், ஆனந்த், பிரேமானந்த், வர்தீஷ் ஆகியோர் வழங்கிய 'பசஙக படும் பாடு' வில்லுப்பாட்டு ஒரு நகைச்சுவைக் கதம்பம்.

மொத்தத்தில் விழாக்குழுவின் பிரியா வர்தீஷ், ரவிக்குமார், சந்திரக்குமார் ஆகியோர் முத்தமிழையும் சரிவிகிதத்தில் கலந்து முக்கனிச் சுவையோடு தொகுத்து வழங்கினர் என்பதில் ஐயமில்லை.

ரமிதா சந்திரன்,
சிகாகோ

© TamilOnline.com