மே 2011: வாசகர் கடிதம்
கே.ஆர்.ஏ. நரசய்யாவின் பெரும் விசிறி நான். அறிஞர், எழுத்தாளர் என்ற அளவில் மட்டுமல்லாது, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஓர் ஆராய்ச்சியாளரின் அவா அவர் எழுத்துக்களில் தெரியும். இந்த நேர்காணலின் மிச்சத்தைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

அவருடைய ‘கடல்வழி வணிகம்' நூலை வாங்கிப் படித்தது மட்டுமல்லாது, இங்கே என் மாணவ மாணவிகளிடம் (மட்டுமல்லாமல், என்னிடம் மாட்டுபவர்கள் எல்லாரிடமும்!) தமிழின் பண்டைய பெருமை, தமிழர்களின் கடல்வழி வாணிகம்பற்றி அவர் நூலைக் காட்டி ஆதாரங்களோடு பேசவும் பயன்படுத்துகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வணக்கம்!

அஞ்சு
(ஆன்லைனில்)

*****


தேமதுரத் தமிழோசை
திக்கெல்லாம் ஒலிக்கட்டும்
தென்றலின் தழுவல்
திங்கள் தோறும் மலரட்டும்

நம் இந்தியாவின்
சுற்றுலாத் தலங்கள்
சுகமான அனுபவங்கள்
நினைவலைகளில் நீடிக்கட்டும்

புதிர்களின் மாயம்
முன்னோடிகளின் வரலாறு
முனைப்புடன் மிளிரட்டும்....!

புதினங்கள் தொடரட்டும்
பார்வைகளின் சிறப்பு
மாயாபஜாரின் நாவிற்கு ருசி
நிகழ்வுகளின் வெளிப்பாடுகள் என
நின் பணிகள் சிறக்கட்டும்...!

பாகீரதி,
சாண்டா க்ளாரா, கலி.

*****


தென்றல் ஏப்ரல் இதழில் வெளியான நரசய்யாவின் நேர்காணல் முதல் பகுதி படித்தவுடன் இரண்டாவது பகுதிக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்ற துயரம் கிளம்பி விட்டது! வாசகர் வட்டம் வெளியிட்ட நரசய்யாவின் 'கடலோடி' முதல் பதிப்பைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். ‘மதராஸ் என்ற பெயர்தான் முன்னாலேயே இருந்தது' என்ற செய்தி எப்படி உலகம் முழுதும் மதராஸ் என்றுதான் புகழ் பரவி இருந்தது என்பதற்குச் சான்று கூறுகிறது. இந்த அருமையான பெயரை 'சென்னை' என்று தமிழக அரசு மாற்றியதன் காரணம் என்னவோ? தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்து கேட்கப்பட்டதா?

அ. சந்திரசேகரன்,
மோர்கன்வில், கலி.

*****


தென்றல் ஏப்ரல் இதழில் டைரக்டர் கிருஷ்ணாவின் நேர்காணல் உருக்கமாக இருந்தது. சினிமா எடுப்பது எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. நாம் சுலபமாகப் படத்தைப் பற்றி ஒரு இரண்டு நிமிடங்களில் விமர்சனம் செய்கிறோம். ஒரு டைரக்டர் வாயிலாகக் கேட்டால்தான் அதிலுள்ள சிரமங்கள் புலப்படுகின்றன. இரவு பகல், வெயில் மழை என்று பாராமல் ஒரு படத்தை எடுத்தால்கூட அது மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் ஓடி லாபம் பெறமுடியும்.

தென்றல் நன்றாக நறுமணத்துடன் எப்போதும் வீசட்டும். இவ்வளவு நேர்த்தியாக அனைத்துச் செய்திகளையும் அழகாகத் தொடுத்து மாதாமாதம் ஒரு மாலையாக வாசகர்களுக்கு அளிக்கிறீர்கள். பாராட்டுகள்.

சரோஜா ராமபத்ரன்,
கூபெர்டினோ, கலி.

*****


அற்புதமான கட்டுரைகள், நுணுக்கமான மன உணர்வை வெளிப்படுத்தும் சிறுகதைகள், எழுத்துலக மேதைகளைப் பற்றிய அரிய தகவல்கள் என்று மிக அருமையான படைப்பாக இருக்கின்றன தென்றல் இதழ்கள். குறிப்பாக சோமலெ அவர்களைப் பற்றிய கட்டுரை மிகப் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவுக்குச் சென்றதும் அவரது படைப்புகளைப் படிக்க முடிவு செய்திருக்கிறேன்.

தென்றல் ஏப்ரல் இதழில் ‘அன்புள்ள சினேகிதியே' பகுதியில் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் எழுத்து, எங்களைப் போல் மத்திய வயதைக் கடந்து கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. கிட்டத்தட்ட 10 முறைக்குமேல், அதைத் திரும்பத் திரும்பப் படித்துவிட்டோம். மிகவும் ஆழமான விஷயத்தை, இத்தனை எளிமையாக, அன்பாகச் சொல்ல முடிந்திருக்கிறது. அவருக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

சீதாலக்ஷ்மி சுப்ரமணியம்,
சிமி வேல்லி, கலி.

*****


ஏப்ரல் தென்றலில் கடல்சார் பொறியியல் நிபுணர் நரசய்யா அவர்களின் நேர்காணல் மூலம் பல அரிய கருத்துக்களையும் வரலாற்று உண்மைகளையும் அறிய முடிந்தது. மறைந்த நடிகர், பாடகர் மலேசியா வாசுதேவனின் வாழ்க்கைக் குறிப்பு மூலம் அவர் எத்தனை போராடி முன்னிலைக்கு வந்தார் என்பதை உணரும்போது மனம் வருத்தத்தால் கனக்கின்றது. அவரது குரல் காலத்தால் அழியாதது.

சுபத்ரா பெருமாள்,
கூப்பர்டினோ

*****


தென்றல் ஏப்ரல் 2011 'தென்றல் பேசுகிறது' பகுதியில், நாட்டு நிகழ்வுகள் குறித்து, "சரியான நேரத்தில் சுட்டிக்காட்டத் தவறினால் பின்னாளில் இன்னும் அதிகமாகப் புலம்ப வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்ற வரிகள், தேசநலனில் அக்கறை உள்ள இந்தியர்கள் அனைவரது ஏகோபித்த எதிரொலியாக இருக்கிறது. 'காற்றில் கலந்த குரல்' கட்டுரை, தடைகள் பல தாண்டி முன்னுக்கு வந்த முன்னணிப் பாடகருக்கு அமெரிக்கத் தமிழர்கள் அனைவரின் மனப்பூர்வமான அஞ்சலியை நிறைவாகப் பதிவு செய்துள்ளது. "எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை. பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறைதான் இருக்கிறது. அதுபோதும் என்ற உயர்ந்த மனப்பான்மையோடு, தன்னிறைவோடு வாழந்த அவரது இசைப் பயணம்" என்ற வரிகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுபவை. அதுபோலவே 125 சிறுகதைகள், 10 நாவல்களை எழுதியுள்ள எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் பற்றிய அரவிந்த் கட்டுரை மனதை நெகிழ வைக்கிறது.

அரிய-அபூர்வ வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் சென்று, தமிழ்-தமிழர் பெருமைகளைப் பதிவுசெய்து வரும் கடல்சார் பொறியியல் வல்லுனர் நரசய்யா அவர்களுடனான நேர்காணல் அருமை. தென் சீனாவில் பான் ஷூ என்ற கோட்டையில் உள்ள 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் விமானம் வாங்கிய முதல் இந்தியர் - தமிழர் ஆவுடையப்பச் செட்டியார், இத்தகவலை உறுதிசெய்ய நரசய்யா மனம் தளராமல் பலரைச் சந்தித்து இறுதியில் அந்த விமானத்தை நேரில் பார்த்தும் புகைப்படம் எடுத்த செய்திகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. வற்றாயிருப்பு சுந்தரின் ‘பல்லைக் காட்டும் வயசு' கட்டுரையில், அமெரிக்காவாழ் சராசரித் தமிழரின் அனுபவத்தை இயல்பான நகைச்சுவையுடன் வழங்கியிருக்கிறார்.

சண்முகம் பெரியசாமி,
நியூயார்க்

*****


வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
வருகின்ற சம்பளத்தை
வெள்ளைக்காரப் பல் டாக்டருக்கு
வாரி வழங்கும்
பாரி வள்ளலே
வற்றாயிருப்பு சுந்தரரே
பல் கட்டும் வயதில் நாங்கள்
பல் காட்டிச் சிரித்தோம்.

ராஜன்,
பாஸ்டன்

© TamilOnline.com