வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்
ஏப்ரம் 9, 2006 அன்று மதியம் 3 மணிக்கு, ஃபுட் ஹில் காலேஜ் ஸ்மித்விக் அரங்கத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'சித்திரைக் கொண்டாட்டம்' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மையத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இதனைத் தமிழ் மன்றம் நடத்துகிறது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இந்திரா பார்த்தசாரதியின் 'ராமானுஜர்' நாடகமும் ராகலயா இசைக்குழுவினரின் திரையிசை நிகழ்ச்சியும் இடம்பெறும்.

ராகலயா இசைக்குழு, ராஜாமணி, ஸ்ரீதரன் மைனர், ஜெயஸ்ரீ சுந்தரேசன், ரங்கா கணபதி ஆகியவர்களால் உருவாக்கப்பட்டது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மகன் ஸ்ரீதரன் வைத்தியநாதன் இந்நிகழ்ச்சியில் கீபோர்ட் வாசிக்க டெட்ராய்ட்டிலிருந்து வருகிறார். "விறுவிறுப்பான பாடல்களுடன் அனைத்து வயது மக்களையும் ஆடிப்பாடி மகிழ்விப்போம்ஔ என்று உறுதி கூறுகின்றனர் ராகலயா குழுவினர்.

மகாகவி பாரதியின் 'பாஞ்சாலி சபதம்', 'அக்கினிக்குஞ்சு', 'எண்ணங்கள்' ஆகிய நாடகங்களை அரங்கேற்றியுள்ள பாரதி நாடக மன்றம் 'ராமானுஜர்' நாடகத்தையும் அமெரிக்காவில் அரங்கேற்றுகிறது. சாகித்திய அகாதமி மற்றும் சங்கீத நாடக அகாதமி விருதுகளைப் பெற்ற பேரா. இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதியது 'ராமானுஜர்'. சரித்திர நாயகர்களின் முக்கியத்துவத்தை உறுதிசெய்யும் துலாக்கோல் மனிதாபிமானம்தான் என்ற கண்ணோட்டத்தில் 11-ம் நூற்றாண்டுத் தமிழகத்தின் ஞானப் பெருமகன் ராமானுஜரை எடைபோடுகிறார் நாடகாசிரியர். சடங்கு நியதிகளுக்கும் ராமானுஜரின் புரட்சிக் கருத்துகளுக்குமான மோதலைச் சித்தரிக்கும் இந்த நாடகத்தை கலிஃபோர்னியா வாழ் தமிழர்களின் கண்ணோட்டத்தில் அரங்கேற்றுகிறது பாரதி நாடக மன்றம்.

பாகீரதி சேஷப்பன் மற்றும் ரூபன் துணையோடு மணி மணிவண்ணன் இயக்கும் இந்த நாடகத்தில் 'Its Diff' தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா, 'ஃபெர்மா' கிருஷ்ணன் ஆகியோருடன் பல தேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். சிறப்பு விருந்தினரான இந்திரா பார்த்தசாரதியின் முன்னிலையிலேயே மேடையேறப் போவது நாடகத்துக்கு மேலும் பெருமைசேர்க்கிறது.

நாடகத்திற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இ.பா. அளிக்கும் நாடகப் பட்டறை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் தமிழ் மன்றத்தைத் தொடர்பு கொள்ள: pro@bayareatamilmanram.org

நீங்கள் தரும் நிதி கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு மைய நிதிக்குப் போய்ச் சேரும்.

சித்திரைக் கொண்டாட்டம்
நாள்: April 9, 2006, ஞாயிறு
நேரம்: மாலை 3 மணிக்கு
இடம்: Smithwick Theater
Foothill College
12345, El Monte Road, Los Altos, CA 94022
நுழைவுக் கட்டணம்:
Platinum Circle: $50 [உறுப்பினர் தள்ளுபடி $10]
Gold Circle: $25 [உறுப்பினர் தள்ளுபடி $5]
Silver Circle: $15 [உறுப்பினர் தள்ளுபடி $2]

விவரங்களுக்கு:
தில்லை குமரன் - (408) 857.0181
மணி மணிவண்ணன் - (510) 796.2433
ராஜா மணி - (510) 396.1720
TS ராம் - (510) 406.0047

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com