கருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்
1960 வருடம் கண்டுபிடிக்கப் பட்டு, பரவலாக உபயோகத்தில் இருக்கும் கருத்தடை மாத்திரைகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம். இந்தியப் பெண்களிடத்தில் வேறுபட்ட பல கருத்துகளை இந்த மாத்திரைகள் தோற்றுவித்துள்ளன. சமுதாய ரீதியாக அல்லாமல், மருத்துவ ரீதியாக இங்கு அலசலாம்.

மாதவிடாய்
பெண்ணின் உடலில் மாதாமாதம் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. 28 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த வட்டத்தில் Estrogen, Progesterone அளவுகள் மாறுபடுவதால் சினைப்பையில் (ovary) இருந்து கருமுட்டை சுமார் பதிநான்காவது நாளன்று வெளிவரும். இந்த முட்டை கருவாக மாறாத பட்சத்தில் ரத்ததில்
நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கும் இயக்குநீர்களின் (ஹார்மோன்) அளவு குறைவதால் மாதவிடாய் ஏற்படும்.

கருத்தடை மாத்திரை எப்படிச் செயல்படும்?
இந்த ரசாயன மாற்றங்களைச் செயற்கையாகச் சற்றே மாற்றி அமைப்பதே இந்த கருத்தடை மாத்திரைகளின் வேலை. ரத்தத்தில் ஹார்மோன்களின் அளவு சரியாக இருக்கும்போது முட்டை உருவாகாமல் தடுக்கப்படுகிறது. இதன்மூலம் கரு உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது. உயிர்க்கொலை ஏதும் நிகழாமல் இயற்கை முறையைச் சற்றே மாற்றி அமைப்பதால் இந்தமுறை மிகவும் பரவலாக உபயோகத்தில் உள்ளது. மேலும் இந்த முறையில் 99 சதவிகித வெற்றி கிட்டுகிறது. எதிர்பாராமல் கருவுறுதல் மிகமிகக் குறைவு.

கருத்தடை மாத்திரையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை உட்கொள்ளக் கூடாது. மாதவிடாய் ஆரம்பித்த நாளை அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் இந்த மாத்திரை அட்டை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தவறாமல், கூடுமானவரை அதே நேரத்தில், எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டுவிட்டால் அடுத்த நாள் இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் தவறவிட்டால் அந்த மாதம் இந்த மாத்திரைகள் செயல்படாது. மாற்று முறைகளைக் கையாள வேண்டும். கருத்தடை மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. ஒவ்வொருவர் உடலின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர் சரியானதை வழங்குவார். பல வருடங்களாகப் புழக்கத்தில் இருப்பதால் தற்போது அளிக்கப்படும் மாத்திரைகளில் ஹார்மோன் அளவுகள் மிகக் குறைவாகவும், பின்விளைவுகள் குறைவாகவும் உள்ளன.

கருத்தடை மாத்திரை - நன்மைகள்
கரு உருவான பின்னர் அதைக் கலைக்கச் செய்யும் சிகிச்சை முறைகள் மிகவும் ஆபத்தானவை. மாத்திரைகள் மிக எளிதாக, 99 சதவிகிதம் கருத்தடை அளிப்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் ஒழுங்கற்று இருப்பவர்களுக்கு குறித்த வேளையில் மாதந்தோறும் சரியாக வருவதற்கு மூன்று மாதங்கள் இந்த மாத்திரை எடுத்துக் கொண்டால் போதும். இதன்மூலம் கருத்தரிக்காமல் தவிக்கும் பெண்டிருக்கும் மாத்திரைகள் நிறுத்திய பின்னர் கரு உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

சினைப்பையில் கட்டி இருப்பவர்களுக்கு இந்த மாத்திரைகள் மூலம் தீர்வு காண முடியும். (Polycystic Ovarian syndrome). இவர்கள் பெரும்பாலும் எடை கூடுதலாகவும், முகத்தில் ரோமம் அதிகமாகவும் ஏற்பட்டு, கர்ப்பம் தரிக்கச் சிரமப்படுவர். இவர்களுக்கு இந்தச் சிகிச்சை மூலம் கரு உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்டிருக்கும் இந்த மாத்திரைகள் ஒரு வரப்பிரசாதம். சீராக, குறைவான அளவில் ரத்தப்போக்கு ஏற்படும். முகப்பரு குறைவாக ஏற்படும். சினைப்பை மற்றும் கருப்பைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

கருத்தடை மாத்திரை - அபாயங்கள்
இந்த மாத்திரைகள் மூலம் சிலருக்கு உடலின் எடை கூடலாம். பல வருடங்களுக்கு மேல் இவற்றை உட்கொண்டால் மார்பகப் புற்று நோய்க்கான சாத்தியக் கூறு அதிகரிக்கலாம். ஆனால் மாத்திரையை நிறுத்திப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த சாத்தியக்கூறு சரியாகிவிடும். தவிர, கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்று நோயும் (Cervical cancer) கல்லீரல் புற்று நோயும் (Liver hepatoma)சற்றே அதிகரிக்கலாம்.

புகை பிடிப்போருக்கும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ரத்தம் கட்டுதல் மற்றும் ரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்ற உபாதைகள் ஏற்படலாம். மாத்திரையை நிறுத்திய பின்னர் உடனடியாகப் பெரும்பாலோனோர் கர்ப்பம் தரிக்கக்கூடும் என்றாலும் ஒரு சிலருக்கு மாதவிடாய் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குத் தள்ளிப் போகலாம். அடிக்கடி மாத்திரைகளை மாற்றிக்கொண்டே இருந்தால் சிறு அளவில் அவ்வப்போது ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும் மாதாமாதம் எடுத்துக் கொள்ளாமல் விட்டு, விட்டு எடுத்துக் கொள்பவர்களுக்குக் கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இனச்சேர்க்கை மூலம் ஏற்படும் நுண்ணுயிர்க் கிருமித் தொற்றுகளை இந்த மாத்திரைகள் தடுக்காது. இருந்தபோதும், சரியான காரணத்துக்காக, ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மகப்பேற்றைத் தள்ளிப்போட இந்த மாத்திரைகள் பெரிதும் உபயோகமாய் உள்ளன. தகுந்த மாத்திரைகளை தக்க காலத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது. 17 முதல் 35 வயதுவரை உள்ளவர்களுக்கு மேற்கூறிய அபாயங்கள் மிகவும் குறைவு. வயது அதிகமானோர் வேறு முறைகளைக் கையாள்வது சிறப்பு.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com