சாரநாதன்
டெக்ஸஸ்-ஹூஸ்டனில் 25 ஆண்டுகளாகத் தரமான தமிழ் நாடகங்களைத் தனது மீனாட்சி தியேட்டர்ஸ் நாடகக் குழுவின் மூலம் வழங்கி வரும் டாக்டர். சாரநாதனை 'தென்றல்' சார்பாக அவர் இல்லத்தில் சந்தித்தோம். சாரநாதன் ஒரு

பிரபலமான இதயசிகிச்சை நிபுணர். கொஞ்சம் பூர்ணம் விஸ்வநாதன், வியட்நாம் வீடு சிவாஜி, எங்கோ மனதில் நிழலாடும் வாஞ்சையான தூரத்து சொந்தக்கார மாமா எல்லாம் சரிவிகிதமாகக் குலுக்கி எடுத்த உருவம். அறுபது வயது

தாண்டினாலும், முகத்தில் அடுத்த நாள் கல்லூரிக்குச் செல்லவிருக்கும் மாணவனின் ஆர்வம். ஆஸ்டின் 'கலாலயா' வழங்கிய 'கலா பிரம்மம்' பட்டத்தை முதல் நாள் பெற்றுத் திரும்பிய களைப்பு இருந்தாலும், உற்சாகமாகப் பேசுகிறார்.

இதோ, அதிலிருந்து.....

கே: தமிழ் நாடக உலகில் வெள்ளி விழாக் கண்ட மீனாட்சி தியேட்டர்ஸாருக்கும், அதை நிறுவிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். நாடக உலகம் உங்களை ஈர்க்கக் காரணம் என்ன?
ப: நாடகம் மற்றும் நடிப்பின் மீதான ஈர்ப்பு என்னோடு ஒட்டிப் பிறந்தது. இதை இறைவனின் கொடையாகவே உணர்கிறேன். என் நாடக ஆர்வத்தைத் தூண்டி என்னை ஊக்கப்படுத்தியவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள் சரோஜா மற்றும் நாராயண சாமி

ஐயர். 1954ல், புரசைவாக்கம் எம்சிடி பள்ளியில் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டு விழாவுக்கு ஒரு நாடகம் போட்டார்கள். நான் அதில் சிறப்பாக நடித்ததற்குப் பாராட்டுப் பெற்றேன். அதுதான் என் முதல் மேடை நாடக

அனுபவம்.

கே: எந்த வேடம் ஏற்றீர்கள்? அப்போது என்ன வயது இருக்கும்?
ப: எட்டு வயது இருக்கும். ஈழத்துப் புலவன் வேடம். கடினமான தமிழில் நிறைய வசனங்கள். நல்ல உச்சரிப்பும், முக பாவமும் காட்டிச் சிறப்பாக நடித்ததற்கு என் ஆசிரியை சரோஜா என்னை மிகவும் பாராட்டினார். "நீ வருங்காலத்தில்

சிறந்த நடிகனாக வருவாய்" என்று அவர் வாழ்த்தியது இன்னும் என் நினைவில் நீங்காது நிற்கிறது. தொடர்ந்து பள்ளி நாடகங்களில் நடித்து, நிறையப் பரிசுகள் வாங்கினேன். என் குடும்பம் புரசைவாக்கத்திலிருந்து தியாகராய நகருக்குக்

குடிபெயர்ந்த போது, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு என் ஆசிரியர் திரு. நாராயணசாமி ஐயர் என்னை உற்சாகப்படுத்தி பள்ளி நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அந்த நாட்களில் சென்னையில் கே. பாலசந்தர், ஒய்.ஜி. பார்த்தசாரதி, சோ போன்றோர் தரமான நாடகங்கள் நடத்தினர். நேரம் கிடைத்தபோது நாடகங்களை பார்ப்பேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இசையமைப்பாளர் வி. குமார்,

பாலசந்தர் குழுவுக்கு இசையமைப்பாளராக இருந்தார். அவருக்கு என்மீது இருந்த தனி பிரியம் காரணமாக, பாலசந்தரின் நாடகங்களுக்கு என்னை கூட்டிச் செல்வார். நீர்க்குமிழி, நவக்கிரகம் போன்ற நல்ல நாடகங்களைப் பலமுறை பார்த்து என்

நாடக ஆர்வம் வளர்ந்தது.

கே: இவ்வளவு நாடக ஆர்வம் மிகுந்த நீங்கள் ஒரு தொழில்முறை நடிகராக மாறாததற்கு என்ன காரணம்?
ப: என் படிப்பும், குடும்பச் சூழலும் பெரும் காரணம். என் நாடக ஆர்வத்தை என் பெற்றோர் தடுக்கவில்லை. ஆனால் படிப்புதான் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தனர். அவர்கள் விருப்பப்படி ஸ்டான்லி மருத்துவக்

கல்லூரியில் மருத்துவம் பயில ஆரம்பித்தேன். என் நாடகக் கனவுகளுக்குத் தற்காலிக ஓய்வு அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

கே: மீண்டும் எப்போது உங்கள் நாடகக் கனவுகள் உயிர் பெற்றன?
ப: மருத்துவப் படிப்பு முடித்து, அமெரிக்காவில் பல இடங்களில் பணிபுரிந்தபின், 1982ல் ஹூஸ்டனில் தொழில் புரிய ஆரம்பித்தேன். அப்போது இங்கே நாடகக் குழு நடத்தி வந்த திரு. அனந்தாவின் அறிமுகம் கிடைத்தது. என் நாடக

ஆர்வத்தைக் கண்டு, என்னை வீட்டுக்கு அழைத்து, தன் அடுத்த நாடகத்தின் ஸ்கிரிப்டைக் கொடுத்து, வசனம் பேசச் சொன்னார். 'பெருமாளே சாட்சி' என்ற அந்த நாடகத்தில் அனந்தாச்சாரி என்ற கதாபாத்திரம் எனக்கு அளித்தார். நான் வசனம்

சொன்ன விதம் அவரை ஈர்த்தது. எனக்கு அவரது நாடகங்களில் முக்கியப் பாத்திரங்கள் தந்து உற்சாகப் படுத்தினார். 1983ல் என்னுடைய நாடகக் கனவுகளுக்குப் புத்துயிர் தந்த பெருமை அனந்தாவைத்தான் சேரும்.

கே: மீனாட்சி தியேட்டர்ஸ் என்ற சொந்தக் குழுவை ஆரம்பிக்கவும், நாடகங்களை இயக்கவும் தூண்டியது எது?
ப: எந்த நல்ல கலைஞனுக்கும் இந்த எண்ணம் ஏற்படும் என்று நினைக்கிறேன். என் முழுப் பங்களிப்பைத் தர நாடகங்களை நானே இயக்குவதுதான் சிறந்த வழி என்று நினைத்தேன். ஹூஸ்டன் போன்ற பெருநகரத்தில் நல்ல வேளையாக,

இன்னொரு நாடகக் குழு நடத்துவது ஆரோக்கியமானதாக, மக்களுக்கு ஒரு வெரைட்டி கிடைக்கும் விதமாக அமைந்தது. 'பாரதி கலை மன்றம்' 1987ல் எங்கள் குழுவுக்கு நாடகம் நடத்த முதல் வாய்ப்பு அளித்தார்கள். அதிலிருந்து ஒவ்வொரு

ஆண்டும் அவர்கள் ஆதரவில் நல்ல நாடகங்களை வழங்கி வருகிறோம். மற்றபடி தளராத ஊக்கத்தைத் தருவது நிச்சயமாக, மக்களின் பாராட்டும், கை தட்டல்களும் தான்.

கே: உங்கள் நாடகம் எதைப் பேசுகிறது – செய்திகள், அடிப்படை உண்மைகள், பொழுதுபோக்கு?
ப: நல்ல கதை நாடகத்தின் பாதி வெற்றிக்கு அடிப்படை. அந்த விதத்தில் தரமான கதையம்சம், நல்ல message, இத்தோடு யார் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை, திணிக்கப்படாத உணர்ச்சி மயமான காட்சிகள். இவற்றைக் கொண்ட

மேடை நாடகங்கள்தான் நான் தர விரும்புவது. அடிப்படையில் இரண்டு மணி நேரம் நமக்காகச் செலவு செய்யும் மக்கள் "entertaining & enlightening" என்ற உணர்வோடு செல்லவேண்டும். கோமல் சுவாமி நாதன், மெரினா,

சோ, க்ரேஸி மோகன் போன்றோரின் பிரபல நாடகங்களைப் போட்டு வந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களுடைய நாடகங்களைப் போட்டோம். இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்கள் நகைச்சுவையோடு சொன்ன

விதம் மக்களைக் கவர்ந்தது. தொடர்ந்து இது போன்ற நாடகங்களை உங்களைப் போன்ற உள்ளூர் எழுத்தாளர்களைக் கொண்டு வெளியிட முனைந்திருக்கிறேன்.

கே: ஒரு தமிழ் நாடகக் குழுவை அமெரிக்கா போன்ற தேசத்தில் நடத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
ப: ஒரு பெரிய புத்தகமே எழுதலாம் (சிரிக்கிறார்). முக்கியமான சிக்கல்களை மட்டும் சொல்கிறேன். ஆனால் இவற்றை ஒரு சவாலாக நினைத்து சமாளித்து வருகிறேன். முதல் சிக்கல், நல்ல ஸ்க்ரிப்ட் கிடைப்பது. சமீபகாலம் வரை நல்ல

நாடக ஆசிரியர்கள் இங்கு இல்லை. இந்தியாவிலிருந்து நாடகங்கள் வரவழைக்க வேண்டும். அதற்கு நிறைய கவனித்து படிக்க வேண்டும். இருபது ஸ்க்ரிப்ட் படித்தால் ஒன்று தேறும். நல்ல நாடகமாயிருந்தாலும் இந்த ஊர் மக்களுக்கு புரியக்

கூடிய விஷயமாக இருக்க வேண்டும். உதாரணமாக 'தனிக்குடித்தனம்' நல்ல நாடகம். அந்த நாடகத்தின் பின்னணி இந்தத் தலைமுறை மக்களுக்குப் புரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் மீனாட்சி தியேட்டர்ஸுக்கு நாடகங்கள் எழுதித்

தருவதால் இந்த சிக்கல் இப்போது இல்லை.

இரண்டாவது சிக்கல், நடிக்க ஆள் கிடைப்பது. ஆர்வமிருந்தாலும், அவரவருக்கு தொழில், குடும்பப் பொறுப்புகள் இருப்பதால் ஆக மூன்று மாதம் ஒத்திகைக்கு வருவது, நடிப்பது எல்லாம் சிக்கல். அதிலும் பெண் கலைஞர்கள் அப்படிக்

கிடைப்பது இன்னும் கடினம். இதிலும் என் குழுவில் எல்லாக் கலைஞர்களும் ஆர்வமாக இருப்பது பெரிய வரப்பிரசாதம். என்னால் நாடகங்கள் போடமுடிந்ததற்குப் பெரும் காரணம் என் மனைவி நிர்மலாவின் ஒத்துழைப்பும், புரிந்துணர்வும் தான்.

மூன்றாவது சிக்கல், பணம். இங்கு மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று முறை ஒரே நாடகத்தை மேடையேற்றலாம். மேடை அமைப்பு, காட்சிப் பொருட்கள் எல்லாம் சிறப்பாகச் செய்ய ஆசைதான். ஆனால் ஒருமுறை நாடக அரங்கேற்றத்துக்கு

ஒரு பட்ஜெட்டுக்குள்தான் செய்ய வேண்டியிருக்கிறது.

கே: மேடையில் பல சுவையான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். எங்களுக்காக ஒரு சம்பவம்...?
ப: சட்டென்று ஞாபகம் வருவது பத்து வருஷம் முன்பு நடந்தது. ஒரு புதிய நடிகர் எங்கள் குழுவில் வந்து சேர்ந்தார். ரொம்ப ஆர்வக் கோளாறு உடையவர். மூன்றாவது காட்சியில் உணர்ச்சிகரமாக அழுது நடிக்க வேண்டும். இவர் இரண்டாவது

காட்சியில் ஸ்க்ரீனைத் தூக்கியதும் மேடையில்போய் அழ ஆரம்பித்து விட்டார். கூப்பிட்டாலும் காதில் வாங்கவில்லை. உடனே இன்னொரு நடிகரை மேடைக்கு அனுப்பி சமாளித்து, இவரை இழுத்து வந்தோம். ஜனங்களுக்கு புரிந்துவிட்டது.

சமயோசிதமாகக் கையாண்டதை ரசித்து கை தட்டினார்கள்.

கே: நாடகம் தரமானதாக அமைய நீங்கள் பின்பற்றும் வழிகள் என்ன?
ப: நல்ல கதை, வசனம். அதை அடுத்து தீவிர ஒத்திகை. என் நாடகங்களுக்கு குறைந்த பட்சம் 60 மணி நேரமாவது ஒத்திகை இருக்கும். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, வசன உச்சரிப்பு, body

language சொல்லித்தருவேன். மேடையமைப்பு, இசை, ஓளியமைப்பு எல்லாம் முன்கூட்டியே தீர்மானித்து முன்னேற்பாடுகள் செய்துவிடுவோம். குறைந்தது மூன்று மாத உழைப்பு தேவை. எல்லோருக்கும் அர்ப்பணிப்பு இருந்தால் நாடகம்

நன்றாக அமையும்.

கே: ஆரம்ப காலத்திலிருந்தே தமிழர் ஒன்றுசேரும் இடமாகச் சினிமா அரங்கு இருந்து வந்துள்ளது. இப்போது இந்த நிலை மாறி கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா போன்றவற்றில் ஒன்று கூடுகிறார்கள். தமிழ் நாடகமும் இதில் முக்கிய அங்கம்

வகிக்கிறது. இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள், உங்கள் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் சொல்லுங்கள்.

ப: மக்கள் கலையை எந்த விதத்தில் நல்லபடியாக வழங்கினாலும் ரசிக்கிறார்கள். அது சினிமாவாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அதை நான் நாடக வடிவில் தருகிறேன். வேறு சிலர் வேறு வடிவங்களில் தருகிறார்கள்.

இதில் பிரச்சனை, தொடர்ந்து ஊக்கத்தோடு மக்கள் ரசனைக்கேற்ப வழங்குவது. பலருடைய ஆதரவாலும், என் ஆர்வத்தாலும் நான் தாக்குப் பிடித்திருக்கிறேன். சிலரால் அது முடிவதில்லை. இன்னும் பலர் இந்த நாடகக் கலையை நாட

வேண்டுமென்றால், முதலில் நல்ல sponsors வேண்டும். தமிழ் நாடு அறக்கட்டளை போன்ற அமைப்பினர் வெளிநாட்டிலிருந்து நிறையச் செலவு செய்து கலைஞர்களை அழைத்து வந்து நாடகம் தருகிறார்கள். அதை வரவேற்கிறேன். ஆனால்

அதில் பாதி செலவில் அவ்வப்போது உள்ளூர் குழுக்களையும் நாடகம் நடத்த ஊக்குவித்தால் நன்றாக இருக்கும். கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனையைப் போல, ஏதோ ஒரு பெரிய நகரத்தில் பல குழுக்களை அழைத்து நாடக விழா ஆண்டுதோறும்

நடத்தினால் நன்றாக இருக்கும். சிறந்த நாடகங்களுக்குப் பரிசுகளும் தரலாம்.

கே: ரமணி, தீபா ராமானுஜம் ஆகியோரோடு கைகோத்து அமெரிக்க நாடக விழா நீங்கள் ஏற்படுத்தினீர்கள் இல்லையா? தமிழ் நாடகங்களைக் பரவலாகக் கொண்டு செல்ல இது எந்த அளவுக்கு உதவியுள்ளது?
ப: அது ரமணியின் ஐடியா. தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிறப்பாக நடத்தினோம். நியூ ஜெர்ஸியிலும், ஹூஸ்டனிலும். மக்கள் வெகுவாக வரவேற்றார்கள். மற்ற அமெரிக்கத் தமிழ் நாடகக் குழுக்களின் திறமையை வெளிப்படுத்தவும்,

வெவ்வேறு விதமான நாடகங்களை மக்கள் ஒரே இடத்தில் கண்டு களிக்கவும் இந்த விழா உதவியது. நியூ ஜெர்ஸியில் எங்களுடைய 'தில்லு முல்லு' நல்ல வரவேற்பைப் பெற்றது. Sponsorship, co-ordination குறைந்ததால்

விழாவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. வருங்காலத்தில் தொடரும் என்று நம்புகிறேன்.

கே: தமிழ் மன்றங்களின் ஆதரவில் பல தமிழ் நாடகங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. ஆனால் இவற்றைப் பிற நகரங்களுக்குக் கொண்டு செல்வதில் தடையாக அமைவது என்ன?
ப: பயணச்செலவு ஒரு மிகப் பெரிய தடை. குழுவில் எல்லாரும் போகாவிட்டாலும், முக்கிய நடிகர்களை அழைத்துச் செல்ல வேண்டும். துணைப் பாத்திரங்களில் பெரும்பாலும் உள்ளூர் நடிகர்களை நடிக்க வைத்து விடுவோம். இருந்தாலும்,

ஒரு 5-6 பேராவது பயணம் செய்யப் பொருளுதவி தேவை. இதைத் தவிர்ப்பதற்காக, கூடியவரை பயணச் செலவு குறைவாக, பக்கத்து ஊர்களுக்குச் சென்று நாடகம் போடுகிறோம். இப்படி ஹூஸ்டனுக்கு அருகில் உள்ள ஆஸ்டின், டாலஸ்,

சான் அன்டோனியோ இங்கெல்லாம் சென்று வெற்றிகரமாக நாடகம் நடத்தியிருக்கிறோம். பிட்ஸ்பர்கில் வரதராஜன் அவர்களோடு இணைந்து தமிழ்நாடு ஃபவுண்டேஷன் ஆதரவில் 'மெகா சீரியல்' நாடகம் நடத்தினோம். அடுத்து, பெண்

கலைஞர்கள் எல்லாப் பொறுப்புகளையும் விட்டுவிட்டு 3-4 நாட்கள் வெளியூர் வர முடியாது.

கே: கதை சொல்லும் உத்தியிலும், மேடை நாடக அமைப்பிலும் நீங்கள் யாரை முன்னோடியாகக் கொண்டுள்ளீர்கள்?
ப: சரியோ தவறோ பெரும்பாலும் நானே முயற்சித்து என்னுடைய சொந்த பாணியை உருவாக்கியிருக்கிறேன். நல்ல நாடகக் குழுக்களிடமிருந்தும், அனுபவமிக்க திறமைசாலிகளிடமிருந்தும் நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில்

எனக்கு முன்னோடி என்றால் – டி.வி. வரதராஜனையும், காத்தாடி ராமமூர்த்தியையும் சொல்லலாம். இவர்களுடைய நாடகங்களில் நல்ல மெஸேஜ், நகைச்சுவையோடு, அனாவசிய ஸ்லாப்ஸ்டிக் இல்லாமல், யதார்த்தமாகச் சொல்லப்படும்.

இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

கே: தமிழ் நாட்டிலிருந்து க்ரேஸி மோகன், ஒய்.ஜி. மகேந்திரா, சோ, வரதராஜன் என்று பல பிரபலங்களின் குழுக்கள் இங்கே வருகின்றன. அவர்களிடமிருந்து நீங்கள் கற்றது என்ன?
ப: ஒவ்வொருவரும் அவரவர் வகையில் திறமை மிகுந்தவர்கள். இவர்களில் பலரோடு நாடகம் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. க்ரேஸி மோகன் நகைச்சுவையை திறம்படக் கையாள்வார். ஒரே கதையை வேறுவேறு விதமாக,

வித்தியாசமான டைமிங்கில் வழங்கி அலுக்காமல் மக்களைச் சிரிக்க வைப்பது ஆச்சரியமான விஷயம். ஒய்.ஜி.எம். நாடகங்கள் ஒரு பாணியிலோ, ஒரு தளத்திலோ அடைக்க முடியாது. திறமையான கதை, வசனம் கொண்டவை. சோ,

அவருக்கு இணை அவரே. அங்கதத்தில் (satire) மன்னன். அவர் கருத்தோடு ஒத்துப் போகாதவர் கூட பாராட்டி ரசிக்கும் திறமை.

கே: ஒரு மருத்துவர் என்ற முறையில் நீங்கள் பிஸியானவர். வருமானத்துக்கும் குறைவில்லை. அப்படியிருக்க நாடகத் துறையில் தரமான படைப்புகளைத் தர நீங்கள் மிகவும் உழைக்கிறீர்கள். எதனால்?
ப: மருத்துவம் என் profession. நாடகம் என்னுடைய passion. வருடம் முழுவதும் என் தொழிலை அக்கறையோடு செய்யவும், மற்ற சமூக நலப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவும், என் மூன்று மாத நாடகப் பணி என்ற

tonic எனக்குத் தேவைப்படுகிறது. நாடகத்தை நல்லபடியாக வழங்க என் குழுவினரோடு கூடி செய்யும் ஒவ்வொரு வேலையும் நான் விரும்பிச் செய்வது. அவ்வளவு பாடுபட்டதன் பலனும், மக்கள் நாடகத்தை ரசித்து ஒவ்வொரு காட்சியையும்

அனுபவித்துப் பாராட்டும்போது அப்போதே கிடைத்துவிடுகிறது. எந்தக் கலைஞனுக்கும் இந்த அங்கீகாரம் தேவை. அதுமட்டும் அல்லாமல், அமெரிக்கா போன்ற தேசத்தில் எனக்குப் பிடித்த நாடகக் கலையின் மூலம் நம் கலாசாரத்தை இந்தத்

தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கே: நாடகம் தவிர உங்களின் மற்ற ஆர்வம் என்ன?
ப: ஆன்மிகம், இசை இவை இரண்டும் என் மற்ற ஆர்வங்கள். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக என் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்லோக வகுப்புகள் நடத்தி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாகக் குடும்ப நண்பர்களோடு வாராவாரம் அரை

நாள் பிரபந்தம் சொல்லி வருகிறோம். இது தவிர, கர்நாடக சங்கீதம் எனக்கு மிகவும் பிடிக்கும். பத்து வருடங்களுக்கு முன் முறையாகச் சங்கீதம் கற்கத் தொடங்கி, இப்போது 120 கீர்த்தனைகள் வரை பாடும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளேன்.

இரண்டு ஆங்கில நாடகங்களும் நடித்துள்ளேன். குறுநாடகம் (skit) எழுதி நடிப்பதிலும் ஆர்வம் உண்டு.

கே: மீனாட்சி தியேட்டர்ஸின் எதிர்காலம் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா?
ப: நிறைய. என்னோடு மீனாட்சி தியேட்டர்ஸ் முடிந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். என் மகனுக்கும், மகளுக்கும் இந்தத் துறையில் அதிக ஆர்வமில்லை. ஆனால், என் குழுவில் திறமையும் ஆர்வமும் மிக்க அடுத்த தலைமுறை

நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்களை நாடகத்தை இயக்கும் பொறுப்பேற்க வைத்து, நான் நடிப்பதிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதிலும் கவனம் செலுத்த இருக்கிறேன். இது தவிர, குழந்தைகளை வைத்து முழுமையான தமிழ் நாடகம் இந்த ஊரில்

நடத்த ஆசைப்படுகிறேன்.

கே: அமெரிக்கத் தமிழ் நாடக முன்னோடிகளில் ஒருவர் என்ற வகையில் மேடை நாடக இளந்தலைமுறையினருக்குச் சொல்ல விரும்புவது என்ன?
ப: இளைய தலைமுறையினர் மிகுந்த திறமையுள்ளவர்கள். தங்கள் திறமைகளை நவீன ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இவர்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். இவர்களுக்கு என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்

என்றால், உங்கள் திறமைகளை உழைப்பு, பொறுமை, விடாமுயற்சியோடு சேர்த்துக் கொண்டால் நீண்ட காலம் இந்த துறையில் பங்களித்துச் சாதனை படைக்கலாம். Sacrifice செய்யும் மனப் பக்குவமும் வேண்டும். நான் முன்பு சொன்னது

போல என் நாடகத்துக்கு தயார் செய்யும் மூன்று மாதங்களும் ஒரு தவம்போல உணர்ந்து என் வார இறுதி நாட்களைத் தியாகம் செய்ததால்தான் 25 ஆண்டுகள் நாடகத்துறையில் நிலைத்திருக்க முடிந்தது. இதை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல

நாடகங்களைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு தாருங்கள்.

தனது வாழ்நாள் சாதனை நாடக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு 'தென்றல்' சார்பாக நன்றியும் வாழ்த்தும் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: சந்திரமௌலி

சந்திரமௌலி சென்னையில் பிறந்து, லயோலாவில் பட்டம் பெற்றபின் பின் 1991ல் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகவும், (CA), கம்பெனி செக்ரடரி (CS) மேல் படிப்பு பட்டங்கள் பெற்றவர். ஹூஸ்டன் நகரில் குடும்பத்தோடு வசித்து

வரும் இவர், ஹெவ்லட் பாக்கார்டு (HP) கம்பெனியில் நிர்வாக இயக்குனராகப் பணிபுரிகிறார். ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்சுக்காக '3 இடியட்ஸ்', 'சென்னை தாண்டி வருவாயா' ஆகிய இரண்டு முழுநீள நாடகங்களை எழுதியவர்.

எழுத்து தவிர ஓவியத்திலும் தேர்ச்சி பெற்றவர். 50க்கு மேற்பட்ட நாடுகளில் பயணம் செய்த இவர் மற்ற கலாசாரங்களை அறிவதில் ஆர்வமுள்ளவர். அத்தோடு இந்திய கலாசாரத்தைத் தனது எழுத்து, பேச்சு மூலம் மற்றவர்களுக்குக் கொண்டு

செல்வதில் அக்கறை கொண்டவர்.

பிடித்த பத்து
டைரக்டர் - என்றென்றும் கே. பாலசந்தர்
நடிகர் - சிவாஜி கணேசன், இப்போது கமல்ஹாசன்
நடித்ததில் பிடித்த பாத்திரங்கள் - ப்ரஸ்டீஜ் பத்மநாபன், மகாலிங்கம் (சம்சாரமா சன்யாசமா), பெரிய மனுஷன் (சாரியார்), பரமேஸ்வர ஐயர் (சென்னை தாண்டி வருவாயா)
திரைப்படம் - வீரபாண்டிய கட்டபொம்மன், காதலிக்க நேரமில்லை
நாடக நடிகர் - டி.வி. வரதராஜன்
எழுத்தாளர் - சுஜாதா, ஜெயகாந்தன்
புத்தகம் - கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்'
உணவு - தயிர் சாதம்
பாடல் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (போலீஸ்காரன் மகள்)
நபர் - நிர்மலா (மனைவி)

பெற்ற விருதுகள்
1994 - நடிக ரத்தினம் (பாரதி கலை மன்றம், ஹூஸ்டன்)
1995 - நாடக கலை மாமணி (தமிழ் சங்கம், ஆஸ்டின்)
1997 - நாடக தென்றல் (பாரதி கலை மன்றம், ஹூஸ்டன்) - 10 ஆண்டு நிறைவு
2011 - நாடக செம்மல் (பாரதி கலை மன்றம், ஹூஸ்டன்) - 25 ஆண்டு நிறைவு
2011 - கலா பிரம்மா (கலாலயா, ஆஸ்டின்) - 25 ஆண்டு நிறைவு

© TamilOnline.com