கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சை
கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. ஃபெப்ருவரி 27ம் தேதி நடந்த கல்வித்துறை மக்கள்மன்றக் கூட்டம் மிகப் பரபரப்பாக நடந்திருக்கிறது. சென்ற மாதக் கூட்டத்தைத் தவற விட்ட தீவிர இந்து மத அமைப்புகள், இந்த மாதக்கூட்டத்துக்கு நாடெங்கிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்களைத் திரட்டி வந்தார்கள். இவர்களில் மிகப் பெரும்பான்மையோர் ஹிந்து ஸ்வயம் ஸேவக் போன்ற இந்துத்துவக் குழுக்களைச் சார்ந்தவர்கள். முப்பது பேர் கொண்ட இந்துத்துவ எதிர்ப்பு அணியில் தலித் அமைப்புகள், பல்கலைக்கழகத் தெற்காசிய நிபுணர்கள், தமிழர்கள், தென்னாசியா நண்பர்கள் போன்ற அமைப்புகள் பங்கேற்றன.

தேசியப் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் முதல் உள்ளூர்ப் பத்திரிக்கையான மில்பிடஸ் போஸ்ட் வரை இந்தப் போராட்டத்தைக் கவனித்துச் செய்தி வெளியிட்டன. கலிஃபோர்னியா பாடநூல்களில் இந்துக்களைப் பற்றி இருக்கும் பாடங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தச் சர்ச்சையில் 5000 ஆண்டு மரபு கொண்ட நாகரீக மக்கள் என்று பெருமை கொள்ளும் இந்தியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் பல அமெரிக்கர்கள் நம்மை எடைபோடுவார்கள். ஏன், அடுத்த தலைமுறை இந்திய அமெரிக்கக் குழந்தைகளுக்கும் நம் மரபைக் கற்பிக்க இதுவல்லவோ ஒரு நல்ல வாய்ப்பு?

***


தம் கருத்தை எதிர்ப்பவர்களோடும் நாகரீகமாக வாதாடும் மரபு பண்டைய இந்தியாவில் இருந்திருக்கலாம். ஆனால், அதை நாம்தான் மறந்திருக்கிறோம். நம்மோடு இணங்காதவர்கள்மீது சேற்றை வாறியிறைத்துத் தூற்றுவதில் இந்திய அரசியல்வாதிகளுக்கு எந்த விதத்திலும் இந்திய அமெரிக்கர்கள் இளைத்தவர்கள் இல்லை. வலைத்தளங்களிலும், மடற்குழுக்களிலும் நடக்கும் அடிதடி சாக்ரமன்டோ விலும் தொடர்ந்திருக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குமூலம் கொடுக்கச் சென்ற ஒரு தமிழ்ப்பெண் "இந்தியாவிலிருக்கும் எந்த விதமான அருவருப்புகளிடமிருந்து தப்பித்தோம் என்று நினைத்தேனோ அவை எல்லாமே இங்கே என் முன் தலைவிரித்தாடின" என்று வருந்தினார். இந்தியாவில் ஜாதிப் பிரச்சினைகள் இல்லவே இல்லை, தீண்டாமைக் கொடுமை இல்லவே இல்லை என்று தன்னெஞ்சறியப் பொய் சொல்பவர்கள் யாரை ஏமாற்றமுடியும் என்று நினைக்கிறார்கள்?

தலித் ஒருவர் தானும் தன் குடும்பமும் ஊரார் மலக்கழிவுகளை அள்ளிப் பிழைக்கும் நிலைக்குத் தாழ்த்தப் பட்டிருந்ததைப் பற்றி வாக்குமூலம் தந்தபோது, தாங்கள் கூடத்தான் தங்கள் வீட்டுக் கழிவறையைச் சுத்தப் படுத்துகிறோம் என்று இந்துத்துவ அணியினர் ஏளனமாகப் பதிலளித்தனராம். "நீ அப்படித் தாழ்த்தப் பட்டிருந்தால், எப்படி உன்னால் அமெரிக்காவுக்கு வரமுடிந்தது?" என்று எகத்தாளமாகக் கேட்டாராம் இன்னொருவர்.

***


சிறுபான்மை இந்து அமெரிக்கர்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வலியுறுத்துபவர்கள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை உலகம் கவனிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் பேச்சுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள முரண்கள் நம்மைப் போலிகள் என்று பறைசாற்றுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தியாவில் தீண்டாமைக் கொடுமை, ஜாதிகள் பேதம், பெண்வதை ஆகியவை இருக்கின்றன என்று சொல்பவர்கள் எல்லாம் இந்துக்களின் எதிரிகள் அல்லர். பாடநூல்கள் பொய் சொன்னாலும், கூகிள் யுகத்தில் பொய்கள் எவ்வளவு நாள் நிலைக்கும்? இல்லவே இல்லை என்று சொல்வதால், தீண்டாமைக் கறை இந்து மதத்திலிருந்து ஒழிந்து விடாது. வர்ண பேதமும், தீண்டாமைக் கொடுமையும், புருஷ ஷுக்தத்திலிருந்து தோன்றியிருக்கலாம். மனுதர்ம சாஸ்திரத்தால் நிலை பெற்றிருக்கலாம். சமயத் தலைவர்கள், அரசர்கள் ஆதரவால் வழிவழியாகத் தொடர்ந்து வந்திருக்கலாம். ஆனால், இன்றும் இரட்டைக் குவளைக் கலாச்சாரத்தைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேருக்குப் புருஷ ஷுக்தம் தெரியும்? அவர்கள் எங்கே மனுதர்ம சாஸ்திரத்தைப் படித்தார்கள்?

***


இந்து மதம் மட்டும்தான் தன் சக மனிதனை விலங்குக்கும் கீழாய் நசுக்கும் மதம் என்ற மாயை முற்றிலும் தவறு. இனவெறியும் வேற்றினங்களை விலங்குகளாய்ப் பார்க்கும் மனப்பாங்கும் மேலைநாடுகளில் இன்னும் வேரூன்றியிருப்பதில் கிறித்தவ மதத்துக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழிக்க முடியுமா? அதே போல், இந்துக்களையும், கிறித்தவர்களையும், தாழ்த்தும் சட்டங்கள் முஸ்லிம் நாடுகளில் இன்றும் இருப்பதை மறுக்க முடியுமா?

இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்காவிலும் அண்மைக்காலம் வரை வெள்ளையரல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை இல்லை என்பது வரலாறு. எப்படி கிறித்தவ சமயத் தலைவர்கள் சிலர் இந்தக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினார்களோ அதே போல் சில இந்து சமயத் தலைவர்களும் போராடியிருக்கிறார்கள். ராமானுஜர் முதல் மகாத்மா காந்தி வரை இந்தச் சீர்திருத்தவாதிகள் ஆழ்ந்த இந்து சமய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவர்கள். இவர்களால் புருஷ ஷுக்தத்தையும், மனு சாஸ்திரத்தையும் மீற முடியும் என்றால், ஏன் மற்றவர்களால் முடியாது?

***


இந்தச் சர்ச்சையில் தரக்குறைவாக நடந்து கொண்டவர்கள் இந்துத்துவவாதிகள் மட்டுமல்லர். இந்துத்துவவாதிகளைத் திருப்பித் தாக்கும் முனைப்பில் இந்து அமெரிக்கர்களையும், இந்தியர்களையும் நக்கலடித்த அமெரிக்கப் பேராசிரியர்கள் சார்புடைமை அல்லாத நேர்மையான கல்விமான்கள் என்ற மதிப்பை இழந்து விட்டார்கள். இந்துத்துவ மனப்பான்மையைப் போலவே ஐரோப்பியக் காலனீய மனப்பான்மையும், கம்யூனிசச் சித்தாந்த மனப்பான்மையும், மேலை நாட்டு ஏகாதிபத்திய மனப்பான்மையும் நேர்மையற்றவை. சொல்லப்போனால், இந்துத்துவ மனப்பான்மைகூட ஏனைய ஏகாதிபத்திய மனப்பான்மைகளின் எதிரொலிதான்.

இத்தனை ஆண்டுகளாகக் கலிஃபோர்னியா பாடநூல்களில் இருந்த பிழைகள் அமெரிக்காவின் பெரும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை உறுத்தவில்லை. ஆனால், இந்துத்துவ அரசியல் மட்டுமே அவர்களை உறுத்தியிருக்கிறது. இதே இந்துத்துவவாதிகள் தங்கள் கொள்கைகளைப் பல்கலைக்கழகங்களுக்கு மான்யங்கள் கொடுத்துப் பரப்பியிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்களோ என்னவோ! நேரடியாகப் பள்ளிப் பாடநூல்களில் கை வைத்ததனால்தான் அவர்கள் கை சுட்டுக் கொண்டார்கள்.

***


பாடத்திட்டத்தில் தங்கள் கொள்கைகளைப் புகுத்துவதில் இந்துத்துவ அணிகள் தோற்றிருக்கலாம். ஆனால், கலிஃபோர்னியா பாடநூல்களில் நேர்மையில்லை என்பதை அவர்கள் தெளிவாகக் காட்டி விட்டார்கள். யூத, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களைப் பற்றிய சில பாடக் குறிப்புகளுக்கு வரலாற்று ஆதாரம் எதுவுமே இல்லை என்றாலும் அவை வரலாறாகச் சித்தரிக்கப் படுகின்றன. அவர்களுக்கு ஒரு நீதி, இந்து மதப் பாடங்களுக்கு வேறொரு நீதி என்ற குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள், கலிஃபோர்னியா பாடத்திட்டக் குழு பரிந்துரைக்கும் திருத்தப் பட்டியலிலேயே இருக்கின்றன. இந்த முரண்பாடுகள் இந்து அமெரிக்கர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதற்குச் சமம். இதற்குச் சரியான தீர்ப்பு இந்துக்களின் வரலாற்றை இருட்டடிப்பதல்ல, ஏனைய வரலாறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுதான்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com