தெரியுமா?: இளந்தமிழர் அணி
அமெரிக்காவின் பல நகரங்களில் உணவகங்கள், மளிகைக் கடைகள், தமிழ்ப் பள்ளிகள் போன்று தமிழர்கள் புழங்கும் இடங்களில் கையில் வாசகங்களுடன் நிற்கும் இளைஞர்களை கடந்த சில வாரங்களாகப் பார்த்திருப்பீர்கள். அமெரிக்காவிலும் தமிழக அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாக எண்ணிவிட வேண்டாம். தமிழர் நலனுக்கான சமூகப் பணியில் இறங்கியிருக்கும் அமெரிக்காவாழ் தமிழ் இளைஞர்களே இவர்கள். தமிழ் நாட்டின் சமூகப் பிரச்சினைகளை இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எடுத்துச் சென்று தீர்வுகாண இளந்தமிழரணி என்ற அமைப்பை இந்த இளைஞர்கள் தொடங்கி இருக்கின்றனர்.

முதல் முயற்சியாக, தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்துவரும் இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும் மேலும் இனி நடவாமல் தடுக்கும் செயல்களில் இளந்தமிழரணி ஈடுபட்டுள்ளது. இந்திய அரசாங்கம் பல முறை கண்டித்தும் இலங்கை அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினரின் மனித உரிமை மீறிய செயல்களை நிறுத்த வலியுறுத்த வேண்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புக்கு இந்த இளைஞர்கள் கோரிக்கை மனு கொடுக்கவிருக்கின்றனர். இதற்கான கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த அரசியல் இயக்கத்தையும் சாராது, சாதி/சமய வேறுபாடின்றி தமிழ் மொழி, தமிழர் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் என்ற ஒரே குறிக்கோளுடன் மக்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாக இளந்தமிழரணி கூறுகிறது.

www.ilantamilar.org என்ற இணையதளத்தில் மேலும் விவரங்கள் காணலாம். அத்தோடு மேற்கண்ட மனுவில் கையொப்பம் இடமுடியும்.

© TamilOnline.com