தேவி நாராயணி அம்மனுடன் ஓர் உரையாடல்
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

தேவி நாராயணி அம்மன் என மாறிவிட்ட இளைஞன் சதீஷுடன் நான் ஆகஸ்ட் 22, 1999 அன்று உரையாடினேன். முதல் சந்திப்பிலேயே அந்த இளைஞனின் எளிமை, நேர்மை, சூதுவாதற்ற குணம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. அவன் இளமையாகவும் மென்மையாகவும் இருந்தாலும் லட்சியத்தில் தெளிவும், சமூகத்துக்குச் சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியும் கொண்டிருப்பவனாகத் தோன்றியது. உள்ளூர் மக்களுக்குப் பள்ளிக்கூடம், மருத்துவமனை நிறுவுவதிலும், குழந்தைகளுக்கு ஊட்டம் தரப் போதிய பால் வழங்குவது முதலியவற்றிலும் அவன் தீவிர அக்கறை காட்டினான். அவனுடைய பணித்திட்டத்தில் கோசாலை (பசுப் பாதுகாப்பு இல்லம்) அமைக்கும் நோக்கமும் இருந்தது. தற்காலத்தில் தர்ம காரியங்களில் பசுப் பாதுகாப்பு இடம் பெறுவதில்லை. ஆனால் புராதன இந்திய மதிப்பீட்டில் கோசாலை மிக உயர்ந்த அறப்பணியாகும்.

பள்ளி நற்சாட்சிப் பத்திரம் தவிர அவனுக்கு முறையான ஆன்மீக, புராதன நூல் கல்வி அறிவு கிடையாது. ஆனால் ஆழ்ந்த அறிவுள்ளவனாகத் தோன்றிய அவன், ஞானத்தை எங்கிருந்து பெற்றான் என்றறிய நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். அது, இந்துக்களின் நம்பிக்கைப்படி, உள்மனத்தின் சுயமான தெளிவாகவோ அல்லது சென்ற பிறவியில் பெற்ற அறிவின் மிச்சமாகவோ இருக்கலாம்.

"பெண் தெய்வம் உன்னுடன் இருப்பதாக நீ எப்பொழுது உணர்ந்து கொண்டாய்?"

"எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்போது கோவிலுக்குப் போய் அபிஷேகம் நடப்பதைக் கவனிப்பேன். பால், நெய், தேன், இளநீர் போன்ற இவை அனைத்தும் என்மீதே பெய்யப்படுவதாக உணர்வேன். ஆகவே நானும் அம்மனும் இருவேறு கூறுகள் அல்ல என்ற உணர்வுதான் எனது முதல் அனுபவம். நான் என்னையே வழிபட்டுக் கொள்வதாக உணர்வதும் வழக்கமாகிவிட்டது. 1992ல் அம்மன் என்னில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்."

"வெறும் கையில் பொருள்களை வரவழைக்கும் திறன் பெற்றதை நீ எப்பொழுது அறிந்து கொண்டாய்?"

"எப்போது ஆரம்பமாயிற்று என்று எனக்குச் சரியாக ஞாபகமில்லை. எல்லோரையும் போல, நானும் குழந்தையாக இருந்தபோது, நான் எதற்காவது ஆசைப்பட்டால் அது என் கைக்கு வர வேண்டுமென்று விரும்பினேன். பிறகு, அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது. நான் மிகவும் சிறுவனாக இருந்தபடியால் பள்ளி சகாக்களுடன் விளையாட்டாகவே இந்தச் சக்தியைப் பயன்படுத்தினேன். விளம்பரம்போலத்தான். எனக்குப் பதினாறு வயதானபோது அதில் முழுத்தெளிவு ஏற்பட்டது. என் நினைவில் நிற்கிற இன்னொரு விஷயம், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதில், சுற்றப்புற மக்கள் என்னிடம் வந்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். நான் நம்பிக்கையோடு பதில் சொல்வது வழக்கம். ஒருவன் தேர்வில் வெற்றி பெறுவானா, யாரோ ஒருவர் நோயிலிருந்து குணமடைவாரா, ஏதாவது நல்லதோ கெட்டதோ நடக்குமா என்றெல்லாம் கேட்பார்கள். இது எப்படித் துவங்கியது என்று எனக்கு ஞாபகமில்லை. நான் எந்த ஆன்மீக சாதனையும் (பயிற்சியும்) செய்யவில்லை. இயல்பாக வந்த வரப்பிரசாதம்தான்."

“உனக்கென்று ஆசானோ குருவோ உண்டா? பக்தி நூல்களை எங்கே கற்றுக் கொண்டாய்?"

"நான் எந்த குருவிடமும் சென்றதில்லை. எந்த நூலையும் படிக்கவில்லை. எதையும் நான் பார்த்ததுகூட இல்லை. நான் பெற்ற அறிவெல்லாம் என் உள்மனத்திலிருந்து ஊற்றெடுத்து வந்ததுதான். அது எப்போதும் அங்கேயே இருப்பதால் உள்ளேயிருந்து வருகிறது."

##Caption##"சில சக்திகளை நீ பெற்றிருந்தாலும் அவற்றை வெளியே காட்ட வேண்டிய அவசியம் என்ன?"

"எனது பதினாறாவது வயதில் அம்மன் சுயம்புவாக வெளியே வந்தது. அந்தச் சம்பவம் அனைவரும் அறிந்த பொதுச் செய்தியாகி விட்டது. அன்றுமுதல் இந்தச் சக்தி மக்களை அம்மன் பக்கம் ஈர்ப்பதற்கும் அவர்கள் வளமோடு வாழ்வதற்கும் பயன்படுகிறது. உண்மையில் நான் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை. இந்தச் சக்திகள் ஞானத்துக்கு உதவுவதில்லை. ஞானம் பெறுவதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவை தெய்வத்தின் கொடை. அதிகபட்சமாக தெய்வத்தின்பக்கம் மக்களை அழைத்துவரும் வருகையறிவிப்பு அட்டையாக (visiting card) அவை பயன்பட வேண்டும்"

"உனக்கும் சாயி பாபாவுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?"

"நீண்டகாலமாக சாயி பாபா மனித குலத்துக்குச் சேவை புரிந்து வருகிறார். அவருக்கென்று சொந்தமாகப் பாதை உண்டு. நடந்து தேய்ந்த பாதை. அவருக்கெனத் தனியான செயல்முறைகள் உண்டு, கடவுள் தனக்கென்று பல வாகனங்களைப் படைத்துக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அம்மன் சின்ன கிராமமான ஆரியூரில் சுயம்புவாக மக்களுக்காக வெளிவர முடிவு செய்தார். இப்படித்தான் இது நடந்தது. எல்லோரும் சாயி பாபாவின் அருகே சென்றுவிட முடியாது, ஆகவே கடவுள் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகை மக்களை அடைய வெளியே வருகிறார். அவர்கள் எல்லாம் கலியுகத்தில் அழிந்து வரும் தர்மத்தைப் பாதுகாக்க அவதரித்தவர்கள். ஏராளமான ஏழை மக்கள் இங்கு வருகிறார்கள். இந்தச் சிறிய கிராமத்தில் தர்மத்தின் விதை விதைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது."

"நான் உங்களுடைய தினசரி பூஜையை கவனித்தேன். அது நீண்டு செல்கிறது. இது மேலும் உயர்ந்த சக்திகளை பெறுவதற்காகவா?"

இந்த பூஜை ஒருவரின் சொந்த மன நிறைவுக்காகத்தான். அது மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மனத்தை அலையவிடாமல் வைத்துக்கொள்ள; சக்திகளைப் பெறுவதற்காக அல்ல. ஆனால் சக்திகள் தன்னிச்சையாக வருகின்றன. நானே அம்மனாக இருக்கும்போது, நான் ஏன் அம்மனை வழிபட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். நான் பூஜை செய்யும்போது, பிரபஞ்சம் முழுவதையுமே எனது உடம்புக்குள்ளும் மனதுக்குள்ளும் கொண்டு வந்து விடுகிறேன். முழுப் பிரபஞ்சத்தின் சார்பாக, பிரபஞ்ச நலனுக்காக அம்மனை நான் பிரார்த்திக்கிறேன்.

ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com