சாதனைப் பாவையர்: ராஜலட்சுமி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. மிகவும் பின் தங்கிய குடும்பம். அவருக்கு இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட கால்கள் வேறு. இருந்தாலும் மனம் தளராமல் படித்து முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆனால் சாதிக்கும் ஆர்வம் விடவில்லை. மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதற்கான பயிற்சியில் முனைந்து ஈடுபட்டார். 2001ஆம் ஆண்டு மாநில அளவில் நடந்த ஊனமுற்றோர் தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார். அதுமுதல் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பரிசுகள் ஏதும் கிடைக்காத போதும் மனம் சலிக்காமல் கடுமையாக உழைத்தார். தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டார். விளைவு, பரிசுகள் தேடி வரத் தொடங்கின. இவரை வெளியுலகம் அறிய ஆரம்பித்தது. பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

தொடர்ந்து சர்வதேச அளவில் மாற்றுத் திறன் உடையோருக்கான பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றார். 2004ல் பெல்ஜியத்தில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம், தட்டு எறிதலில் வெள்ளி ஆகிய பதக்கங்களை வென்றார். உலக அளவில் சிபெல் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச உடல் ஊனமுற்றோர் தடகளப் போட்டியில் 4ஆவது இடம் பெற்றார். அது, உலக அளவிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ராஜலட்சுமிக்குத் தந்தது. தொடர்ந்து 2006-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். அடுத்ததாக 2009ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தட்டு எறிதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். தொடர்ந்து பல போட்டிகள், பல பதக்கங்கள். பாரதி யுவகேந்திரத்தின் இளையோருக்கான விருது, சவுராஷ்டிரா பள்ளி சார்பில் தங்கமங்கை விருது, சாதனைச் சுடர் விருது, யூத் லீடர்ஷிப் விருது என 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றிருக்கும் ராஜலட்சுமிக்கு, மேலும் அவரது சாதனையைக் கௌரவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தது.

ராஜலட்சுமி, விளையாட்டு மட்டுமல்லாது யோகாவிலும் தேர்ந்தவர். அதிலும் பரிசு மற்றும் பாராட்டுக்கள் பெற்றுள்ளார். டீக்கடை நடத்தி வந்த தந்தை இறந்து விட, தாய் கடையை கவனித்து வருகிறார். இவரது சாதனை வாழ்க்கை வரலாறு தமிழக அரசின் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பெண்சிசுக் கொலைகளுக்கென்று அறியப்பட்ட ஊரிலிருந்து ஒரு சாதனைப் பெண்!

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com