சாதனைப் பாவையர்: ஜெயஸ்ரீ ஸ்ரீதர்
'இந்திய நிலவுக் கழக'த்தின் தலைவராக இருக்கும் இளையநிலா ஜெயஸ்ரீக்கு வயது 20. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. "ஏரோஸ்பேஸ்" பயின்று வரும் இவர் இந்திய விண்வெளியியலின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். விண்வெளி இயலில் ஜெயஸ்ரீக்கு பள்ளி நாட்களிலேயே நாட்டம். அதுபற்றிய சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டவர், தொடர்ந்து விண்வெளி தொடர்பான விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். லண்டன் "ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி" நடத்திய புவிச் சூடேற்றம் குறித்த போட்டிக்கு, 'எதிர்கால உலகம்' என்ற பெயரில் அனுப்பிய இவரது படைப்பு சர்வதேச அளவில் முதல் பரிசு பெற்றது. அதையடுத்து, ஜெர்மனியின் "யூரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி" நடத்திய சர்வதேச இணையதள வடிவமைப்புப் போட்டியில் பரிசு பெற்றார். தொடர்ந்து ஹைதராபாதில் நடைபெற்ற "சர்வதேச வானியல் காங்கிரஸ்" கூட்டத்தில் 'இஸ்ரோ' சார்பில் ஐம்பது மாணவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மேடையேறியதும், "நான் தமிழகத்தின் சென்னையில் இருந்து வந்திருக்கும் ஜெயஸ்ரீ ஸ்ரீதரைச் சந்திக்க விரும்புகிறேன்" என்று மைக்கில் அறிவித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

'நாசா'வின் 'லூனார் அண்ட் பிளானடரி இன்ஸ்டிட்யூட்' நடத்திய சர்வதேச ஆய்வுக் கட்டுரைப் போட்டிக்கு ஜெயஸ்ரீ அனுப்பிய கட்டுரை சிறப்பானதாகத் தேர்ந்தெடுக்கப்பட, அமெரிக்கா வந்தார் ஜெயஸ்ரீ. நாசாவின் அந்தச் சிறப்பு மாநாட்டில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே நபர், பங்கேற்றவர்களில் மிகவும் இளையவர் ஜெயஸ்ரீதான். இவரது துறுதுறுப்பும் செயல்பாடுகளும் நாசா விஞ்ஞானிகளைப் பெரிதும் கவர்ந்துவிடவே, ஜெயஸ்ரீ, "நாசா" சார்பில் நடைபெற்ற நிலவியல் மாநாட்டுக்கும் அழைக்கப்பட்டார். படிப்பை முடித்ததும் நாசாவுக்கு வந்துவிடுமாறு அங்குள்ள விஞ்ஞானிகள் அழைத்துள்ளனராம்! அமெரிக்காவின் எம்.ஐ.டி.யில் மேல்படிப்புக்குப் போகும் ஆசை உண்டு இவருக்கு. படிப்பு முடிந்ததும் இஸ்ரோவில் பணியாற்ற ஆர்வம். விண்வெளி ஆராய்ச்சிக்காக நோபெல் பரிசு பெறுவது தனது லட்சியம் என்று கூறும் ஜெயஸ்ரீக்கு, விண்வெளித் துறை மட்டுமல்லாது, இசை, நாட்டியம் ஆகியவற்றிலும் ஈடுபாடு உண்டு. பல கச்சேரிகள் செய்திருப்பதுடன், ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார்.

நாசாவில் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை உருவாக்கிய விஞ்ஞானியான டாக்டர் ஏஞ்சல் அபுட் மாட்ரிட், "நீதான் அடுத்த கல்பனா சாவ்லா" என்று ஜெயஸ்ரீயைப் பாராட்டியதோடு, கல்பனா கடைசியாக "கொலம்பியா" விண்கலத்தில் ஏறுமுன் கழற்றிக் கொடுத்துவிட்டுச் சென்ற அவரது பேட்ஜை ஜெயஸ்ரீயிடம் கொடுத்திருக்கிறார். அதை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார் ஜெயஸ்ரீ.

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com