மார்ச் 2011: வாசகர் கடிதம்
பிப்ரவரி இதழில் மாயாபஜார் பகுதியில் 'இதெல்லாம் நல்லதுங்க' என்ற தலைப்பில் வெளியான வீட்டு வைத்தியக் குறிப்புகள் வெகுஜோர்.

வினிதா,
ஐக்கிய அரபு நாடுகள் (ஆன்லைனில்)

*****


'வானதி' மிக நல்ல கதை.

வசந்தி சஞ்சீவி
(ஆன்லைனில்)

*****


சில நாட்கள் முன்னர்தான் நான் 'தென்றலை' பார்த்தேன். எல்லா அம்சங்களையும் படித்து ரசித்தேன். மிக நன்று.

செல்வராஜன்
(ஆன்லைனில்)

*****


பிப்ரவரி இதழில் வெளிவந்த 'வானதி' நன்கு எழுதப்பட்ட கதை.

ப்ரீதி வெங்கட்ராமன்,
ஸ்விட்ஸர்லாந்து (ஆன்லைனில்)

*****


'தென்றல்' ஆரம்பித்த நாளிலிருந்து விடாமல் படித்து வருகிறேன். இயல், இசை, நாடகம் அறிவுத் துறை எல்லாவற்றிலும் அதன் தரம் முன்னணியில் உள்ளது. 'நேர்காணல்'கள் மற்ற பத்திரிகைகள் பின்பற்ற வேண்டிய அம்சங்களுடன் கண்ணியமாகத் தொகுத்தளிப்பது பெருமைப்பட வேண்டியது. தமிழ் நாடக விமர்சனங்கள் அருமை. சிறுகதை எழுதும் வழக்கம் மறைந்து விட்டதோ என்று நினைத்த நேரத்தில் அருமையான சிறுகதைகள். தமிழாசிரியர்கள் பெருமையை இந்த அளவு நுணுக்கமாக 'பேராசிரியர் நினைவுகள்' கட்டுரையில் எடுத்தெழுதுபவரின் முயற்சி மெச்சத்தக்கது. எல்லாவற்றிலும் மிக உயர்ந்ததாக மனித நேயத்தை எடுத்துச் சொன்ன ஸ்ரீதர் சதாசிவன் எழுதிய 'வீட்டில் ஒருவர்' சிறுகதை அருமை. மென்மேலும் பெருமைகள் பெற்றிடத் தென்றலுக்கு வாழ்த்துகள்.

மீனா நாராயண சுவாமி,
ஹூஸ்டன், டெக்ஸாஸ்

*****


'இதெல்லாம் நல்லதுங்க' பாட்டி வைத்தியம் மிகவும் நன்றாக இருந்தது. மிக வித்தியாசமான நடையில் எல்லாரையும் கவரும் வகையில் எழுதியிருந்தார்.

ஜானகிராமன்
(ஆன்லைனில்)

*****


'வானதி' சிறுகதை நெஞ்சைத் தொட்டது. வயதாகும்போது ஏற்படும் உணர்வுகளை ஆசிரியர் நன்கு சித்திரித்திருந்தார். இந்த இயற்கை நிகழ்வை நேர்மறையாகச் சந்திப்பது எப்படி என்பதைக் கதை நன்கு உணர்த்தியது.

எஸ். சிவகுமார், சிங்கப்பூர்

*****


'அன்புள்ள சிநேகிதி'யில் டாக்டர் சித்ரா எப்போதும் போல மிக நல்ல அறிவுரையைத் தந்திருக்கிறார். நம் இந்திய கலாசாரத்தில் (தென் மாநிலங்களிலாவது) நமக்காக வாழ்வது என்பதைவிட மற்றவர்களுக்காக வாழ்வது என்பதையே முக்கியமாக எண்ணும் வழக்கம் இருக்கிறது. இளவயதில் விதவையானால் அப்படியே வாழ்க்கையைக் கழித்துவிட வேண்டும் என்பது மடத்தனம் இப்போது புறம் பேசும் சமூகம், அந்த இளம் விதவைக்கு எந்த அளவு உதவியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது! சித்ரா சொலவது போல ஒரு கம்பேனியன்ஷிப்புக்காகச் சற்று வயதான விதவைப்பெண் ஒரு ஆண் துணையத் தேடிக்கொள்வதில் என்ன தவறு? அதுவுமல்லாமல் அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை; அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. தமிழ் நாட்டில் அரசியல்வாதிகளோ அல்லது சினிமாத்துறையில் இருப்பவர்களோ பலதார மணம் செய்துகொண்டால் கூட ஒப்புக்கொள்ளுகிற சமுதாயம், விதவை மறுமணத்தைக் கேவலமாக நினைப்பது ஆச்சரியமே!

சந்திரமௌளி
(ஆன்லைனில்)

*****


ஈரோட்டிலிருந்து நானும் என் கணவரும் வந்துள்ளோம். என் மகள், மூன்று, நான்கு 'தென்றல்' மாத இதழ்களைத் தந்தாள். சாதாரண மாத இதழ் தானே, அதுவும் அமெரிக்காவில் வெளியாகும் மாத இதழில் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் படிக்கப் படிக்கத்தான் தெரிந்தது, இந்த இதழ் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார, மாத இதழ்களை விட மிக உயர்ந்த தரத்திலும், நல்ல இலக்கியத்தை, சான்றோர்களை, தமிழறிஞர்களை, சிந்தனையாளர்களை, அரசியல் மற்றும் விஞ்ஞானிகளை தமிழர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். தாய் மண்ணை விட்டு இத்தனை தொலைவில் இருந்தாலும் உண்மையான பத்திரிகைத் தர்மத்தோடு தமிழ் மொழியை வளர்ப்பதையும் தமிழர்களை ஊக்குவிப்பதையும் எண்ணிப் பெருமைப்படுகிறோம்.

அய்யா சோமலெ, டாக்டர் தேவ், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி, அக்ஷயா கிருஷ்ணன், சுவாமி விவேகானந்தர், டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன் போன்ற அறிஞர்களை, நல்ல எழுத்தாளர்களைப் பற்றிப் படித்து அறிய 'தென்றல்' இதழ் உதவியது. நாங்கள் தமிழகம் திரும்பும் போது அமெரிக்காவின் நினைவாக சில 'தென்றல்' இதழ்களை எடுத்துச் செல்ல உள்ளோம். தென்றலுக்கு வாழ்த்துகள்.

தென்றல் முருகேசன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோனியா

*****


இரண்டு மாதங்களுக்கு முன் நானும் என் மனைவியும் இங்கு வந்தோம். இங்குள்ள மக்களின் நற்பண்புகள், வாழ்ந்து வரும் தமிழர்களின் வளர்ச்சி, ஒற்றுமை உணர்வு, தமிழார்வம் வியக்க வைக்கிறது. சுவையான கட்டுரைகள், பயனுள்ள செய்திகளைத் தாங்கி மாதந்தோறும் மணம் வீசும் 'தென்றல்' இங்கு எங்களை மகிழ்வித்தவைகளில் ஒன்று. வளர்க உங்கள் பணி.

வி.சுப்ரமணியன்,
பிளெசன்டன், கலிபோர்னியா

*****

© TamilOnline.com