மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா
ஜனவரி 15, 2011 அன்று மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை ப்ரென்ட்வுட் மேனிலைப் பள்ளி அரங்கில் கொண்டாடியது. செயிண்ட் லூயிஸ் நகரின் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திரண்டு வந்திருந்தனர். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. சங்கத்தின் சார்பாக திரு. செந்தில் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றி, தொகுப்பாளர்கள் திருமதி. பொய்கைப் பாண்டியன், திருமதி. சாருலதா சிங்காரவேலன் ஆகியோரை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்ப் பள்ளி மாணவ, மாணவிகளின் பாடல்கள், பஞ்சாமிர்தம், போடு குத்து போடு போன்ற நிகழ்ச்சிகளை அடுத்து என்னம்மா கண்ணு சௌக்யமா என்ற நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கத்தில் முதன் முறையாகப் பெரியவர்கள் பழைய தமிழ் சினிமாப் பாடல்களுக்கு நடனமாடி அரங்கத்தை அதிர வைத்தனர். தொடர்ந்து ஷிணீtuக்ஷீபீணீஹ் ஞிக்ஷீவீறீறீ, கிராமத்துத் தென்றல், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்து தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செம்மொழியான தமிழ் மொழியாம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பரதநாட்டியம், உழவும் குறளும், ஓம் நமசிவாய, நாட்டுப்புற பாடல்கள், எந்திரன் நடனம் போன்றவை நடந்தன. பெண்கள், கலவை கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பலவித நடனங்களை ஆடி மகிழ்வித்தனர். ஆண்களும் தங்கள் பங்கிற்கு சங்கே முழங்கு என்ற பாரதிதாசன் பாடலுக்கு நடனம் அமைத்து, அதில் தப்பு, சிலம்பு, பரதம் போன்றவற்றையும் ஒன்றிணைத்திருந்தது சிறப்பு.

தமிழ்த் தேனீ போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி முதல்வர் திரு. மதியழகன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். தமிழ்ப் பள்ளியை செயிண்ட் லூயிஸ் நகரில் பல்லாண்டுகளாக நடத்தி வரும் மதியழகனை, டாக்டர் ஹரி தனிகராஜ், சங்கத்தின் சார்பாகப் பாராட்டி விருது வழங்கினார். மேலும் சங்கத்திற்காகவும் தமிழ்ச் சமூகத்திற்காகவும் சிறப்பாகப் பணி புரிந்து வரும் டாக்டர் கோவிந்தசாமி சின்னதுரை அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்துடன், தமிழ்நாட்டில் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் திருவள்ளுவர் பள்ளிக்கு தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் சார்பாக தலைவர் திரு. வீர பாண்டியன் 500 டாலருக்கான காசோலையை செல்வி ஆர்த்தி பாலாவிடம் வழங்கினார்.

இறுதியில் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறுவர் சிறுமியருக்குச் சங்கத்தின் சார்பாகத் திரு. வெங்கி சண்முகம், டாக்டர் ஹரி தனிகராஜ் பரிசுக் கோப்பைகளை வழங்கினர். திரு. பாபு சம்பத் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை திரு. வீரபாண்டியன், (தலைவர்) திரு. நாராயணசாமி கனிகண்ணன், (உப தலைவர்), திருமதி. மஞ்சு ஸ்ரீஹரி, (செயலாளர்), திருமதி. சாருலதா சிங்கார வேலன், (இணைச் செயலாளர்) திரு பாபு சம்பத் (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) மற்றும் திரு செந்தில் ராதாகிருஷ்ணன் (இணை ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

மேலும் விபரங்களுக்கு:
இணையதளம்: www.missouritamilsangam.org
மின்னஞ்சல்: committee@missouritamilsangam.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com