Dr. பாலகிருஷ்ணனுக்கு அமெரிக்க ராணுவ ஆய்வு மானியம்
டாக்டர். பாலகிருஷ்ணன் பிரபாகரன் (பார்க்க: 'தென்றல்', அக்டோபர், 2003 இதழ்) அவர்களுக்கு அமெரிக்க ராணுவம் ஆய்வு மானியமாக 240,000 டாலர் (சுமார் ரூ. 10,800,000) அளித்துள்ளது. முப்பரிமாண அசைவு மாதிரிகளில் (3-D animation models) ஏற்படும் குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் மென்பொருள் உபகரணத்தை உண்டாக்க இதை அவர் பயன்படுத்தவேண்டும்.

"ஒரு கட்டிடத்தின் முப்பரிமாண மாதிரியைப் பயன்படுத்தி ராணுவம் அதன் எந்தப் பகுதி வழியே, எப்போது நுழைவது என்பனவற்றைத் தீர்மானிக்கும். ஆனால், அக்கட்டிடத்தின் கண்காணிப் புக் கருவிகளை அறிந்தோ அறியாமலோ மாற்றியமைத்தால், அதில் நுழைவோருக்கு ஆபத்து ஏற்படும். எனது தொழில்நுட்பம் இத்தகைய மாறுபாடுகளைக் கண்டறிந்து, சரிப்படுத்தி, அப்போதையை நிலவரத்தைத் துல்லியமாகத் தரும்" என்கிறார் பிரபாகரன். அபாயநிலைச் சந்தர்ப்பங்களை ராணுவம் திறமையாகக் கையாளவும் கம்பியில்லாத் தொடர்புச் சாதனங்களில் முப்பரிமாண இயக்கப் பிடிப்புச் சமிக்ஞைகளை நீரோட்டமாய்ச் செலுத்தவும் இவரது தொழில்நுட்பம் அதிகம் பயன்படும்.

டல்லாஸில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பிரபாகரன் இதற்கு முன்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலை, மேரிலாந்து பல்கலை (காலேஜ் பார்க்), ஐ.ஐ.டி. சென்னை ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்ததுண்டு. 2003-ம் ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) தொழிற்பணி மானியமாக 400,000 டாலர்களை வழங்கியதை ஒட்டி அப்போது 'தென்றல்' இவரை நேர்கண்டு வெளியிட்டிருந்தது.
மேலும் இவரது சாதனைகள் சிறக்க 'தென்றல்' வாழ்த்துகிறது.

மதுரபாரதி

© TamilOnline.com