வை.மு.கோதைநாயகி
சமூகத்தின் தடைகளைத் தகர்த்தெறிந்து, சாதிக்கப் பிறந்தவள் பெண் என்பதைத் தனது வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டியவர் வை.மு. கோதைநாயகி. வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி என்னும் வை.மு.கோதைநாயகி, சென்னை திருவல்லிக்கேணியில் நீர்வளூர் வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு டிசம்பர் 1, 1901 அன்று மகளாகப் பிறந்தார். வைத்தமாநிதி என்பது குலதெய்வத்தின் பெயர். முடும்பை என்பது பூர்வீக ஊர். பாரம்பரிய வைணவ குடும்பம். ஒரு வயதில் தாயை இழந்ததால் சிற்றன்னையே கோதையை வளர்த்தார். பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று படிக்கக் கூடாது என்பதால் அவர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. சக பெண்களுடன் விளையாடுவதும், அவர்களுக்குக் கதைகள் சொல்வதும் கோதைநாயகியின் பொழுதுபோக்குகள். தன்னையொத்த குழந்தைகளிடம் தான் தந்தையிடம் இருந்து கேட்ட ராமாயணம், மகாபாராதம், பாகவதம் போன்றவற்றிலிருந்தும், விக்கிரமாதித்தன், தெனாலிராமன் கதைகள் போன்றவற்றிலிருந்தும் கதைகளைச் சொல்லுவார். நாளடைவில் சொந்தக் கற்பனையில் கதை சொல்லும் ஆற்றல் கைவந்தது.

அக்காலத்தில் பால்ய விவாகம் சகஜம் என்பதால், 1907ம் ஆண்டில், ஐந்து வயதான கோதைநாயகிக்கு ஒன்பது வயதான சிறுவன் வை.மு. பார்த்தசாரதியுடன் திருமணம் நடந்தது. மனைவியின் கதைகூறும் திறனை அறிந்து கொண்ட கணவர் அதை ஊக்குவித்தார். ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்றவற்றை ஏற்கனவே அறிந்திருந்த கோதைநாயகி, கணவரின் உறுதுணையுடன் நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவாய்மொழி, பாசுரங்கள் என அனைத்தையும் வாய்மொழி மூலமாகவே கற்றுத் தேர்ந்தார். மாமியாரிடமிருந்து தெலுங்கு பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டார். எஞ்சிய நேரத்தில் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடமிருந்து நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களைக் கற்றறிந்தார்.

மனைவியின் விருப்பத்தையும், திறமையையும் உணர்ந்து கொண்ட கணவர், கோதைநாயகியை நாடகம், கச்சேரி என அழைத்துச் செல்லத் தொடங்கினார். அதன் மூலம் பெற்ற அனுபவங்களும், இயல்பான ஆர்வமும் கற்பனை வளமும் கோதைநாயகியை எழுதத் தூண்டின. ஆனால் அவருக்குத் தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதால், தனது தோழியான பட்டம்மாளிடம் கதையை வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல அவர் அதனை எழுதினார். அப்படி உருவானதுதான் கோதைநாயகியின் 'இந்திரமோகனா' என்னும் முதல் படைப்பு. 1924ம் ஆண்டு நோபில் அச்சகம் அந்நூலை வெளியிட்டது. சுதேசமித்திரன், இந்து, நியூ இந்தியா போன்ற பத்திரிக்கைகள் அதைப் பாராட்டி எழுதின. தமிழ் இலக்கிய வரலாற்றில், அதுவும் தமிழை எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண்ணின் முதல் படைப்பு என்ற சிறப்பினைப் பெற்றது 'இந்திரமோகனா'. ஆனால் மக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது. காரணம், அதை எழுதியது ஒரு பெண் என்பதால்தான்.

தானே கைப்பட எழுதினால் அது படைப்புக்கு வலு சேர்க்கும் என்று எண்ணிய கோதைநாயகி, பட்டம்மாளிடமே தமிழ் கற்றுக் கொண்டார். அவருக்குச் சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்தது. அதற்கான வழிமுறையாக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம்தான் எழுத்து. தானே சிறுசிறு கதைகளை எழுதத் தொடங்கினார். கோதைநாயகியின் கதைகளை விரும்பிப் படித்த வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது 'மனோரஞ்சனி' இதழில் அதை வெளியிட்டு ஊக்குவித்தார். ஆனால் அதற்கு உறவினர்களும், குடும்ப நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் அஞ்சாமல், தளராமல் தனது முயற்சிகளைத் தொடர்ந்தார்.

நாளடைவில், வெளிவராமல் நின்று போயிருந்த "ஜகன்மோகினி' என்ற இதழை விலைக்கு வாங்கித் தானே நடத்தத் தொடங்கினார் கோதைநாயகி. அப்போது அவருக்கு வயது 24. அதன்மூலம் தமிழின் முதல் பெண் எழுத்தாளர் மட்டுமல்லாது, பெண் பத்திரிகையாசிரியராகவும் கால் பதித்தார். ஜகன்மோகினியில்தான் அவரது முதல் தொடர்கதை 'வைதேகி' வெளியானது. அது ஒரு துப்பறியும் நாவல் மட்டுமல்ல; தேவதாசிகளின் சீரழிந்த வாழ்க்கை முறைகளைக் குறித்துப் பேசிய முதல் நாவலும் கூட. துப்பறியும் நாவல்கள் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்ற சிறப்பும் கோதைநாயகிக்குக் கிடைத்தது. ஆனால் மக்களில் பலருக்கு அவரது இச்செயல்கள் எரிச்சலைத் தந்தன. அவரை இழித்தும் பழித்தும் பேசியதல்லாமல், அவர் தெருவில் செல்லும் போது காறி உமிழ்ந்தும், 'ஜகன்மோகினி' இதழ்களைக் கொளுத்தியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் கோதைநாயகி அஞ்சவில்லை. புன்னகையோடும், தைரியத்தோடும் அவர்களை எதிர்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பத்திரிகைதான் சிறந்த வழி என்பதை உணர்ந்து எதிர்ப்பைப் புறக்கணித்தார். அந்த மனத்திண்மையே அவரது பிற்கால சாதனைகளுக்கு அடித்தளமானது.

முதலில் துப்பறியும் நாவல்களிலும் மனோதத்துவ நாவல்களிலும் ஆரம்பித்த இவரது எழுத்து, பின்னர் பொதுவுடமை, தத்துவம், சமூகம் எனப் பரந்து விரிந்தது. கதை, நாவல், கவிதை, கட்டுரை என்று எழுதிக் குவித்தார். பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவைத் திருமணம் போன்றவற்றைத் தனது நாவல்கள் மூலம் வலியுறுத்தினார். அதேசமயம், தகுதியுள்ள பிற எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களது படைப்புகளுக்குத் தனது பத்திரிக்கையில் இடம் தந்தார். அநுத்தமாவின் தங்கப் பதக்கப் பரிசு பெற்ற 'மாற்றாந்தாய்' என்னும் சிறுகதை ஜகன்மோகினியில் வெளியானதுதான். தனது இதழைத் தொய்வில்லாமல் வெற்றிகரமாக நடத்துவதற்காக 1937ம் ஆண்டில் சொந்த அச்சகம் ஒன்றை நிறுவினார் கோதைநாயகி. முதல் பெண் பத்திரிகை அச்சக உரிமையாளரும் இவரே.

'ஜகன்மோகினி' தமிழின் முதல் பத்திரிகையானது. அழுத்தமாக அக்கால இலக்கிய உலகில் காலூன்றியது. ஆரம்பத்தில் அதனை எதிர்த்தவர்களே மெல்ல மெல்ல அதன் வாசகர்களாகிப் போயினர். அதனால் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் 'மனோரஞ்சனி' இதழின் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. அதனால் சீற்றம் கொண்ட ஐயங்கார், தான்தான் அதுவரை கோதைநாயகிக்கு நாவல்கள் எழுதிக் கொடுத்ததாகவும், இனிமேல் அவரால் எழுத இயலாது என்றும் தனது இதழில் குறிப்பிட்டார். ஆனால் அதற்குப் பின்தான் நிறைய நாவல்களை எழுதிக் குவித்து அவரது கூற்றைப் பொய்யாக்கினார் கோதைநாயகி. வாசிப்பவரது மனதைக் கொள்ளைகொள்ளும் வசீகரம் கோதைநாயகியின் எழுத்தில் இருந்ததைக் கண்டு வியந்த கவியோகி சுத்தானந்த பாரதியார், வை.மு.கோ.வை 'நாவல் ராணி' என்று பாராட்டிப் பேசி வாழ்த்தினார். எழுத்தாற்றலோடு, கூட்டத்தினரை வசீகரிக்கும் நல்ல பேச்சாற்றலும் கோதைநாயகிக்கு இருந்தது. ஒருமுறை கோதையின் பேச்சைக் கேட்க மாபெரும் கூட்டம் கூடியதைக் கண்டு வியந்த ராஜாஜி, இனி, தான் பேசச் செல்லும் இடத்திலெல்லாம் கோதைநாயகியும் பேச வேண்டும் என வேண்டிக் கொண்டார். கோதையின் பேச்சாற்றலைக் கண்டு வியந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தான் பேசும் கூட்டங்களில் அவரைப் பேச வைத்தார். குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி, கேட்பவரை மெல்ல மெல்ல தேசிய விடுதலை உணர்வின் பக்கம் ஈர்ப்பவராக கோதைநாயகி விளங்கினார்.

நல்ல இசையாற்றலும் அவருக்கு இருந்தது. பாரம்பரியமாக சங்கீதக் குடும்பம் என்பதாலும், இயல்பாகவே நல்ல குரல் வளம் இருந்ததாலும் அவ்வப்போது சில மேடைக் கச்சேரிகள் செய்தார். கோதைநாயகியின் குரல் கண்டு மயங்கிய கலாக்ஷேத்ரா ருக்மணி அருண்டேல் வாரந்தோறும் அவரை கலாக்ஷேத்ராவுக்கு வரச் செய்து பாட வைத்துக் கேட்டார். திருவையாற்றில் தியாகையருக்கு ஆலயம் எழுப்பிய பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் கோதைநாயகியின் நெருங்கிய தோழி. கோதைநாயகியின் கச்சேரிக்கு அவர் தம்பூரா வாசித்திருக்கிறார். பெங்களூரில் கோதைநாயகி கச்சேரி செய்தபோது சௌடையா அவருக்கு மிக விரும்பிப் பிடில் வாசித்திருக்கிறார். இவற்றோடு பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் பாடியவர் என்ற பெருமையும் கோதைநாயகிக்கு உண்டு. 1918 முதல் 1921 வரை சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வசித்தபோது அவரது வீட்டுக்கு எதிர்வீட்டில் கோதைநாயகி வசித்து வந்தார். கோதைநாயகியின் இனிய குரலில் மனதைப் பறிகொடுத்த பாரதியார், அவரை ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஜயபேரிகை கொட்டடா போன்ற தனது பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டார் என்றும், மகள் தங்கம்மா மற்றும் சகுந்தலாவையும் கோதைநாயகியுடன் இணைந்து பாடச் சொல்லிக் கேட்டு ரசித்தார் என்றும் குறிப்பிடுகிறார் முக்தா வி. சீனிவாசன், தனது 'இணையற்ற சாதனையாளர்கள்' நூலில்.

நன்றாகப் பாடும் பிறரை ஊக்குவிப்பதே கோதைநாயகியின் விருப்பமாக இருந்தது. அவ்வாறு அவரால் முன்னிலைப் படுத்தப்பட்டவர்களில் முக்கியமானவர் டி.கே.பட்டம்மாள். பட்டம்மாளின் குரல்வளத்தைக் கண்டு வியந்த கோதைநாயகி, தானே நேரடியாக அவரது தாமல் இல்லத்திற்குச் சென்று, அவரது தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதரிடம் கலந்து பேசி, பட்டம்மாள் கச்சேரிகளில் பாட அனுமதி பெற்றுத் தந்தார். எழும்பூர் மஹிளா சபா, ஜகன்னாத பக்த சபா, பார்த்தசாரதி சாமி சபா மற்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி போன்றவற்றில் பட்டம்மாளில் கச்சேரிகள் அரங்கேறக் கோதைநாயகி காரணமாக இருந்தார். அவர் வானொலியிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். பட்டம்மாளுடன் அவர் இணைந்து பாடிய இசைத்தட்டுகள் குறிப்பிடத்தக்கன.
நல்ல பல பாடல்களையும் புனைந்துள்ளார். அவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் 'இசை மார்க்கம்' என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளன. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, ரஞ்சனி-காயத்ரி ஆகியோர் இன்றும் அவற்றைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.

அன்னி பெசன்ட் மூலமாக தேசபக்தர், சமூகத் தொண்டர் அம்புஜம் அம்மாளின் நட்பு கோதைநாயகிக்குக் கிடைத்தது. சென்னைக்கு வந்த காந்திஜியை அம்புஜம் அம்மாளும், கோதைநாயகியும் சந்தித்தனர். அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையானது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட கோதைநாயகி, காந்திஜியின் வேண்டுகோளை ஏற்று அதுமுதல் கதராடை அணியத் தொடங்கினார். மங்கல நாணைத் தவிர வேறு நகை அணிவதில்லை என்று உறுதி பூண்டார். ருக்மணி லட்சுமிபதி, வசுமதி ராமசாமி, அம்புஜம் அம்மாள் ஆகியோருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.

ஆற்றலும் திறனும் வேட்கையும் கொண்ட பெண்கள் ஏதாவது ஒரு விதத்தில் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என நினைத்த கோதைநாயகி, 1929ல் திருவல்லிக்கேணியில் 'சுதேசி லீக்' சங்கம் அமைத்தார். வீதிவீதியாகச் சென்று கதர் ஆடை விற்பனையை மேற்கொண்டார். பெண்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் செய்தார். சைனா பஜாரில் நடந்த அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 'மகாத்மாஜி சேவா சங்கம்' என்னும் சமூக சேவை அமைப்பைத் தொடங்கி அதன் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். தனது கக்சேரி, எழுத்து மற்றும் நாடகங்கள் மூலம் நன்கொடை திரட்டி, அதற்குச் சொந்தக் கட்டிடம் அமைய உறுதுணையாக இருந்தார்.

1932ல் 'லோதியன் கமிஷனுக்கு எதிராக கே.பாஷ்யம் ஐயங்கார் தலைமையில் நடந்த போராட்டத்தில், எஸ். அம்புஜத்தம்மாளுடன் இணைந்து கலந்து கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது இவரது சமூக ஆர்வம் குறைந்து விடவில்லை. ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களது வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டறிந்து அவற்றை கதைகளில் வடித்தார். வன்முறை எண்ணங்கள் கொண்டவர்களின் மனதில் அஹிம்சையை நிலைக்க்ச் செய்தார். சிறையில் இருந்தபோது அவர் எழுதிய நாவல்தான் 'சோதனையின் கொடுமை'. அது ராஜாஜியின் பாராட்டைப் பெற்றது. 'உத்தமசீலன்' என்ற நாவலும் சிறைவாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதே. இரண்டாவது உலகப்போரின் பொருட்டுச் செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள சிங்கபெருமாள் கோயிலில் குடியேறியவர், 'ஜகன்மோகினி' அச்சகத்தையும் அங்கேயே நிறுவி, இதழை அங்கிருந்தே வெளியிட்டார். கணவர் பார்த்தசாரதி கோதைநாயகியின் முயற்சிகளுக்கெல்லாம் உறுதுணையாக இருந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து ஜகன்மோகினியை வெற்றிகரமாக நடத்தினார் கோதைநாயகி.

1925 முதல் 1958 வரை 115 நாவல்களை எழுதியிருக்கிறார் வை.மு.கோதைநாயகி. நாவல்கள் மட்டுமல்லாமல், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவையும் இலக்கியத்துக்கு அவரது பங்களிப்புகளாகும். திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளரின் கதை கோதைநாயகியினுடையதுதான். அவரது கதை 'அநாதைப் பெண்' என்ற பெயரில் ஜூபிடர் பிக்சர்ஸால் வெளியிடப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது. அதுபோல ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன் போன்றவையும் அவரது கதையில் உருவான திரைப்படங்களே! பிற்காலத்தில் அவரது மற்றொரு கதை 'சித்தி' என்ற திரைப்படமாக உருப்பெற்றது. திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தீரர் சத்தியமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜி, காமராஜர் ஆகியோர் கோதைநாயகி மீது பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். ராஜாஜி, காந்திஜியின் பேரனான 'ராஜ் மோகன் காந்தி'க்கு அந்தப் பெயர் சூட்டியதே கோதைநாயகிதான் என்பதிலிருந்தே தலைவர்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை உணரலாம்.

தனது ஒரே மகன் சீனிவாசன் 38 வயதில் விஷக்காய்ச்சலால் இறந்துவிட, அந்த துக்கம் கோதைநாயகியைப் பெரிதும் பாதித்தது. எழுத்தையும், வெளிவட்டாரத் தொடர்பையும் நிறுத்திக் கொண்டார். காசநோய் அவரது உடலை உருக்குலைத்தது. படுத்த படுக்கையானார். தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி பிப்ரவரி 20, 1960 அன்று கோதைநாயகி காலமானார்.

பலதுறைகளிலும் முன்னோடியாக இருந்து முத்திரை பதித்த கோதைநாயகி, பெயருக்காகவோ, புகழுக்காகவோ இவற்றைச் செய்யவில்லை. சமூகத் தாக்கத்தாலும், அதனால் தமது உள்ளத்தில் எழுந்த உந்துதலாலும்தான் ஈடுபட்டார். இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் சாதனை படைத்த அவரது இலக்கியப் பங்களிப்பு இக்காலக் கொள்கசார்ந்த, குழுச்சிறை விமர்சகர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், புறக்கணிக்கப்பட்டாலும் துணிவான, திணிவான பங்களிப்பின் மூலம் முன்னோடிப் பெண் எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைத்து நிற்கிறார் வை.மு.கோதைநாயகி.

(தகவல் உதவி: 'கோதைநாயகியின் இலக்கியப் பாதை', திருப்பூர் கிருஷ்ணன்; 'இணையற்ற சாதனையாளர்கள்', முக்தா சீனிவாசன்)

பா.சு.ரமணன்

© TamilOnline.com