திருநள்ளாறு சனீஸ்வர பகவான்
சைவ சமயக் குரவர்களில் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவரால் போற்றிப் பாடப்பெற்ற தலம் திருநள்ளாறு. இது சோழநாட்டில், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. காரைக்கால், கும்பகோணம், பேரளம் மார்க்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. வயல் வளமும் சோலை வளமும் சூழ்ந்திருக்க, பக்தி வளம் பெருக்கும் திருத்தலம் இது.

தலச் சிறப்பு
இத்தலம் அனைத்து போகங்களும் தர வல்லது. இதனை "நள்ளாறா என நம்வினை நாசமே" எனக் கூறி உணர்த்துகிறார். இத்தலம் சிவத்தலமாக இருந்த போதிலும், சனி பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக விளங்குவதால் சனீஸ்வரத் தலமாகவும் விளங்குகிறது. ஆதிகாலத்தில் இங்கே பிரம்மன் பூஜித்ததால் ஆதிபுரி எனவும், தல விருட்சம் தர்ப்பை என்பதால் தர்ப்பாரண்யம் எனவும், முசுகுந்தச் சக்ரவர்த்தி நகவிடங்கப் பெருமானை பிரதிஷ்டை செய்தமையால் நகவிடங்கபுரம் எனவும், இங்கு கோயில் கொண்ட சனி பகவானை பூஜித்து மேன்மையைப் பெற்ற நள மன்னன் பெயரால் திருநள்ளாறு எனவும் பல பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.

மூர்த்தி
இத்தலத்தின் விசேஷ மூர்த்திகளுள் முதன்மையானவர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் நாமம் போகமார்த்த பூண்முலையாள். சமணர்களால் சைவத்திற்கு நலிவு ஏற்பட்ட காலத்தில் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற "போக மார்த்த பூண் முலையாள்" எனத் தொடங்கும் பாடலால் சைவத்திற்குப் புத்துயிர் அளித்ததாலும், அன்புடன் வழிபடுவோருக்கு உயிரைக் காத்தருள்வதாலும் "பிராணேஸ்வரி" என்ற பெயரும் அன்னைக்கு உண்டு. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராசர் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது மூர்த்தி. இவருக்குரிய அம்பிகை நீலோத்பலாம்பிகை. பைரவ மூர்த்தியும் இத்தலத்து விசேஷ மூர்த்திகளுள் ஒருவர்.

தீர்த்தம்
அட்டதிக்கு பாலகர்களால் எட்டு திசைகளிலும் தீர்த்தங்கள் உண்டாக்கப்பட்டு சிவலிங்கமும் தனித்தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 13 தீர்த்தங்கள் உள்ளன. பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், நள தீர்த்தம் ஆகியவை விசேடமானவை. அம்மன் கோயிலுக்குத் தெற்கே சரஸ்வதி தீர்த்தம், வடக்கிலும் மேற்கிலும் தொடர்ந்து அன்ன தீர்த்தமும் அமைந்துள்ளன. தீர்த்தங்களைத் தீண்டினாலே பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை. கோயிலில் இருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடினால் கிரக தோஷங்கள் விலகுவதாக ஐதீகம்.

சுவாமி சன்னிதியின் வலப்புறத்தில் இத்தலத்தின் சிறப்பு தெய்வமான சனீஸ்வர பகவான் கட்டை கோபுரச் சுவற்றில் உள்ள சிறிய மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார். சுவாமி சன்னிதி கிழக்கு நோக்கி விளங்க, அம்பிகை சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சனிபகவான் சன்னிதி மிகவும் விசேஷமானது. எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்திருப்பது.

சனியைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. எனவேதான் மன்னன் முதல் முனிவர் வரையிலுள்ள மக்கள் அனைவரும் இவருடைய ஆணையின்படி இன்ப, துன்பங்களை அனுபவித்தனர். 30 வருடம் வாழ்ந்தவனும் இல்லை, 30 வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சனியின் பெருமையை விளக்கும் முதுமொழி. ஜோதிடப்படி அவர் ஒரு ராசிச் சக்கரத்தை முழுமையாகச் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். மக்கள் சனி பகவானின் கருணையைப் பெறவும், கோபத்தைத் தடுக்கவும் மிகுந்த பக்தியுடன் வழிபாடு, அபிடேக ஆராதனைகள் செய்து வருகின்றனர்.

நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் சனி பகவான் ஜாதகருக்கு ஆயுள்காரகனாகத் திகழ்கிறான். சனி பகவான் நான்கு திருக்கரங்கள் கொண்டவர். வல கரங்களில் வரத முத்திரையையும், பாம்பையும் கொண்டவர். இடக்கரங்களில் வில்லும், சூலமும் தரித்தவர். இவருக்கு வாகனம் காகம். இவரது மனைவி ஜ்யேஷ்டா தேவி. சூரியனின் இரண்டாவது மனைவியான சாயா தேவிக்குப் பிறந்தவர் சனி. சனிக்கு ஒரு கால் ஊனம். அதனால் மந்தன், சனைச்சரன் என்ற பெயரும் உண்டு. கருநீல மேனி உடையவர். பிரியமான தான்யம் எள். உலோகம் இரும்பு. சனி பீடை நீங்க ஒரு புதிய இரும்புச் சட்டியில் நல்லெண்ணை ஊற்றி அதில் தன் முகத்தைப் பார்த்து விட்டு அதை அப்படியே பிறருக்கு தானம் செய்வது வழக்கம்.

ஒருவனுக்கு வளமான வாழ்வு கிடைத்தால் சுக்ரதசை என்றும் துன்பங்கள் தொடர்ந்தால் சனி தசை என்றும் கூறுவர். இதனால்தான் ஆலய வழிபாடுகளில் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெற்று பூஜை, வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன. நவக்கிரகங்களோடு மட்டுமின்றி தனிச்சன்னதியிலும் பல ஆலயங்களில் சனி பகவான் எழுந்தருளியிருக்கின்றார். திருநள்ளாறு சனீஸ்வரனை வணங்கி, எள் தீபம் ஏற்றி, எள் அன்னம் தானம் செய்து வழிபட்டால் துன்பங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே

© TamilOnline.com