பண்டிட் பீம்சேன் ஜோஷி
பிரபல ஹிந்துஸ்தானி இசை மேதையும், உலகப் புகழ் பெற்றவருமான பண்டிட் பீம்சேன் ஜோஷி (88) ஜனவரி 24, 2011 அன்று புனேயில் காலமானார். கர்நாடக மாநிலத்தின் கதக் நகரில், பிப்ரவரி 4, 1922 அன்று பிறந்தார் ஜோஷி. தந்தை குராச்சார்யா ஜோஷி பள்ளி ஆசிரியர். ஹிந்துஸ்தானி இசையின் இணையற்ற மேதையான பீம்சேன் ஜோஷி, பஜன் மற்றும் அபங்கப் பாடல்கள் பாடுவதிலும் தலை சிறந்தவர். கயால் என்ற பாடல் வகையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். குரு-சிஷ்ய பாரம்பரிய வாய்மொழி இலக்கியமாக மட்டுமே இருந்த கயால் பாடல்களைப் பிரபலப்படுத்தி வெளியுலகுக்குக் கொண்டு வந்தவர் இவர்தான். 1943ம் ஆண்டில் மும்பைக்குக் குடியேறிய ஜோஷி, தனது கம்பீரமும் இனிமையும் சேர்ந்த தனது தனித்துவமிக்க குரலாலும், அசாத்தியத் திறமையாலும் படிப்படியாக உயர்ந்தார். இவர் பாடிய "மிலே சுரு மேரா துமாரா" தேச ஒற்றுமைப் பாடல் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த ஒன்று. திரைப்படங்கள் பலவற்றிலும் பாடி விருதுகள் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளின் உச்சமாக, இந்திய அரசு இவருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கிச் சிறப்பித்தது. நோய்வாய்ப்பட்டிருந்த ஜோஷி, சிகிச்சை பலனின்றிக் காலமானார்.



© TamilOnline.com