திருநெல்வேலி நெல்லையப்பர்
சைவசமயக் குரவர்களுள் ஒருவரான ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கனுள் இது மிக முக்கியமானது. நெல்லுக்கு வேலியாக நின்று நெல்லையப்பராக நாமம் கொண்ட இத்திருக்கோவில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல்லையப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். இறைவி காந்திமதியம்மை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தலப்பெருமை
இறைவனுக்கு நெல்லையப்பர், வேணுவன நாதர், வேய்முத்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்ற நாமங்களும், அம்மைக்கு காந்திமதி, வடிவுடையம்மை, திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் என்ற திருநாமங்களும் வழங்கப்படுகின்றன.

இத்திருத்தலத்துக்கு வேணுவனம், நெல்லூர், சாலிவாடி, பிரம்ம விருத்தபுரம், தாருகாவனம், கீழ்வேம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களும் உண்டு. பசுமையான வயல்கள் வேலிபோல் நகரைச் சூழ்ந்துள்ளன. உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி வேணுவனம் அடைந்து 32 அறங்களையும் வளர்த்து கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைந்து, தவமிருந்து நெல்லை நாதனது அருட்கோலக்காட்சி எய்தி மணந்தருளிய தலம். ஆதியாம் பிரம்மம் தானே அகமகிழ்ந்து இருத்தலாலும், சோதியாகிய இரண்டு லிங்கம் தோன்றி இருத்தலாலும், வேதங்களே மூங்கிலாகச் சூழ்ந்திருப்பதாலும், அசலரான திருமூலநாதருக்கு ஆவுடையாளும் கூடவே ஆதியில் தோன்றியிருப்பதாலும் பேரூழிதோறும் இறைவன் இங்கு இருப்பதாலும் வருந்தி வருவோர்க்கு முக்தி அளிப்பதாலும் இத்தலம் பெருமை பெறுகிறது. தல விருட்சம் வேணு எனப்படும் மூங்கில்.

தீர்த்தம்
இத்தலத்தில் 32 தீர்த்தங்க்ள் உள்ளன. 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. இவற்றில் பொற்றாமரை, கருமாரி, வைரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம் நான்கும் கோவிலினுள் அமைந்துள்ளன. கம்பை, தெப்பக்குளம், சிந்து பூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை ஆகிய ஐந்தும் கோவிலுக்கு வெளியில் இருப்பன. சிந்து பூந்துறையில் ஒருநாள் நீராடினால் பதினாயிர கிரிச பலன் அடைவர் என்றும், பொற்றாமரையில் நீராடினால் அதனிலும் பத்துமடங்கு பலன் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

கோவிலின் பெருமை
நகரின் மத்தியில் விளங்கும் இக்கோவில் மொத்தத்தில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட எல்லையுள் அமைந்துள்ளது. அம்மன் கோயிலும் சுவாமி கோயிலும் புராணப்படி முதலில் முழுதுகண்ட ராம பாண்டியனாலும் பின் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டனவாம். ஆலயங்கள் இரண்டும் தனித்தனியாக விளங்கியதால் இடைவெளியை அழகுபடுத்த எடுத்த முயற்சியின் விளைவாக கி.பி. 1647ல் வடமலையப்பப் பிள்ளை இரு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை அமைத்தார். இதில் பச்சை வடிவாள், காசி விசுவநாதர், சாஸ்தா, பீமன் ஆகியோரது சிலைகள் உள்ளன. சங்கிலி மண்டபத்தின் மேற்கே சுப்ரமண்யசுவாமி கோவிலும், மேற்புறம் நந்தவனமும் இதன் நடுவில் நூறு கால்களுடன் அமைந்துள்ள வசந்த மண்டபமும் அமைந்துள்ளன. இங்கு சமயச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, சுவாமி அம்மனுக்கு வசந்த விழா ஆகியவை நடைபெறுகின்றன.

சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவற்றின் அமைப்பு பண்டைக்காலத் தமிழர் சிற்பக்கலைச் சின்னங்களாகும். ஒரே கல்லில் வடித்த மயில்வாகனத்தில் ஆறுமுகனார், வள்ளி, தெய்வயானையுடன் அமர்ந்திருப்பது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இக்கோவில் முன்மண்டபமாகிய இரண்டு அம்பலங்களும் அலங்கார வேலைப்பாடு மிகுந்தவை. சுவாமி சந்நிதியில் இடப மண்டபத்திற்குத் தெற்கே கற்றூண்களில் இசையாளர்கள், வீரர்கள் உருவங்கள் பார்த்து மகிழத்தக்கவை. கொடிமரத்திற்கு மேற்கே கோவில் முகப்பு மண்டலத்தில் தூண்களில் வீரபத்திரர் முதலிய சிலைகள் சிற்பியின் கைத்திறனைக் காட்டுகிறது. ஈசானத்தில் விளங்கும் பெரிய நடராசப் பெருமானின் விக்ரகம் உண்மையில் ஒருவர் ஆடுவதைப் போல் அழகுடன் மனதைக் கொள்ளைக் கொள்கிறது. தெற்குப் பிரகாரத்தில் கல்லால் அமைந்துள்ள பொல்லாப் பிள்ளையார், மேல் பகுதியில் கல்லினால் அமைக்கப்பட்டுள்ள நடன மண்டபம், தாமிரசபை, அதிலிருக்கும் மரச்சிற்பங்கள், தாமிரசபைக்கு வடபுறம் உள்ள நடராசர் சிலை ஆகியன அரிய வேலைப்பாடு கொண்டவை. கோவிலில் உள்ள கொடி வகைகள், வாகனங்கள் யாவும் பழைமைச் சிறப்புடையனவாகும். கல்வெட்டுக்களும் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை. கோவிலின் சப்தஸ்வரக் கற்றூண்கள் அரியவையும் வியக்கச் செய்பவையும் ஆகும்.

கணபதி, முருகனை வழிபட்டு உள்ளே நுழைந்தால் ஊஞ்சல் மண்டபம். இதில் 96 கற்றூண்கள் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன. ஐப்பசித் திங்களில் அம்மன் திருக்கல்யாணம் முடிந்து மூன்று நாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. கோவிலில் நூல்நிலையம், தேவாரப் பாடசாலை உள்ளன. இதையடுத்துப் பசுமடம், திருக்கல்யாண மண்டபம் உள்ளன. 520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரச் செங்கோல் விழா, அம்மன் திருமண விழா யாவும் நடைபெறுகின்றன. அடுத்து வடபுறம் பொற்றாமரை என்னும் புண்ய தீர்த்தம் உள்ளது. இதில் மாசிமாதம் தெப்பவிழா நடைபெறுகிறது. தடாகத்தின் மேல்புறம் பொற்றாமரைப் பிள்ளையார், வாணி, தக்ஷிணாமூர்த்தி, பால்வண்ண நாதர் இவர்களை வணங்கிவிட்டு அம்மன் சன்னதிக்குச் செல்ல வேண்டும்.

கர்ப்பக் கிருஹத்தில் வைரமணிமுடி, ராக்கொடி அணி செய்ய, முகத்தில் புல்லாக்கு, மூக்குத்தி ஒளி மின்ன, மார்பில் நவமணி வடம், காலில் மணிச் சிலம்பும் அழகு பெற வலக்கரம் உயர்த்தி, இடக்கரம் தாழ்த்தி தாமரை, கிளி இவற்றுடன் ஒளிப் பிழம்பாய் வணங்கும் வடிவாம்பாளை நின்ற கோலத்தில் பார்க்கப் பரவசமூட்டும். மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீக்ஷிதர் இயற்றிய 'ஸ்ரீ காந்தமதிம் சங்கரயுவதீம்' என்னும் 'ஹேமவதி' ராகப் பாடல் சன்னிதியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இறைவன், இப்புனிதத் தலத்தில் எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளான். வேதசன்மன் எனும் சிவபக்தனைச் சோதிக்க எண்ணிச் செல்வத்தைக் குறைத்துப் பஞ்சம் ஏற்படச் செய்ய, பக்தன் மனமுருகி வேண்ட மழை பொழிந்தது. நெல்லை வெள்ளம் அடித்துச் சென்றால் நெல்லை எப்படிப் படைப்பேன் என்று பக்தன் கலங்க மாரி நீரே உயர்ந்து வேலியாகக் காத்து நிற்பதையும் நடுவில் வெயில் அடித்தமையால் நெல் சேதம் இல்லாமல் இருப்பதையும் மன்னன் அறிந்து வேணுவன நாதா, உலகிற்காக மழை பெய்வித்து நெல் மட்டிலும் நனையாமல் காத்த பரம்பொருளே, உனது நாமம் இன்று முதல் 'நெல்வேலி நாதர்' என வழங்குவதாக என வேண்டினான். அன்று முதல் வேணுநாதர் என்ற திருப்பெயர் 'நெல்வேலி நாதர்' என்றும் வழங்கலாயிற்று.

வேணுவனமாக இருந்த பகுதியில் மன்னனுக்குப் பால் குடங்களை ராமக்கோன் எனும் ஆயன் சென்று தினந்தோறும் கொடுத்து வந்தபோது ஒருநாள் வனத்தின் மத்தியில் பால் குடங்கள் கவிழ்ந்து சிதறின. அவ்விடம் மூங்கில் குடம் ஒன்று நிற்பதையும், பால் சிந்தின குடம் உடையாமல் உருண்டு செல்வதையும் கண்டு மூங்கில்முளை காலை இடறுகிறது என அதை வெட்டினான். உடனே குருதி பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கண்ட ஆயன் அச்சமுற்று அரசரிடம் தெரிவிக்க, அரசன் பரிவாரம் புடைசூழ வந்து குருதி வடிவதைக் கண்டான். மன்னன் கண்ணில் நீர்மல்க, இது உன் திருவருளே, இறைவா, உன் பவளமேனிப் பொலிவைக் காட்டியருள்க என குருதி வரும் இடத்தைத் தொடவும் குருதி நின்றது.

ஆதியே நிதியாக என்முன் திருவிளையாடல் காட்டினும் உன் உண்மை வடிவம் காட்டுக, நான் விழா நடத்துவதற்கு ஏற்ப வானுற வளர்ந்த பேருருக்காட்ட வேண்டும் எனப் பணிந்தான் மன்னன். மதி சூடிய தலையில் ஆயனால் வெட்டுண்ட காயத்தோடு இறைவன் காட்சியருள, மன்னன் மீண்டும் வணங்கி ஆருயிர் வருந்தா வண்ணம் இப்பூவுலகில் குறுக வேண்டும் என்று கேட்க இறைவனும் அதை ஏற்றுக் குறுகிக் காட்சி அளித்தான்.

முறைப்படி ஆவுடையாள் சாத்தத் திருவுளங்கொண்டு நெல்லை நாதர் நிமிர்ந்து வளர்ந்து நின்றார். பீடத்தின் மேல் பீடமாக 21 பீடம் அமைத்தான் மன்னன். இதற்கு மேலும் பீடம் அமைப்பது முறையல்ல என இறைவனைத் துதிக்க, இறைவன் இடப வாகனத்தில் தோன்றி என்னைச் சோதி மயமாகக் கண்டதால் நீ முழுதுங்கண்ட ராமன் எனப் பெயர்பெற்று விளங்குவாய் என அருளினார். மன்னன் எல்லா மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைத்து ஆகம விதிப்படி விழாக்களும் அமைத்தான். இத்திருவிளையாடல் பங்குனித் திங்கள் செங்கோல் திருவிழாவின் நான்காம் நாளன்று நடைபெறுகிறது. நெல்லையப்பரைத் துதிப்போம். நல்வளம் பெறுவோம்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com