கோபிகிருஷ்ணன்
தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமிக்க எழுத்தாளர் கோபிகிருஷ்ணன். இவர் 23 ஆகஸ்ட் 1945 அன்று மதுரையில் பிறந்தார். மதுரை சௌராஷ்ட்ரா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னையில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்ததால், கோபிகிருஷ்ணன் மேற்கல்விக்காகச் சென்னைக்கு வந்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. உளவியல் பட்டம் பெற்றார். சில மாதங்கள் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்த பின்னர் அகில இந்திய கைவினைப் பொருள் துறையில் கணக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அந்தப் பணியில் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மானிடவியல் துறையில் பட்டயம் பெற்ற கோபி, தான் படித்த உளவியல் துறை சார்ந்த பணிகளிலேயே ஈடுபட விரும்பினார். அரசுப் பொது மருத்துவமனையில், செயற்கை அவயவங்கள் நிலையத்தின் புனர்வாழ்வு மையத்தில் ஒரு வேலை கிடைத்தது. ஐந்து வருடங்கள் அதில் இருந்தார். மாலைநேர வகுப்பில் குற்றவியல், தடய அறிவியல் துறைகளில் பட்டயம் பெற்றார்.

இக்கால கட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அது நாளடைவில் தோல்வியில் முடிந்தது. குடும்பச் சூழ்நிலையாலும், பொருளாதார நெருக்கடியாலும், முதல் திருமண உறவில் ஏற்பட்ட கசப்பாலும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான கோபிகிருஷ்ணன், அதற்காகத் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளலானார். நண்பர் 'க்ரியா' ராமகிருஷ்ணன் மூலம் IMRBயில் (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) ஒரு பணி கிடைத்தது. அங்கு வேலைபார்த்துக் கொண்டே க்ரியாவில் பகுதிநேர வேலை செய்தார். பின்னர் க்ரியாவிலேயே முழுநேரப் பணியாளராகச் சேர்ந்தார். 1980ல் இரண்டாவது திருமணம் நடந்தது.

1973லேயே தூயோன் எனும் சிறுகதையை எழுதியிருந்த கோபிகிருஷ்ணனுக்கு, அதன்பிறகு அதிகம் எழுத இயலாத நிலை இருந்தது. தற்போது முழு வீச்சுடன் தான் பார்த்த, தன்னை பாதித்த விஷயங்களை எழுத்தில் பதிய ஆரம்பித்தார். முதல் சிறுகதை 'மையம்' பத்திரிகையில் 84 ஜனவரி-மார்ச் இதழில் வெளியானது. தொடர்ந்து விருட்சம், மையம் போன்ற இலக்கியச் சிற்றிதழ்களில் கதைகள் வெளியாகி கவனம் பெற்றன. தான் எழுதிய கதைகளை எழுத்தாளர் நகுலனிடம் கோபிகிருஷ்ணன் காட்டியபோது, 'இந்தக் கதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. என்னிடம் பணம் இருந்தால் நான் புத்தகமாகப் போடுவேன்' என்றார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'ஒவ்வாத உணர்வுகள்' என்ற தலைப்பில் 1986ல் வெளியாயின. வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் Curving Downwards என்று இவர் கதைகளைப் பற்றி மதிப்புரை எழுதினார். பிறகு எகனாமிக் டைம்ஸிலும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்கூத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் போன்ற இலக்கியவாதிகளுடன் ஏற்பட்ட நட்பு கோபிகிருஷ்ணனின் எழுத்துக்கு ஊக்கம் தருவதாக அமைந்தது. தொடர்ந்து எழுதினார். ஆனால் உடல்நிலையும், பொருளாதாரமும் அதற்கு இடையூறாக இருந்தன. பல்வேறு தொண்டு நிறுவனங்களில் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவத்துடன் லதா ராமகிருஷ்ணன், சஃபி ஆகியோருடன் இணைந்து 'ஆத்மன் ஆலோசனை மையம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதில் மனநல ஆலோசகராகச் செயல்பட்டார்.

மென்மையான உணர்வுகள் கொண்ட கோபிகிருஷ்ணன், சமூகத்தின் அவலங்களையும், போலித்தனத்தையும் கண்டு உள்ளம் கொதிப்பவராக, மனம் வாடுபவராக இருந்தார். அவற்றைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார். புதுமைப்பித்தனின் அங்கதத்துடன் ஆனால் அதே சமயம் அதற்கான உளவியல் பின்னணிக் காரணங்களைச் சுட்டுவனவாக கோபியின் கதைகள் அமைகின்றன. சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்கு உள்ளாக்குவதுடன், அதிகாரங்களுக்கும், ஆசைகளுக்கும் பணிந்து, பயந்து, அடிமைப்பட்டுப் போகும் மனிதர்களின் மனநிலையையும் இவரது கதைகள் துல்லியமாகப் படம் பிடிக்கின்றன. சமூகச் சீர்கேடுகளும், உளவியல் மருத்துவத்துறையில் நிலவி வரும் குறைபாடுகளும், மனிதவிரோதச் செயல்பாடுகளும், அணுகுமுறைகளுமே இவரது பல சிறுகதைகளுக்கான கருவாக அமைந்துள்ளன. மனிதர்களின் உளவியல் சிக்கல்கள், உள்மனதின் நிறைவேறாத ஆசைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துபவை இவரது சிறுகதைகள். சில கதைகள் நாட்குறிப்புப் பதிவுகள், விளக்கங்கள் போன்றும் அமைந்துள்ளன.

கோபி கிருஷ்ணனின் 'மானிட வாழ்வு தரும் ஆனந்தம்' சிறுகதைத் தொகுப்பு மிக முக்கியமானது. 'தூயோன்', 'இடாகினிப் பேய்களும்-நடைப்பிணங்களும், சில உதிரி இடைத்தரகர்களும்', 'ஒவ்வாத உணர்வுகள்', 'முடியாத சமன்', போன்றவை இவரது முக்கியமான சிறுகதைத் தொகுப்புகள். 'உணர்வுகள் உறங்குவதில்லை' குறுநாவல். கோபி கிருஷ்ணனின் மிகச் சிறந்த கதையாக 'டேபிள் டென்னிஸ்' குறுநாவல் கருதப்படுகிறது. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றிய இவரது அனுபவமே 'உள்ளிருந்து சில குரல்கள்' என்ற நாவலாக வெளிப்பட்டது. தவிர, பல கட்டுரைகளும், மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

"எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மை இருக்கும்" என்கிறார் இவர். மேலும், "தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்து விடலாம்" என்றும் சொல்வது கவனத்திற்குரியது.

நகர வாழ்க்கை எப்படி மனிதர்களை மனம் மரத்துப் போன மாந்தர்களாக்கி விடுகிறது என்பதைக் கூறுகின்றன கோபிகிருஷ்ணனின் கதைகள். இவர் சித்திரிக்கும் மனநோயாளிகளின் உலகம் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும். தனக்கும் தன்னைப் போன்ற சக நோயாளிகளுக்கும் ஏற்பட்ட உணர்வுகளை, அதிரவைக்கும் பல விஷயங்களை, நுணுக்கமாகத் தமது படைப்புக்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் கோபி. இவர் தமது கதைகள் மூலம் உபதேசம் செய்வதில்லை. இது சரி, இது தவறு என்று தீர்ப்புக் கூறுவதுமில்லை. ஓர் அனுபவத்தை, உண்மையை வாசகர்முன் வைக்கிறார். அதனால் வாசகனின் சிந்தனையில் ஏற்படும் மாற்றமே அவரது படைப்பின் வெற்றி.

நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு கோபிகிருஷ்ணன், "என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி... என்பது போலத்தான்." என்கிறார். "எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்" என்று கூறும் கோபிகிருஷ்ணன், "விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது" என்கிறார்.

மன உளைச்சலினாலும், உடல் பிணிகளினாலும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார் கோபி. வறுமையும், அதனால் விளைந்த மன அழுத்தமும், அதற்கான சிகிச்சையும் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தன. 2003-ல் அவர் காலமானார்.

தமிழ்ச் சிறுகதையுலகுக்குச் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கும் கோபிகிருஷ்ணன், நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் சலிப்பை, வெறுப்பை, மன அதிர்ச்சியை மிக்க வீரியத்துடன் தனது படைப்புகளில் பதிவு செய்துள்ள முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.

அரவிந்த்

© TamilOnline.com