தென்றலில் இசைக்கலைஞர்கள்
பத்தாண்டுக் காலத்தில் எண்ணற்ற வளரும், வளர்ந்த, மிகப்பிரபலமான கலைஞர்களைத் தென்றல் நேர்காணல் செய்து வெளியிட்டு வந்துள்ளது. அவற்றிலிருந்து பொறுக்கி யெடுத்த சில முத்துக்கள்:

*****

டி.வி. கோபால கிருஷ்ணன் (தென்றல், மே 2001)
இசைக்கு வயசே கிடையாது. ஆர்வம்தான் தேவை. எந்த வயதிலே ஆர்வம் ஏற்பட்டாலும், இசையைப் பற்றிக் கொஞ்சம் அறிந்திருந்தாலும் கற்றுக்கொள்ள முயற்சி இருந்தால் போதும். இசையை நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். இது முதலாவது. இராண்டாவதாக ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்கு எந்த விதத்தில் கற்றுக் கொடுத்தால் ஆர்வமாகக் கற்றுக் கொள்வார்கள் என்று தெரிந்து அந்த முறையில் கற்றுத் தரவேண்டும். முதல்லே ஸரிகம என்று கற்றுக் கொடுத்து அவர்கள் உயிரை வாங்கினால் இதிலே அவர்களுக்கு சொரத்தே இருக்காது. பாடல் நிகழ்ச்சிகளில் பாடும் குழந்தைகளைப் பாடவைக்க வேண்டும். அதேபோல் வயதானவர்கள் இசை கற்றுக்கொள்ள வேண்டுமென்று வந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இசை நிகழ்ச்சிகளைச் செய்து பேரும் புகழும் அடைவதற்காக வருகிறார்கள் என்ற எண்ணமும் நமக்கு இருக்கக் கூடாது. அதனால் அவர்கள் எந்த அளவுக்கு முயற்சி எடுக்க முடியும்; எந்த அளவிற்கு உழைக்க முடியும் என்று தெரிந்து கொண்டு, அந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

*****

கீதா பென்னட் (தென்றல், டிசம்பர் 2001)
நான் செய்யும் எல்லாவற்றையும் மிக நேசித்துச் செய்கிறேன். இசை என் தந்தையின் வழி எனக்கு வந்தது. நான் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் ஆக இருந்த காலத்தில் மதிய உணவு இடைவேளை அரை மணி நேரம். ஓடிப்போய் புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு கதை எழுதுவேன். சங்கீத மானாலும் சரி, கதையானாலும் சரி எளிமையாக இருக்க வேண்டும் என்று அப்பா சொல்லுவார். அதுதான் மக்களைச் சென்றடையும். படிப்பவர்களுக்குப் புரியவே கூடாது அல்லது அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அதை நான் ஒப்புவதில்லை. எளிமையாக எழுதுவது கடினம்.

*****

சுகுணா புருஷோத்தமன் (தென்றல், பிப்ரவரி 2002)
காலையில் நான்கு மணியிலிருந்து பாட்டுப் பயிற்சி செய்வேன். அதற்குப்பின், சிறிது நேர காபி இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு சில மணி நேரம் கீர்த்தனை கள், ராகம் பாடுவது போன்ற முக்கியமான உயர்நிலைப் பாடாந்திரங்களைப் பயிற்சி செய்வேன். அதற்குப்பின் காலை பத்து மணி போல, செம்மங்குடி மாமா வகுப்புக்குச் சென்றுவிடுவேன். அந்த வகுப்பிற்குப்பின், மதியம் மூன்று மணிபோல், முசிறி மாமா வின் வகுப்பு. அதற்குப்பின் பயிற்சி அல்லது கச்சேரி பாடுதல் அல்லது கேட்பது என்று முழு நேரமும் இசையில்தான் கழிந்து கொண்டிருக்கும். அதுபோக, நானும் அந்த சமயத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டேன். மாலை நேரங்களில் என்னுடைய வகுப்புகள் இருக்கும்.

*****

உன்னிகிருஷ்ணன் (தென்றல், ஆகஸ்ட் 2002)
‘பாரத ரத்னா' டாக்டர் எம்.எஸ். சுப்பு லட்சுமி அவர்களின் கேஸட் வெளியீட்டு விழா 1990ல் மியூசிக் அகாடமியில் நடந்தது. இறைவணக்கம் பாடவேண்டிய பாடகர் வராமல் போகவே, கடைசி நிமிஷத்தில் எனக்குக் கிடைத்த அழைப்பை ஏற்று நான் இறைவணக்கப் பாடல் பாடினேன். இது மேடைக்கச்சேரி இல்லையென்றாலும், முன் அறிவிப்பு ஏதுமில்லாமல், நான் மேடையில் பாடிய 'நாசிகாபூஷணி' ராகப் பாடலைக் கேட்ட எம்.எஸ். அவர்கள் என்னை அழைத்துப் பாராட்டி ''நீ மிகப் பிரபலமாக வருவாய்'' என்று வாழ்த்தி ஆசிர் வதித்ததை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்கும். அதே போல் காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெறச் சென்றபோது அவர், தொடர்ந்து மூன்று நாட்களாக மூடிய அறைக்குள் இருப்ப தாகவும் யாருக்கும் தரிசனம் தரவில்லை என்றும் அறிந்தோம். காமாட்சி அம்மனைக் குறித்து நான் ஒரு பாடலை மனமுருகிப் பாடினேன். பாடலை முடிப்பதற்குள்ளாகவே வெளியே வந்து தரிசனம் தந்தார் பரமாசாரியார். இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வரும் போதெல்லாம் என் உடல் புல்லரிக்கும்

*****

அருணா சாயிராம் (தென்றல், அக்டோபர் 2003)
காளிங்க நர்த்தன தில்லானாவை நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் முதலில் என் அம்மாவுக்குத்தான் சொல்லிக் கொடுத்தார். நான் அதைக் கேட்டிருக்கிறேன். அதை எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு முன் என் அம்மா மறைந்து விட்டார். பிறகு, என் நினைவில் உள்ளதை வார்த்தைகளை மாற்றாமல் கச்சேரிக்கு வழங்கும் விதத்தில் அமைத்தேன். முதலில் ஐரோப்பாவில்தான் பாடினேன். சம்பிரதாயமான தில்லானாவிலிருந்து வேறுபட்டு சொற்கட்டுக்களை கொண்ட இதை சென்னையில் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கத்தினால் முதலில் பாடவில்லை. ஆனால், சென்னையில் முதலில் பாடியபோது பெற்ற வரவேற்பை இன்றும் என்னால் மறக்க முடியாது. கச்சேரியில் கடைசிப் பாடலாக அதைப் பாடியப்பின், ஒரு முப்பது நிமிடத்திற்கு மேடையிலிருந்து இறங்க முடியாமல் கூட்டம் நெருக்கி விட்டது. அந்த இடத்திலேயே ஒரு ரசிகர் எனக்கு தன் நவரத்தின மோதிரத்தை அளித்தார். பிறகு நடந்த ஒவ்வொரு கச்சேரியிலும் இந்தத் தில்லானா என் கச்சேரியின் சிறப்பு அம்சமாக அமைந்துவிட்டது

*****

உமையாள்புரம் கே. சிவராமன் (தென்றல் ஜனவரி 2002)
பத்து வயதில் எனக்கு அரங்கேற்றம் நடந்தது. அப்போதிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெரிய பெரிய வித்வான்களுக்குத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அந்த மகா வித்வான்களுக்காக நான் வாசித்த அந்த நாட்கள்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். கர்நாடக சங்கீதத் துறையில் இப்போது எனக்கென்று ஒரு இடம் இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் அவர்களுக்கு நான் வாசித்ததுதான். அந்த மகா வித்வான்கள் வித்தை யாரிடம் இருந்தாலும் அவர்களைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பார்கள். என்னிடம் வித்தை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட அந்த வித்வான்கள் எனக்கு நிறையக் கச்சேரிகள் தந்து என்னை வளர்த்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்குக் கிடைத்த எல்லா விருதுகளுக்கும் காரணம்.

*****

டி.என். சேஷகோபாலன் (தென்றல், பிப்ரவரி 2004)
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கம்ப ராமாயண இசைக்கச்சேரிகள் செய்திருக்கிறேன். கம்பராமாயணத்தில் இசை அனுபவம் என்பதைப் பற்றி விளக்க நிகழ்ச்சிகளும் அளித்திருக்கிறேன். சங்கம் அமைத்த மதுரை யில் என்னுடைய இளமைக்காலம் அமைந்த தால் தமிழ் இலக்கியங்களின் சிகரமாகிய கம்ப ராமாயணம் படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நிறையக் கம்பன் விழாக்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை இது தூண்டியது. தவிர, நிறையப் பிரவசனங்கள், ஹரிகதைகள், உபன்யாசங்கள் கேட்கச் சந்தர்ப்பம் அமைந்தது. என்னுடைய ஆறு வயதிலிருந்து பதினாறு வயது வரை காலம்சென்ற புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண ஸ்வாமிகளின் நாமசங்கீர்த்தன பத்ததிகளில் அவருடன் ஈடுபடும் பாக்கியம் பெற்றதால், அதுவே என்னுடைய இசைக்கும் அஸ்திவார மாக அமைந்திருக்கிறது. காலம்சென்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் நிகழ்ச்சி களுக்கு என்னுடைய 8 வயதில் ஹார் மோனியம், பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.

*****

மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (தென்றல், மார்ச் 2004)
மாண்டலின் கருவி இத்தாலியைச் சேர்ந்தது. இங்கே சுமார் 60 வருடங்களாக உள்ளது. மாண்டலின் மூலம் கர்நாடக இசையை வாசிக்கும் பெருமையை நான் பெற்றேன் என்றே சொல்ல வேண்டும். வீணை, வயலின் என்று எல்லா இசைக்கருவிகளின் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுப்பதற்கென்று ஆசிரியர்கள் இருப்பதுபோல், மாண்டலினை எப்படி வாசிக்க வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. நான்தான் ஒவ்வொரு நிலையாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். எப்படி கமகம் வாசிக்க வேண்டும், எப்படிக் கீர்த்தனை வாசிக்க வேண்டும் என்று பல நுணுக்கங்களைத் தெரிந்துக்கொண்டேன். இன்று உலகம் முழுதும் என் மாணவர்கள் இருக்கிறார்கள்.

© TamilOnline.com