ராசி
"நாளைக்கு கல்யாணமாகிப் போய்ட்ட பிறகு எங்களயெல்லாம் மறந்துராத சரண்யா" உறவினர்கள் கலாய்த்தனர். சரண்யாவைப் பெண் பார்க்க மாலை மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. சரண்யாவுக்கு உள்ளூரச் சந்தோஷம்தான். வெளியில் காண்பிக்க வில்லை.

"பூ, பழம், தாம்பூலம் எல்லாம் சரியா எடுத்து வச்சாச்சா? எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க" மாப்பிள்ளை வீட்டார் வேனில் ஏறி அமர்ந்தனர். கிஷோரும் நேரில் பெண்ணைப் பார்க்க ஆவலாக இருந்தான்.

வேன் கிளம்பிப் போய்க் கொண்டி ருந்தது. எதிரில் ஒரு லாரி மிகவும் வேகமாக வந்தது. வேனில் மோதியது. வேன் டிரைவர் சுதாரித்துக் கொண்டதால் வேன் முன்புறத்தில் சிறிய அடியோடு தப்பித்தது.

"நல்லவேளை யாருக்கும் ஒண்ணும் ஆகல்லை. இந்தப் பொண்ணு ராசி இல்லாதவ. இதுவே ஒரு சகுனத் தடையா இருக்கு. இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிடுங்க" என்றாள் கிஷோரின் அம்மா. மற்றவர்களும் கோரஸில் சேர்ந்து கொண்டனர்.

கிஷோருக்குக் கோபம் வந்தது. "ஏம்மா இன்னும் பழைய பஞ்சாங்க மாகவே இருக்கீங்க? இன்னும் அந்தப் பெண்ணை பாக்கவே இல்லை. அதுக் குள்ள அவளை ராசி இல்லாதவங்கறீங்க. லாரி வந்த வேகத்துக்கு நேரா மோதி யிருந்தா நாம யாருமே உயிர் பிழைச் சிருக்க மாட்டோம். பெரிய விபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம். அதுக்குக் காரணம் அந்த பொண்ணோட ராசின்னு சொல்லக் கூடாதா?"

வேறு வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் போனார்கள். அப்புறம் என்ன, கிஷோர், சரண்யா இருவருக்குமே கல்யாண ராசிதான்!

நாச்சா,
மேரிலாந்து

© TamilOnline.com