தமிழ்நூற்கடல் பண்டித கோபாலையர்
மழவை மகாலிங்க ஐயர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் தொடங்கி தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர்கள் பலர். அவர்களுள் தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆய்ந்து செம்பதிப்பாகக் கொணர்வதையே தமது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு உழைத்தவர் பண்டித தி.வே. கோபாலையர். 'தமிழ்நூற்கடல்' என்றும் 'தமிழ்ப் பேராசான்' என்றும் தமிழறிஞர்களால் போற்றப்படும் தி. வே. கோபாலையர், ஜனவரி 22, 1926 அன்று, திருவையாற்றில் வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகத் தோன்றினார். சரஸ்வதி அம்மாள் கலாசாலையில் தொடக்கக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வி சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில். ஆரம்பத்தில் சமஸ்கிருதத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்றவர், தந்தையாரும் தமிழாசிரியரும் கூறியதைக் கேட்டுத் தமிழை முதற்பாடமாகக் கொண்டார். பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கோபாலையரைச் சேர்க்க விழைந்த குடும்பத்தினர், அதற்கு முன் காஞ்சி மகா பெரியவரிடம் ஆசிபெறச் சென்றனர். அவரோ, கோபாலையர் உயர்கல்வியாகத் தமிழைத் தான் படிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறி ஆசிர்வதித்தார். அவரது ஆலோசனைப்படி திருவையாறு அரசர் கல்லூரியில் கோபாலையர் சேர்க்கப்பட்டார். அங்கே கரந்தைக் கவியரசர் வேங்கடாசலம் பிள்ளை, சோமசுந்தர தேசிகர், புருஷோத்தம நாயுடு, சி. இலக்குவனார், இராமசாமிச் செட்டியார் போன்றோர் ஆசிரியர்களாக விளங்கினர். அவர்களிடம் பயின்றும், தாமாகவே விருப்பத்தின் பேரில் பல நூல்களை வாங்கிச் சுயமாகக் கற்றும் முதல் வகுப்பில் தேறினார். 'வித்வான்' பட்டமும் பெற்றார். அவரது அறிவுத்திறம் கண்டு வியந்த தமிழறிஞர் மு. ராகவையங்கார், திருவனந்தபுரத்திற்கு வந்து தம்முடன் சேர்ந்து தமிழாய்வு செய்ய அழைத்தார். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக கோபாலையர் அதனை ஏற்கவில்லை.

படிப்பு முடிந்ததும் தஞ்சாவூரில் உள்ள செயின்ட் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஓராண்டுக் காலம் அங்கே பணியாற்றினார். பின், 1946ல் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். அது ஆசிரிய வாழ்வில் திருப்புமுனை ஆனது. அங்கே சக ஆசிரியர்கள் சிலரின் எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த போதும் அவை அவரது அறிவின் மேன்மையை அனைவருக்கும் விளங்கச் செய்தன. அக்காலத்தில் இவரிடம் பயின்ற மாணவர்கள் பிற்காலத்தே மிகச்சிறந்த தமிழறிஞர்களாக உருவாகினர்.

1949ல் கோபாலையருக்கு ருக்மணி அம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. ராமச்சந்திரன், புஷ்கலா என்ற இரு மகவுகள் வாய்த்தன. தமிழார்வத்தால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும், ஆனர்ஸ் பட்டமும் பெற்றார். ஆனால் கல்லூரி நிர்வாகம் இவரை ஊதியத்தைக் காரணம் காட்டி பணியிலிருந்து விலக்கியது. பின்னர் சேலம் குருசாமிபாளையத்தில் கல்விப்பணி மேற்கொண்டார். பின் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய 'பண்டிதர்' தேர்வெழுதி அதில் முதல் மாணவராகத் தேர்ச்சியும் பரிசும் பெற்றார்.

இந்நிலையில் திருவையாற்றில் உள்ள அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்குமாறு ஐயருக்கு அழைப்பு வந்தது. 1965ல் அப்பொறுப்பை ஏற்று, தாம் பயின்ற கல்லூரியிலேயே முதல்வராக வாழ்க்கையைத் துவக்கினார். அதுகாறும் பள்ளிகளில் பணியாற்றியவர் என்பதாலும், அவரது நிகரற்ற கல்வியறிவையும், நுண்மான் நுழைபுலத்தையும், மாணவர்களிடத்தே அவருக்கிருந்த செல்வாக்கையும் கண்டு அச்சமேற்பட்டதாலும் சக ஆசிரியர்கள் சிலர் சூழ்ச்சி செய்து அவர் மீது பல குற்றங்களைச் சுமத்திப் பணியிலிருந்து நீக்கப்பட வழி வகுத்தனர். ஆனாலும் மனம் சலிக்காமல் தொடர்ந்து ஊக்கத்துடன் பணியாற்றினார் கோபாலையர். கிடைத்த நேரத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களின் மீது கவனம் செலுத்தினார். நூல்கள் பலவற்றை ஆராய்ந்து வெளியிட்டதுடன் பல கட்டுரைகளையும் எழுதினார். இலக்கண விளக்கம் நூல் முழுமைக்கும் விரிவான விளக்கம் எழுதி, அதைத் தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடாகப் பதிப்பித்தார். இந்நிலையில் மீண்டும் அரசர் கல்லூரியில் பணியாற்ற அவர் அழைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்பதை விரும்பாத கோபாலையர், தமக்கு மிகவும் விருப்பமான ஆசிரியர் பொறுப்பையே ஏற்றுக் கொண்டார். பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.

இந்நிலையில் புதுவையில் உள்ள Ecole Francaise d'Extreme-Orient (EFEO) என்ற பிரெஞ்சு நிறுவனம், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் மூலம் கோபாலையரைப் பற்றி அறிந்தது. அதன் தலைவராக இருந்த பிரான்சுவா க்ரா அவர்கள், ஏற்கனவே கோபாலையரின் திறமையைப் பற்றி நன்கறிந்தவராதலால் ஐயரைத் தங்களோடு இணைந்து பணியாற்ற அழைத்தார். அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட கோபாலையர், 1979 முதல் அங்கு ஆசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், நூல் பதிப்பாளராகவும் பணிபுரியத் தொடங்கினார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தார். தேவாரத்தை டிஜிடைஸ் செய்யும் பணியில், பண் முறைப்படியும், ராக அடிப்படையிலும் தேவாரம் முழுவதையும் இசை வடிவத்தில் பதிப்பிக்கும் பணியில், ழான் லூய்க் செவியாடிற்கு (Jean-Luc Cheveillard) மிக உதவியாக இருந்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பிற மொழிகளுக்குப் பெயர்ப்பதில் ஆர்வம் காட்டினார். அதில் மாணவர்களுக்கு வழிகாட்டினார். பேராசிரியராக மட்டுமல்லாமல், சிறந்த ஆய்வறிஞராகவும், பதிப்பாசிரியராகவும் விளங்கியதால் சிறந்த தமிழறிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட்டார்.

கோபாலையர் செய்த பணிகளில் மிக முக்கியமானது பல இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பித்ததும், புத்துரை ஆக்கி அவற்றை அளித்ததும் ஆகும். குறிப்பாக, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்திற்காக, இவர் பதிப்பித்த, இலக்கண விளக்கம் (7 தொகுதிகள்), இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், வண்ணத்திரட்டு போன்ற நூல்கள் அவரது புலமைக்குச் சான்றுகள். இவர் பதிப்பித்த வீரசோழிய உரை, தேவார ஆய்வு, கம்பராமாயணத்தில் முனிவர்கள், கம்பராமாயணத்தில் தம்பிமார்கள், கம்பராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் போன்ற நூல்கள் மிக முக்கியமானவை. இவரது சகோதரர் தி.வே. கங்காதரனும் ஒரு தமிழறிஞர். கோபாலையருடன் இணைந்து பல நூல்களைப் பதிப்பித்துச் சிறந்த உரையாசிரியராக விளங்கினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மணிமேகலைக் காப்பியச் செம்பதிப்புப் பணியை ஏற்றுத் திறம்படச் செயலாற்றினார் கோபாலையர். தொல்காப்பியம் செம்பதிப்பு - 14 தொகுதிகளையும் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டார். மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பும், சேனாவரையம் பிரெஞ்சு மொழி பெயர்ப்பும், 'சோழர் காலக் கலைப்பணி' ஆங்கில நூலின் தமிழாக்கமும் இவரது அரும்பணியால் உருவானவையே.

ஊதியத்திற்காக அன்றித் தமிழ்ப் பற்றின் காரணமாகவே இப்பணிகளை எல்லாம் மேற்கொண்டார். 2005இல் கலிபோர்னியாவில் வெளியிடப்பட்ட சீவக சிந்தாமணி 1-1165 பாடல்களின் மொழிபெயர்ப்புக்குப் பெருமளவு உதவியவர் தி.வே. கோபாலையர்தான் என அந்நூலின் மொழிபெயர்ப்பு ஆசிரியர் ஜேம்ஸ் டி ராயன் குறிப்பிட்டுள்ளார். இணை ஆசிரியர் என்று தாம் கோபாலையரைக் குறிப்பிட விரும்பியதாகவும், ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டதாகவும் ராயன் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்தே கோபாலையரின் பெருமையையும், பெருந்தன்மையையும் உணர்ந்து கொள்ள முடியும்.

கோபாலையர் நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்தவர். தமக்கெனச் சில கொள்கைகளை அவர் வைத்திருந்தார். முன்பே அச்சில் வந்தவற்றை மீண்டும் அப்படியே வெளியிட்டுவிட மாட்டார். அவற்றை முதலில் பிழையின்றிப் பதிப்பிக்கப்பட்டுள்ளனவா என்று பார்ப்பார். பின்னர் அவற்றின் மூல ஓலைச்சுவடிகளைத் தேடி ஒப்பு நோக்குவார். குறைகள் இருப்பின் களைந்து, தேவைப்படும் இடங்களில் விளக்கங்கள் எழுதி, மீண்டும் ஒருமுறை ஒப்பு நோக்கிச் சரிபார்த்து பின்னரே நூலாக வெளியிடுவார். எந்தவிதத்திலும் நூலில் பிழை நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கன. இப்பாங்கு அரிதினும் அரிதான ஒன்று என்பது சக தமிழறிஞர்களின் கூற்று. சான்றாக அதுகாறும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் "கராத்தின் வெய்யது தோள்" என்றே பதிப்பிக்கப்பட்டு வந்த வரிகளை, "அது தவறு, அது 'காரத்தின் வெய்யது தோள்' என்று இருக்க வேண்டும். ஏடெழுதுவார் செய்த பிழையால் 'கராத்தின்' என்று அச்சாகி விட்டது" என்று விளக்கியிருக்கிறார். அது போல நான் என்பதற்கு நாம் என்பது பன்மை போல 'நின்' என்பதற்கு பன்மை 'நீம்' என்பதைச் சீவக சிந்தாமணி சான்று கொண்டு காட்டியிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளிலும் கோபாலையர் வல்லவர். குறிப்பாக வடமொழியில் இவருக்கிருந்த அறிவு, நூல் பதிப்புத் துறையில் வெகுவாக உதவியது. தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வடமொழி இலக்கண மரபு பயின்று வரும் இடங்களிலெல்லாம் மிகச் சிறப்பாக உரை விளக்கம் அளிக்க அது பயன்பட்டது. இலக்கண, இலக்கியங்கள் மட்டுமல்லாது சமய நூல்களிலும் இவர் ஈடு இணையற்ற புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். வைணவ இலக்கியங்களில் இவர் செய்திருக்கும் ஆய்வுகள் இவரது நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுவன. திருப்பதிக் கோவை பற்றி ஆய்வு செய்திருக்கிறார். வைணவத் தமிழ் அகராதியைத் தயாரித்தளித்திருக்கிறார். அளவற்ற நினைவாற்றல் கொண்டிருந்த கோபாலையருக்கு தேவாரம், திவ்யப் பிரபந்தம் மட்டுமல்லாது இராமாயணத்திலும், சீவகசிந்தாமணியிலும் ஈடுபாடும் புலமையும் இருந்தன. பல பாடல்களை உரை விளக்கத்துடன் அடி பிறழாமல் ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.

இதழ்களில், கல்லூரி மலர்களில் இவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் முக்கியமானவை. பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சிறப்புரைகள், சொற்பொழிவுகள் கவனம் பெற்றவை. இவரது இலக்கண நூல்கள் சிலவற்றை தமிழ்மண் பதிப்பகம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் திரு.வி.க. விருது, புதுவை அரசின் கலைமாமணி, திருப்பனந்தாள் மடத்தின் சைவ நன்மணி, தருமபுர ஆதீனத்தின் செந்தமிழ்க் கலாநிதி உட்படப் பல்வேறு விருதுகளை கோபாலையர் பெற்றுள்ளார்.

கோபாலையர் மிகவும் அடக்கமானவர். அன்போடும், பணிவோடும் நடந்து கொள்பவர். மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். வெளிநாட்டு மாணவர்கள் பலரை ஊக்குவித்துத் தமிழ் பயிற்றியிருக்கிறார். கோபாலையரின் நூல்களை மட்டும் ஒருவர் முழுமையாகப் படித்தால் அவர் தேர்ந்த இலக்கண விற்பன்னர் ஆகிவிடலாம் என்பது அவரது மாணவர்களின் கூற்று. நடமாடும் கலைக்களஞ்சியம் என்று ஐயர் அறிஞர்களால் போற்றப்பட்டார். கோபாலையரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பரவி சிறந்த நிலையில் இருக்கின்றனர் என்பதே அவரது பெருமைக்குச் சான்று.

நூல் ஆராய்ச்சியாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என்று பன்முகத் திறமை கொண்ட மொழிப்புலவராக விளங்கிய பண்டித கோபாலையர் ஐயர், தமது 82ம் அகவையில் ஏப்ரல் 01, 2007 அன்று ஸ்ரீரங்கத்தில் காலமானார். இறுதிவரை தமிழ் ஆய்விலும் பதிப்பிலுமே காலம் செலவழித்து, தமிழ் இலக்கண, இலக்கியத்திற்கும், சமய நூல்களுக்கும், உரை நூல்களுக்கும் வளமும் நலமும் சேர்த்த பண்டித கோபாலையர், தமிழர்கள் என்றும் நினைந்து போற்றத்தக்க ஒரு முன்னோடி.

(நன்றி: The life of T.V. Gopal Iyer, R. Ilakuvan)

பா.சு.ரமணன்

© TamilOnline.com