ஜனவரி 2011: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
பத்தாண்டைக் கடந்த தென்றலின் முதல் 30 இதழ்களில் அதற்கு முன் ஆறாம்திணை இணைய இதழில் 100 வாரங்களைத் தாண்டி வெளிவந்த குறுக்கெழுத்துப் புதிர்களிலிருந்து இடம்பெற்றன. சென்னையில் தென்றலைக் காணாததாலும் வாரமொரு புதிரை இடுவதற்குப் பதிலாக மாதமொரு புதிரில் சுவாரசியமில்லாததாலும் நான் அதைப்பற்றி ஆரம்பத்தில் அதிகம் நினைக்கவில்லை. ஆனால் 2003ஆம் ஆண்டில் தென்றல் புதிருக்கு வரவேற்பிருப்பதாகத் தெரிந்து கொண்டபின் பழையது வேண்டாம் புதுசாகச் சுடச்சுடச் செய்து தருவதாகப் பதிப்பாசிரியருக்கு வாக்களித்தேன். அதுபோல் இப்போது ஏழாண்டுகளுக்கும் மேலாகத் தென்றலுக்கெனவே உருவாக்கப்பட்ட புதிர்கள் உங்கள் ஆர்வத்தால் தொடர்ந்து வெளிவந்துள்ளன. இன்னமும் சில மாதங்களில் 200வது புதிரும் வெளிவந்துவிடும். மின்னஞ்சலில் தொடர்ந்து வந்த பாராட்டுகள், தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆர்வம் இவையெல்லாம் இதற்கு உறுதுணையாக இருந்தன. இந்தப் புத்தாண்டில் உங்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகளோடு ஊக்குவித்ததற்கு நன்றியும்.

குறுக்காக:
5. கட்டியவனே அடையாளமிடு (2)
6. கார்த்திகேயன் கதை சொல்லும் காவியம் இரண்டெழுத்து போய்ச் சிதைந்தாலும் ஒரு பரம்பரையின் காவியம் (6)
7. சிவராத்திரிக் கொண்டாட்டத்தில் நெற்றிக்கண்ணால் பாதிப்பில்லையெனச் சொல்லும் கட்சி (4)
8. நடு இறைச்சி கடைக் கன்று (3)
9. தெய்வத்திற்கு முன்பு கங்கைக் கரையூர் திரும்ப அமெரிக்க மாநகர் (3)
11. மணமிகு மரிக்கொழுந்து செருகிய இளம்பெண் (3)
13. கழுத்து தலை சிக்கும்படி அடி, அதனால் நன்மையில்லை (4)
16. இரைச்சல் குப்பையை ஒதுக்கித் தள்ளும் கருவி? (6)
17. தலைவைத்துப் படுக்கச் சுகமான இடத்தில் செத்தொழி (2)

நெடுக்காக:
1. புகலிடம் தேடி வந்தவனை மாற்றி ஒரு ஸ்வரம் சேர்த்துக் கூட்டு (4)
2. சஷ்டியிலிருந்து ஒரு வாரம் அழகி மேலேற தர்மத்தலைவனை நெஞ்சிலிருத்தி எண்ணிப் பார் (5)
3. ஒரு மன்மதன் அம்பு பாத்திரம் (3)
4. சைரந்திரியின் மீதான வெறியால் மரணத்தை அடைந்தவன் (4)
10. மிச்சம் உள்ளே வைத்த கனிகோடி பாதியாகக் கொழுந்துவிடும் சினம் (5)
12. உயரக் கொடியில் தோன்றியதைக் கொடியிடையாள் உயர்வான இடத்தில் வைப்பாள் (4)
14. கைவிட்ட கணிகை மண்ணோடு கலக்க இமை காக்கும் (4)
15. உராய்ந்து உறுத்து (3)

வாஞ்சிநாதன்

டிசம்பர் 2010 புதிர் விடைகள்

© TamilOnline.com