டிசம்பர் 2010: வாசகர் கடிதம்
11ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தென்றலுக்கு வாழ்த்துக்கள். ஒரு பரிபூரணமான, தரமான இதழை, அமெரிக்க மண்ணிலிருந்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகச் சிறப்பாக வழங்கிவரும் தென்றல் பதிப்பகத்தார், ஆசிரியர் குழு மற்றும் தென்றலில் தம்மை இணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமான பங்களிப்பைத் தொடர்ந்து அளித்துவரும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அச்சுப் பணியில் இருப்பவர்கள், ஓவியர்கள், விளம்பரதாரர்கள், இணயதள அமைப்பாளர்கள், அமெரிக்கா முழுமையும் தென்றல் புத்தகம் கிடைக்கச் செய்ய, கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் தளராது வினியோகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள அன்பர் பெருமக்களுக்கும் எனது பணிவான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அஞ்சலட்டையில் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கமே மறந்து போன அல்லது கடிதம் வந்தாலே அதை ஆர்வத்துடன் படிக்கும் இன்பமும் துறந்து போய்விட்ட இந்தக் காலத்தில், பார்த்ததும் படிக்கத் தூண்டும் வகையில் சிறப்பான முகப்பு அட்டைப்படம் வடிவமைப்பதிலிருந்து கடைசி அட்டைப் பக்கம் வரையில், தென்றலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளியாகும் பல்வேறு பகுதி சார்ந்த செய்திகளையும் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் வகையில் தரமாகப் படைத்து, ஒவ்வொரு மாதமும் ஆவலுடன் எதிர்பார்க்க வைப்பது மிகச் சவாலான செயல்; அதை 10 ஆண்டுகளாகத் தளர்வின்றி, சுவைகுறையாமல், உற்சாகத்துடன், அதுவும் கட்டணமின்றி விளம்பரதாரர்களின் உதவியுடன் மட்டுமே செய்து வருவது, உண்மையிலேயே உயர்வு நவிற்சியற்ற 'இமாலய சாதனை'. இதைத் தென்றலின் தொடக்க இதழ் முதல் இன்றுவரை விடாமல் படித்து வருபவன் என்ற அளவில், உறுதியாகக் கூற முடியும்.

உலகளாவிய சிந்தனையில் சிறப்பான தலையங்கம், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர் வாழும் எல்லா நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்ந்து வரும் பல எழுத்தாளர்களின் அறிமுகம், அவர்களது சிறந்த கதைகள், இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கல்வி, கலை, தொழில், ஆன்மீகம், மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த நம் முன்னோர்களை மீண்டும் நமக்கு அறிவிக்கும் 'முன்னோடி', அதே துறைகளிலும், வாணிகம், கணினி, பொதுச்சேவை போன்று மேலும் பல துறைகளிலும் இன்று சாதனை புரிந்து வரும் தமிழர் பெருமக்களை அறிமுகம் செய்யும் 'சாதனையாளர்', 'நேர்காணல்' , திரைகடல் கடந்து திரவியம் தேடவந்து மனச்சிக்கலையும் தேடிக்கொண்ட வாசகர்களின் மன இறுக்கத்திற்கு சித்ரா வைத்தீஸ்வரனின் 'அன்புள்ள சினேகிதியே', உடல்நலம் பேண மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சனின் 'நலம் வாழ', தமிழகத் திருக்கோவில்கள் மற்றும் பக்தி சார்ந்த செய்திகள் கொண்ட 'வழிபாடு', தமிழின் சொற்களஞ்சியங்களை அறிந்து கொள்ள 'குறுக்கெழுத்துப் புதிர்', கணினி மற்றும் அதைச் சார்ந்த வணிகவியல் குறித்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் 'கதிரவனைக் கேளுங்கள்', சமையல், சினிமா, அமெரிக்காவின் பல இடங்களிலும் நடைபெற்ற, நடைபெற இருக்கும் தமிழ் நிகழ்ச்சிகள் பற்றிய 'நிகழ்வுகள்', 'வாசகர் கடிதங்கள்' மற்றும் பல சிறப்பு அம்சங்களை ஒவ்வொரு இதழிலும் சிறப்பாக, முகம் சுளிக்காத வகையில் மிகத் தரமாக, குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஆர்வமாக வாசிக்கும் வண்ணம் வழங்கி வரும் அனைவருக்கும், தமிழ்கூறும் நல்லுலகம், குறிப்பாக அமெரிக்கா–கனடா வாழ் தமிழர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தரமான காகிதத்தில், தரமான பலவண்ண அச்சுக்கலவையில், எழுத்துப் பிழை அல்லது அச்சுப் பிழைகளின்றி, செய்திகளிலோ, விளம்பரங்களிலோ அல்லது படங்களிலோ ஆபாசமின்றி கவனமாக, கண்ணியமாக வெளியிடுவதில் தென்றல் குழுவினர் சிரத்தையுடன் இருப்பதை அவசியம் பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய பல்சுவை மிக்க 'தென்றலை' இணயதளத்திலும் வெளியிட்டுவருவதின் மூலம், பல வார – மாத இதழ்கள் கடைகளில் கிடைத்த போதும், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்தும், உலகின் பல பகுதிகளிலும் இருந்தும் 'தென்றலை' இணைய தளத்தில் வாசிக்கும் வாசகர்களின் பேரார்வம் மிகவும் பிரமிப்பூட்டுகிறது. குறுக்கெழுத்துப் புதிர் பகுதி மற்றும் வெளிவரும் வாசகர் விபரங்களைப் பார்த்தால் இந்த உண்மை புலப்படும்.

இந்த இனிய சந்தர்ப்பத்தில் ஒரு வேண்டுகோள்: கடந்த பத்தாண்டுக் காலத்தில் வெளிவந்த, 'நேர்காணல்', ' சாதனையாளர்கள்', 'முன்னோடி', 'எழுத்தாளர்', 'அன்புள்ள சினேகிதியே', ' நலம் வாழ' போன்ற பகுதிகளை, தனித்தனித் தொகுப்பு நூலாக வெளியிட்டால், எதிர்வரும் தலைமுறைக்கும் பயன்படும் மிகப் பெரிய பொக்கிஷமாக அமையும். இதற்கு ஏராளமான நிதி தேவைப்படும் என்பதால், தென்றல் குழுவினருடன் தமிழ்ச் சங்கங்கள், பெரும் தனவந்தர்கள் முன்வந்து இப் பணிக்கு ஆதரவளிப்பது, தமிழை, தமிழ்க் கலாசாரத்தை வளர்க்க ஆதரவளிப்பதாக அமையும்.

சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

*****


நானும் என் மனைவியும் இதுவரை மூன்று முறை அமெரிக்கா வந்திருக்கிறோம். நாங்கள் தென்றலின் ரசிகர்கள். ஒவ்வொரு மாதமும் 4, 5 தேதிக்குள் கடைக்குச் செல்வோம். முதலில் பிரதியை எடுத்துக் கொண்டுதான் பிற பொருட்களை வாங்குவோம். ஒரு வாரம் கழித்துச் சென்றால் தென்றல் பிரதிகள் கிடைப்பதில்லை.

ஒருசமயம் ஒருவர் இரண்டு பிரதிகள் எடுத்தார். நான் அவர் தவறாக இரண்டு பிரதிகளை எடுத்துவிட்டார் என்றெண்ணி அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒரே பிரதியை வைத்துக்கொண்டு தானும் மனைவியும் ஒரே சமயத்தில் படிக்க முடியாதென்பதால் ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்வதாகக் கூறினார். அவ்வளவு அபிமான ரசிகர்கள் தென்றலுக்கு இருக்கிறார்கள்.

நவம்பர் இதழில் வந்துள்ள கோபுலுவின் நேர்காணல், தஞ்சை கோயில் பற்றிய கட்டுரை அருமை. இந்திய-அமெரிக்கர்களின் அரசியல், நிர்வாகத் திறமைகள் பற்றியும் தென்றல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மிகவும் பெருமையாக இருக்கிறது. க்ரேசி மோகன் வேலையை விட்டதற்குச் சொன்ன காரணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. நாங்கள் மிகவும் ரசித்துப் படிக்கும் பத்திரிகை தென்றல்.

ராஜாராகவன்,
ராக் அவென்யூ, கலிபோர்னியா

*****


பத்தாண்டு முன்னே, இந்த விரிகுடாவில்
உதித்த தென்றல் அன்றே அழகுறப் பேசி
உள்நாட்டு, தாய்நாட்டு அரசியலை அலசியது
ஆன்மீகத்தை அருமையாய் எடுத்தோதியது.
தலயாத்திரை செய்வித்தது.
நாடுவிட்டு வந்த நம்மவர் மனம் நிறைக்க,
நம் மண்ணின் மாந்தரை அறிமுகப்படுத்தியது.
துறை பல கண்டோரை
பெருமைப்படுத்திப்
பேட்டி வெளியிட்டது.

புதிதாகப் பேனா பிடித்தவர்க்கும்
தெம்பளித்து ஊக்கியது.
சின்னஞ்சிறார்க்கு எளிமையாய்த்
தமிழமுதூட்டும் ஆசானாகியது.

கவலை பலவற்றுக்கும் எளிதாகத்
தீர்வு காட்டும் சினேகிதியானது.

சிறுகதை உருத்தேய்ந்து
அஞ்சல்தலை அளவே ஆகிவிட்ட இன்றும்
அருமையான சிறுகதைகளை
எமக்களித்து மகிழ்விக்கிறது.

இந்த இளம் தென்றல் எடுத்த
அவதாரங்கள் எத்தனையோ!

தென்றலே!
பத்திலிருந்து பதினொன்றில்
நுழைந்திடும் நீ, என்றுமே
பத்தோடு பதினொன்றாய் இருக்க மாட்டாய்.
உன் தனித்துவமும், மகத்துவமும்
ஏனைய பத்திரிகைகளுக்கே
சவாலாக அமையும்.

இரட்டை இலக்கம் எட்டிய நீ
மூன்று இலக்கம் கண்டும்
புகழுற விளங்குவாய்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான்ஹோஸே, கலிபோர்னியா

*****


பத்தாண்டுகளை செம்மையாகக் கடந்த தென்றலுக்கு, பலே. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

முதன்முதலில் தென்றலை இந்த அக்டோபரில்தான் கண்டேன். 100 சதவீதம் பயணிக்கும் வேலையாயினும், இதழின் பக்கங்கள் எமக்கு இதமளிக்கும் விதமாக இருப்பதால், நவம்பரில் தீவிர விசிறியாகி விட்டேன். எனது கன்னி முயற்சியாக, குறுக்கெழுத்துப் புதிரின் விடை காண விழைந்தேன்.

மதுரை வெங்கி
(மின்னஞ்சலில்)

© TamilOnline.com