லாரா ஏன் அழுதாள்
அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நம் உதவிக்கு வேலை செய்பவர்களை (Housekeeper, baby sitter) நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக நினைக்காமல், நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மற்றொரு பிறவி என்ற நினைவுடன், மனிதாபிமானத்துடன் சமத்துவமாக நினைத்து நடப்பதுதான். "அடடா... இந்தியாவில் இருந்த போது நமக்கு ஏன் இதுபோல் நினைக்கத் தோன்றவில்லை" என்ற குற்ற உணர்வு வருவது இயல்பு.

பிரின்ஸ்டன், நியூஜெர்சி. என் பெரிய பெண்ணிடம் இருக்கும் நேரம். (நாடாறு மாதம் காடாறு மாதம் என்றால் எது நாடு எது காடு என்ற பிரச்சினை வரும். அப்படி இல்லாத புதுமொழி ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்). கதைக்கு வருவோம்.

''லாரா மணி ஒன்றரை ஆகிறது. லஞ்ச் சாப்பிடவா.. எனக்குப் பசிக்கிறது'' என்று குரல் கொடுத்தேன். லாரா என் மகள் சுபாவின் வீட்டு ஹவுஸ் கீப்பர். காலை 9 மணிக்கு வந்தால் மாலை 6 மணிவரை, ஒரு நிமிஷம் உட்காராமல் பார்த்துப் பார்த்து பொறுப்பாக வேலை செய்வாள். இரவு 10 மணிக்கு அவளை அவள் வீட்டில் கூப்பிட்டு "மோக்காவுக்கு (எங்கள் செல்ல நாய்) கடைசி டோஸ் மருந்து கொடுத்து விட்டாயா?" என்று கேட்பதிலிருந்து காலை 7 மணிக்கு பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் என் பேரன் ஜே கூப்பிட்டு ''என் ஜிம் டிரஸ் எங்கே?" என்று கேட்பது வரை அந்த வீட்டின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணி.

லாராவின் வயது முப்பதுகளில். சிரித்த முகம். சிறுவணையான உடல்வாகு. பழுப்பு நிறத்தில் அலையான கூந்தல். எளிமையான, நாகரீகமான நடை, உடை, பாவனைகள். அவள் கோபித்துப் பார்த்ததில்லை.

என் பேரக்குழந்தைகள் போல அவளும் என்னைப் பாட்டி என்றுதான் அழைப்பாள். தமிழ்ச் சமையல் ரொம்ப பிடிக்கும். சாம்பார் செய்யக் கற்றுக்கொடுத்தேன். நான் கலி·போர்னியாவில் சின்னப்பெண்ணிடம் இருக்கும் போது போன் செய்து ''பாட்டி நீங்கள் சொன்னது போலவேதான் சாம்பார் செய்தேன். உங்களுடையது மாதிரி வாசனை வரவில்லை'' என்பாள். நானும் அவளும் மதிய உணவு சேர்ந்துதான் சாப்பிடுவோம். அளவாக, ரசித்து, ருசித்து சாப்பிடுவாள்.

அன்று காலை லாரா வரும் முன்னே ஷாப்பிங் போய்விட்டு வந்து அவசரமாகச் சமையல் செய்ததில் அவளை கவனிக்க வில்லை. சாப்பிட உட்கார்ந்ததும் நிதானமாகப் பார்த்தேன். முகம் வாடி இருந்தது. காரணம் கேட்டேன். கண்ணீர் பெருக்கினாள். சாப்பிட்ட பிறகு விஷயத்தைச் சொல்லு என்று மெளனமாகச் சாப்பிட்டோம். அவளுக்குப் பிரியமான மோர்க் குழம்பு. சாப்பிடும் போதெல்லாம் பாராட்டுவாள். அன்று என்ன சாப்பிட்டோம் என்று இருவருக்கும் நினைவில்லை. என்ன காரணம் என்று நானும், அவள் கவலையுடன் அவளும்.

லாரா குவாட்டமாலாவிலிருந்து அமெரிக்கா வரும்போது அவளுக்கு வயது பதினைந்து. வசதியான குடும்பத்தில் (அப்பாவுக்கு துணிகள் ஏற்றுமதி வியாபாரம்) பிறந்த ஆறு குழந்தைகளில் மூத்தவள். பெற்றோருக்குத் தெரியாமல் ''பாலும் தேனும் தெருவெல்லாம் வழிந்தோடும்'' அமெரிக்காவுக்கு காதலனுடன் பஸ்ஸிலும், நடந்தும் பல இரவுகள் பயணம் செய்து டெக்சாசில் நுழைந்து வந்து இருக்கிறாள். டெக்சாஸ் வந்து மூன்று மாதத்துக்கெல்லாம் (மூன்று மாத கர்ப்பம்) காதலன் காணாமல் போய்விட்டான்.

பலவிதமான வேலைகள் செய்து நியூஜெர்சியில் வந்து சேர்ந்தபின் ஒரு நல்ல மெக்சிகன் பெண்மணியின் துணையும், உதவியும் கிடைத்தது. கடவுள் செயல். அந்தப் பெண்மணியின் உதவியுடன் முதல் பெண் குழந்தை பிறந்ததும் தான் வேலை செய்த உணவகத்தில் சந்தித்து தன்னை மிகவும் விரும்பிய ஒரு மெக்சிகனை (தற்போதைய கணவன்) மணந்து கொண்டு மேலும் ஒரு பெண் குழந்தைக்கும் இரு ஆண் குழந்தைகளுக்கும் தாயானதும் தனிக்கதை.

சென்ற வருடம் சொந்தவீடு வாங்கி (நானும் அவளுடன் பத்து வீடுகள் ஏறி இறங்கி என் அபிப்ராயத்தைச் சொல்லி இருக்கிறேன்) சந்தோஷமாக இருந்தாள்.

அழத்தெரியாத லாரா அழக் காரணம் என்ன?

ஒரு வியாழனன்று அதிகாலை. லாராவின் கடைக்குட்டிப் பையன் தன் அறையிலிருந்து லாராவின் அறைக்கு வந்து ''அம்மா யாரோ எங்கள் அறை ஜன்னலிலிருந்து டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள்'' என்றான். லாராவுக்குப் புரிந்துவிட்டது. அது INS-தான் என்று.

கடந்த ஒரு வருஷமாகவே சரியான குடிபுகல் ஆவணங்கள் (இமிக்ரேஷன் பேப்பர்) இல்லாதவர்களை (முக்கியமாக மெக்சிகர்களை) INS தேடிப் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டு, பிறகு அவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுப்பிவிடுகிறது என்பதை கண்கூடாகப் பார்த்தும், கேட்டும் இருக்கிறாள். அவளுடைய கணவன் ரமோனுக்குச் சரியான ஆவணம் கிடையாது. சில வருடங்களுக்கு முன்னால் அரசாங்கம் ஒருமுறை அனுமதித்த போது லாராவுக்கு கிரீன் கார்டு கிடைத்துவிட்டது. ரமோனுக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டது. காரணம்? துரதிர்ஷ்டம்தான்.

வீட்டில் எல்லோரையும் சத்தமின்றி இருக்கச் சொல்லிவிட்டு, ரமோனைப் பின்புறவழியாக அவன் நண்பன் வீட்டிற்குத் தலைமறைவாக இருக்க அனுப்பி இரண்டு மாதமாகிறது. வாரக் கடைசியில் குழந்தை களுடன் போய்ச் சந்தித்து வருகிறாள்.

இன்றைய துக்கம் ஏன்?

வெளியே சென்று கொண்டிருந்த ரமோனை INS மோப்பம் பிடித்து முதல்நாள் மாலை பிடித்துச் சென்றுவிட்டது. எங்கே வைத்து இருக்கிறார்கள், என்ன நிலைமை என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. நண்பர்கள் தேடி, விசாரித்து வருகிறார்கள்.

லாரா அழாமல் என்ன செய்வாள் சொல்லுங்களேன்!

சரோஜா விஸ்வநாதன்

© TamilOnline.com