பேராசிரியர் நினைவுகள்: கனவு மெய்ப்பட வேண்டும்
'பாரதி சொல்லடைவை, பாரதி அகராதியைக் கணினியின் உதவியில்லாமலேயே, மனித முயற்சியால் முழுக்க முழுக்கச் செய்துவிட்டால் போகிறது' என்று சொல்லியபடி அந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியேறிய சமயத்தில் எனக்குத் திகைப்புதான் ஏற்பட்டது. 'என்ன சார்... மனுஷனால ஆகிற காரியமா? எவ்வளவு உழைப்பு தேவைப்படும்? இவங்க இல்லாட்டா வேற ஒருத்தரைப் போய்ப் பார்க்கலாம்' என்றேன். புன்னகைத்தார். 'உவேசா ஒரு தனிமனிதராக இருந்து நூறு புத்தகங்களுக்கு மேல் பதிப்பிக்கவில்லையா? எத்தனை அகராதிகள், குறிப்புகள், விவரக்கோவைகளை அவருடைய பதிப்பில் சேர்த்திருக்கிறார்! இப்ப நான் செய்யப் போறது ஒரே ஒரு கவிஞனுடைய பாடல்களை மட்டும்தானே? பயப்படாதீங்க. செஞ்சுறலாம்' என்றார். என் முகத்தில் திகைப்பு நீங்கிய பாடில்லை. 'இங்க பாருங்க ஹரி, உட்கார்ந்து முதலில் சொல் சொல்லாகப் பிரித்துத் தாளில்தானே எழுதவேண்டும்?' ஆமாம்.

அப்போது தமிழ் எழுத்துருக்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தன. இருந்தாலும் இப்போதைய யூனிகோடு தரும் வசதிகளில் பெரும்பான்மையானவை அந்த எழுத்துருக்களுக்குக் கிடையாது. காதம்பரி என்ற எழுத்துருக் குடும்பம் (font family) மட்டும்தான் எனக்கு அப்போது தெரியும். அதன் பின்னர் ஆதமி, பதமி, முரசு, இ-கலப்பை என்று வரிசையாகச் செயலிகள் வந்தன. 'ஆமாம். தாளில்தான் எழுதவேண்டும். இப்போதைக்கு ஆங்கிலத்தில் உள்ள வசதி, தமிழில் கிடையாது' என்றேன். 'சரி. அப்படி எழுதும்போதே, பாரதி சொல்லடைவிலும் அகராதியிலும் சேர்க்கப்பட வேண்டிய சொற்களைத் தனியாக எடுத்துத் தொகுக்க முடியாதா?' என்றார். எனக்கு விளங்கவில்லை. 'சார், ஒரு பத்துப் பேர் உட்கார்ந்து எழுதுகிறோம் என்றால் எல்லோரும் ஒரே மாதிரியாகச் செயல்பட்டால் அல்லவா நீங்கள் சொல்வதை நடத்த முடியும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் நாம் மேற்கொள்ளப் போகும் வழிமுறைகளை இம்மி பிசகாமல் செய்வார்களா? அதை நெறிப்படுத்த வேண்டி அடிக்கடி ஒன்றுகூட வேண்டியிருக்குமல்லவா? நாமோ தன்னார்வத்தால் இந்தக் காரியத்தில் ஈடுபடுபவர்கள். சனி, ஞாயிறு தோறும் நான் வந்து உங்களோடு என் தொகுப்பைச் சரிபார்த்துக் கொள்வேன் என்று வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அப்படிப்பட்ட நேரம் கிடைக்க வேண்டுமல்லவா' என்று மிகத் தயக்கத்துடன் கேட்டேன். மறுபடியும் அதே மர்மப் புன்னகை. கண்கள் சிரிக்கும் அதே மறக்க முடியாத புன்னகை. 'பத்துப் பதினைந்துபேர் சேர்ந்து செய்தால்தானே அந்தப் பிரச்சினை? கவலையை விடுங்கள். செய்யப் போவது நான் ஒருவன்தான்' என்று குறும்பாகவும் அதேசமயம் தீர்மானமாகவும் சொன்னார்.

எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. அவருக்கு அப்போதுதான் இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. ஒரு நுரையீரல் முழுக்கவே செயல்படவில்லை. இரண்டு-மூன்று மணிநேரச் சொற்பொழிவுகளின்போது ஒரேயோரு நுரையீரலால் சுவாசித்து, அந்த அளவு காற்றையே பேசவும் பயன்படுத்துபவர் என்பதால், உணர்ச்சிப் பெருக்கால் பேச்சின் வேகம் அதிகரிக்கும்போது சிரமப்படுவார். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல், மற்றவர்கள் அறியாத வண்ணம் சமாளித்துக் கொள்வார். சொற்பொழிவு முடிந்து வீடு திரும்பும்போதுதான் அவர் பட்ட சிரமங்களும், பட்டுக்கொண்டிருக்கும் சிரமங்களும் தெரியும். என்னுடைய இருசக்கர வாகனத்தில்தான் பெரும்பாலும் திரும்புவோம் என்பதனால், இந்த விஷயத்தில் நான் அவருடைய சிரமங்களை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மற்றபடி நல்ல திடகாத்திரமான உடலமைப்பும், முறுக்கேறிய தசைகளும் (இளமையில் பளுதூக்கும் பயிற்சி செய்தவர்) கொண்டிருந்தாலும், இதயமும், நுரையீரலும் கடைசி சுமார் பத்து வருடங்களுக்கு அவருக்குப் போதிய ஒத்துழைப்பைத் தரவில்லை. 'இப்படி ஒரு உடம்ப வச்சிட்டு எப்படி சார் தனியா இவ்வளவும் பண்ணப் போறீங்க' என்று கவலையோடு விடாது கேட்டேன். கண்மூடி, தலை அசைத்து, 'அந்தக் கவலையையெல்லாம் என்கிட்ட விட்ருங்க. நான் பாத்துக்கறேன். உதவி தேவைப்பட்டால் சொல்கிறேன். அப்போது செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு, ஒவ்வொரு பாடலாகப் பதம் பிரித்து, தனித்தனித் தாள்களில் எழுதி, எந்தெந்தச் சொல்லுக்கு விளக்கம் தேவையோ அவற்றைத் தொகுத்து, ஒரு சொல் பாரதி பாடலில் எங்கெங்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்ற cross-reference தயாரித்து (உதாரணமாக தியாஜ்ஜியம் என்ற சொல் ஒரேயொரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது; துன்பக்கேணி என்பது இரண்டு பாடல்களில் உள்ளது; இன்பக்கேணி என்று ஒரு பாடலில் உள்ளது; உகைத்தல், குப்பாயம், போத்து, என்பன போன்ற சொற்கள் பாரதி பாடல்களில் எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாடலும், சொல் இடம்பெற்றுள்ள அடி எண்ணும் குறிப்பது என்பன போன்ற பலவாறான வகைப்பாடுகள். அந்தச் சொல் பிற இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்-concordance-இவற்றில் முக்கியமானது.) ஒவ்வோரிடத்திலும் அதேசொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் குறித்து, இப்படித் தனித்தனியாக எழுதிய கைப்பிரதிகைளைத் தைத்து பைண்டு செய்து என்னிடம் காட்டினார். பிரமிப்பாக இருந்தது. 'என்ன அதுக்குள்ள அப்படிப் பாக்கறீங்க.... இப்பத்தான் வேல தொடங்கியிருக்கு. நான் முடித்திருப்பது பத்து சதம்தான்' என்றார்.

பிறகு, குடும்பக் காரணங்களுக்காக அவரும் அவருடைய மனைவியும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல நேர்ந்தது. அவருடைய மகன் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தது அடிப்படைக் காரணம். அங்கே போன பிறகும் அவருடைய சொற்பொழிவுகளும் தொடர்ந்தபடிதான் இருந்தன. அவ்வப்போது அவர் ஆஸ்திரேலியாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவு எனக்கு வந்து சேரும். அங்கேயும் அவருடைய ரசிகர் கூட்டம் பெருகியது. இப்போது தென்றலில் அவரைப் பற்றிய தொடர் வெளிவரத் தொடங்கியதும் அவர்களனைவரும் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள்; அழைத்து 'இந்த மாதம் வெளிவந்துவிட்டது. படித்தீர்களா' என்று நினைவூட்டுகிறார்கள் என்றும் அண்மையில் தொலைபேசிய அவருடைய மனைவி திருமதி சரஸ்வதி வேணுகோபாலன் தெரிவித்தார்.

பேரன் பேத்திகளோடும், சொற்பொழிவு நிகழ்வுகளோடும் அவருடைய பொழுது கழிந்துகொண்டிருக்கும். பாரதி சொல்லடைவு, ஆய்வடங்கல் பணி என்ன ஆயி்ற்றோ, முடங்கிவிடுமோ என்னவோ, அவருடைய உடல்நிலை அதற்கு இடம் கொடுக்குமோ கொடுக்காதோ என்று எண்ணியபடி நான் இந்தியாவிலும் அவர் ஆஸ்திரேலியாவிலும் இருந்தோம். தொலைத்தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத காலம்; அப்படியே தொடர்பு கொள்ளவதானால் அதற்கான கட்டணமோ நம் சக்திக்கு மீறியதாக இருந்தபடியால் மறுபடியும் இந்தியாவுக்கு வருவார்; அந்தப் பணியைத் தொடரலாம் என்று எண்ணியபடி நான் இருந்துவிட்டேன்.

அங்கே போன சில மாதங்களில் அவருக்கு மூன்றாவது முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. சிலகாலம் மருத்துவ மனையிலிருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். திரும்பியதும், மனைவியிடம், 'இனி எவ்வளவு காலம் இருப்பேன் என்று தெரியாது. இருக்கும் காலத்துக்குள் மிகுதிப் பணியை முடித்துவிட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். தனது கணவர்மேல் பெருத்த அன்பும் மிகுந்த அக்கறையும் கொண்டவர் திருமதி சரஸ்வதி வேணுகோபாலன். அப்படியொரு மனமொத்த தம்பதியரைக் காண்பதரிது. இவர் இவ்வாறு சொல்லவும் இருவருமாகச் சேர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதெல்லாம் எனக்கு அவருடைய மரணத்துக்குப் பிறகு சரஸ்வதி அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது சொல்லித்தான் தெரியும். இருபத்தைந்து முப்பது காலணிப் பெட்டிகளைத் (shoe boxes) வரிசையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பெட்டிக்கும் அகர வரிசையில் இன்ன எழுத்து முதல் இன்ன எழுத்துவரை என்று அடையாளமி்ட்டு, பாரதி பாடல்களில் ஒவ்வொரு சொல்லாகத் துண்டுக் காகிதத்தில் எழுதி, அந்தச் சொல் இடம் பெற்றுள்ள பாடல் எது, அடி எது என்ற குறிப்புகளைச் சேர்த்து, அந்தந்தப் பெட்டியில் அகரவரிசைப்படி இட்டுவிடுவார்கள். பிறகு, ஓரளவு இந்தச் சொற்கோவை திரண்டதும், தனி நோட்டுப் புத்தகத்தில் அந்தத் துண்டுக் காகிதங்களில் உள்ள குறிப்புகளை வரிசைப்படி குறித்துக் கொள்வார்கள். அப்படிச் செய்தபிறகு, கன்கார்டன்ஸ் முதலிய பணிகளை ஆசிரியர் செய்வார். இப்படியாக இருவரும் சேர்ந்து பாரதி பாடல்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு எண்பது சதம் பணிகளை முடித்துவிட்டார்கள்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது நான்காம் முறை மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 'சிகிச்சைக்குப் பிறகு விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவேன். வந்த பிறகு எனக்கு ஒருவர் துணையும் வேண்டாம். மிகுந்திருக்கும் பணிகளை நானாகவே முடித்துவிடுவேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், ஐந்தாவது முறையாக மருத்துவமனையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அறுபத்திரண்டு-அறுபத்துமூன்று வயதில் காலமானார். இந்தக் குறிப்பைத் திருமதி சரஸ்வதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வரிகளைப் படிக்கும்போதே, இவற்றை எழுதிய சமயத்தில் அவர் கண்களில் எவ்வளவு நீர் திரண்டிருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

இன்னும் இருபது சதம் பணியை முடிக்க வேண்டும். அது இப்போதிருக்கும் வசதிகளுடன் எளிதாக முடித்துவிடக்கூடிய ஒன்று. திருமதி சரஸ்வதி சென்னைக்கு வரும்போதெல்லாம், அந்தக் குறிப்புப் புத்தகத்தையும், பாரதி பாடல்களுக்கான அவருடைய கைப்பிரதியையும் தங்களிடம் கொடுத்துவிடுமாறு சில பதிப்புலக-ஆய்வுக் கழுகுகள் அடிக்கடிக் கேட்கிறார்கள் என்று அம்மையார் என்னிடம் சொன்னபோது, 'தப்பித் தவறிக்கூட இந்தக் குறிப்பிட்ட நபர்களிடம் கொடுத்துவிடாதீர்கள். என் ஆசிரியர் செய்த பணி, அவருடைய பெயரிலேயே புத்தகமாக வெளிவரவேண்டும். அவற்றில் ஒரு பகுதியை அவர் பெயரில் வெளியிட்டதாகப் பேர்பண்ணி, உங்களிடம் பணம் கறந்துகொண்டு. முக்கியமான பகுதிகளைத் தன்பெயரில் வெளியிட்டுக்கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள், நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன நபர்கள்' என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்ட அம்மையார், அவற்றைத் தன்வசமே வைத்திருக்கிறார்.

இந்த இடத்தில் கைப்பிரதி என்று நான் குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். ஆசிரியரிடம் பாரதி பாடல்களில் பெரும்பான்மையான பதிப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் கட்டுப் பிரித்து (unbinding) ஒவ்வொரு பக்கத்துக்கும் இடையில் ஒரு வெள்ளைத்தாளை வைத்து, மறுபடி பைன்ட் செய்த பிரதி அது, அந்தந்தப் பாடலுக்கான அடிப்படைக் குறிப்புகள் அந்த இடைப்பக்கத்தில் இருக்கும். அதையும், முதன்மைக் குறிப்பேட்டையும் ஒன்றுக்கொன்று பக்க எண்கள் போன்றனவற்றால் குறித்திருப்பார். ஆராய்ச்சிக் கழுகுகளுக்கு இத்தகைய தொகுப்பு திருப்பதி லட்டு. அதற்காகத்தான் துடிக்கிறார்கள். அம்மையாரிடம் முன்பணமும் பெற்றிருக்கிறார்கள். பிறகு நான் சொன்னதும், என்னைப்போன்ற பிறர் சொல்லியிருக்கக்கூடியதுமான கருத்துகளின் அடிப்படையில் அம்மையார் 'புத்தகம் அவர் பெயரிலேயே வரவேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

மிகுதிப் பணிகளையும் முடித்து, என் ஆசிரியர் பெயரால் ஒரு திருத்தமான, விரிவான, concordance, cross-reference, index, பொருள், பெயர், சம்பவ விவரக் கோவையுடன் கூடிய பதிப்பு வெளிவரும் நாளைக் கனவுகண்டுகொண்டிருக்கிறேன். ஒன்று நெருங்கி வந்தால் மற்றொன்று விலகிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில் அம்மையார் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்த முயற்சியை எந்த அளவுக்கு இதற்குமேல் நகர்த்த முடியும் என்று என்னால் ஆனதை முயன்று பார்க்கிறேன். இது சாதனை செய்க பராசக்தி.

தொடரும்...

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com