மகளிரும் மாரடைப்பும்
பெண்களை இதயநோய் தாக்குவது பற்றித் தற்போது மருத்துவ உலகில் பரவலாகப் பேசப்படுகிறது. பிப்ரவரி 3, 2006 அன்று பெண்களின் இதயநோய் பற்றிய அறியாமையைப் போக்குவதற்கான நாளாக மருத்துவ உலகம் அறிவித்தது. அன்றைய தினம் மருத்துவப் பணியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து அறியாமையை அகற்றும் பணியில் பங்கு கொண்டனர். பல வருடங்களாக இதயநோய் ஆண்களை மட்டுமே தாக்கும் நோயாகக் கருதப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களில் மருத்துவ ஆய்வுகள், பெண்கள் தரப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

நோய்க்கான காரணிகள் (Risk Factors):

1. புகை பிடித்தல்
2. நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி)
3. இரத்த அழுத்தம் (Blood Pressue)
4. கொழுப்பு சத்து (Cholesterol)
5. குடும்ப வரலாறு. நெருங்கிய உறவினரில் ஆண்கள் 45 வயதுக்குள்ளாகவோ பெண்கள் 55 வயதுக்குட்பட்டவரோ இதயநோய்க்கு ஆளாகியிருந்தால் அது முக்கியக் காரணியாகும்.

இவற்றையும் தவிர வளர்சிதை நோய்க்குறிகள் (Metabolic Syndrome) என்று சொல்லப்படும் உடல் எடை அதிகம், அதிக இரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, மற்றும் குறிப்பிட்ட கொழுப்பு சத்து (Triglycerides) அதிகமாக இருத்தல் ஆகியவையும் இதயநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக தெற்காசியர்களாகிய நாம் வளர்சிதை நோய்க்குறிகள் தாக்குவதற்கான மரபணுக்கள் உடையவராக உள்ளோம்.

பெண்களில் மாரடைப்பு எப்போது ஏற்படலாம்?

ஆண்களுக்கு மாரடைப்பு நோய் இளம் வயதிலும் தாக்கலாம். ஆனால் பெண்களுக்கு அவர்களின் சினைப்பையில் (ovaries) சுரக்கும் எஸ்ட்ரோஜன் (estrogen) என்ற hormone மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கிறது. ஆகையால் மாதவிடாய் (menopause) நின்ற பிறகு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன. இதனால் 50 அல்லது 55 வயதுக்குப் பின்னரே இவர்களை மாரடைப்பு நோய் தாக்குகிறது. ஆனால், மேலே கூறிய அறிகுறிகள் உள்ளவருக்கு மாரடைப்பு நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதனால் மாதவிடாய் நின்று விட்ட பெண்களுக்கு 'hormone replacement therapy' வழங்குவது பற்றிப் பல மருத்துவ ஆய்வுகள் வெளியாகியுள்ளன. மாதவிடாய் நின்றபின்பு இதயநோயைத் தவிர்ப்பதற்காக estrogen மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை. மருத்துவ ஆய்வுகள் இதை அனுமதிப்பதில்லை. ஆனால், menopause ஏற்படுத்தும் சில அறிகுறிகளைத் தீர்க்க இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். ஆகையால், பெண்கள் வயதான பின்பு, குறிப்பாக மாரடைப்பு வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

பெண்களுக்கான விசேட அறிகுறிகள்

ஆண்களும் பெண்களும் மருத்துவ ரீதியில் வேறுபட்டவர்களா? மனித இனம் என ஒன்றாகவே கருதுவதா? இந்தச் சர்ச்சை மருத்துவ உலகில் காலம்காலமாய் நிலவி வருகிறது. தற்போது ஆண்-பெண் வேறுபாடு, இனம், நாடு வேறுபாடு (gender and ethnic based medicine) இவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், இதயநோய், மாரடைப்பு பற்றிய ஆய்வுகளில் பெண்கள் பங்கெடுப்பது குறைவாக உள்ளது. மருத்துவப் பத்திரிகைகளில் வெளியாகும் பல ஆய்வுகளில் 80 சதவிகிதம் ஆண்களே பங்கு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், வருங்காலத்தில் நடத்தும் ஆய்வுகளில் பெண்களின் பங்கை அதிகப்படுத்துவது மருத்துவக் கழகங்களின் நோக்கமாக உள்ளது.

தற்போது இருக்கும் ஆய்வுகளின்படி, பெண்களிடையே மாரடைப்பு நோயினால் மரணம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அமெரிக்காவில் பெண்களின் உயிர் கொல்லும் நோய்களின் வரிசையில் மாரடைப்பு முதல் இடம் பெற்றுள்ளது. நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், புற்று நோய் இவற்றை இனம்காணவும் குணப்படுத்தவுமான முறைகள் செம்மைப்படுத்தப் பட்டதால் மாரடைப்பு நோய் முதலிடத்துக்கு வந்துவிட்டது.

ஆண்களைப் போலவே பெண்கள் நெஞ்சு வலியில் துடித்தால் இந்த நோய் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். மாறாக, இந்த நோய் சில அசாதாரண அறிகுறிகளைப் பெண்களிடம் ஏற்படுத்துவதால் இதை ஆரம்பக்கட்டத்தில் இனம்காணுவது கடினமாகிறது. அஜீர்ணம், அபரிதமான சோர்வு, மூச்சு வாங்குதல், தலை சுற்றுதல், குமட்டல், வியர்வை பெருகுதல் போன்ற அசாதாரண அறிகுறிகள் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலே கூறிய காரணிகள் கொண்ட பெண்களிடையே இதுபோன்ற அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால், மாரடைப்பால்தான் இவை ஏற்படுகின்றனவா என்பதை அறியச் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

ஆண்களையும், பெண்களையும் வெவ்வேறு முறையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் வழக்கம் இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிகிறது. பெண்கள் பொதுவாக, உணர்ச்சிவசப்படுவர்கள் என்பதால், அசாதாரண அறிகுறிகளை மனம் சம்பந்தப்பட்டதாக மருத்துவர் கருதிவிடும் அபாயம் உள்ளது. இதனால் நோயின் தீவிரம் முற்றும்வரை அதற்குத் தக்க பரிசோதனைகள் நடத்தப்படமாலே போகலாம். மேலும், பெண்களுக்கென்று சில பரிசோதனைகள் தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, EKG மட்டும் செய்தால் மாரடைப்பு வருமா வராதா என்று சொல்லமுடியாது. இதயத்தின் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறியப் பல சோதனைகள் உள்ளன.

'Stress test' என்று சொல்லப்படும் பரிசோதனை, இதயத்துடிப்பை அதிகமாக்குவதால் ஏற்படும் மாறுதல்களைப் படம் பிடிக்கும். ஆண்களுக்கு, Treadmill-இல் நடக்க வைத்து, அதனால் நிகழும் மாறுதல்களைப் படம்பிடிப்பர். இந்த முறை பரிசோதனை பெண்களிடம் எடுபடுவதில்லை. மாறாக, 'Nuclear Isotope' என்று ஒருவிதப் பொருளை உடலில் ஏற்றி, அதன்பின் ஏற்படும் மாறுதல்களைப் படம் பிடிப்பதே பெண்களுக்கு ஏற்ற சோதனையாகும். குறிப்பாக உடற்பயிற்சி இல்லாத பெண்களுக்கு இந்தப் பரிசோதனை உகந்தது.

மேலும், பெண்களிடம் ஏற்படும் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாலும், இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும், மேற்கொள்ளும் சோதனைகள் ஆண்களுக்கானவற்றை விடக் குறைவாகவே உள்ளன. Cardiac Catheterization என்று சொல்லப்படும் சோதனையே மாரடைப்பு நோயைக் கண்டுபிடிப்பதற்கு உகந்தது. சந்தேகிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், இந்தப் பரிசோதனை பெண்களுக்குக் குறைவாகவே செய்யப்படுகிறது. இந்தக் காரணங்களால் பெண்களிடம் நோய் முற்றி, சீர்கேடுகளும் மரணமும் அதிகமாக நிகழ்கின்றன.

நோய் தவிர்ப்பு முறைகள்

நோயின் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் தகுந்த சோதனை மேற்கொள்ளலாம். ஆனால், நோய் தவிர்க்கும் முறைகளை பின்பற்றுவதாலேயே நோயின் சரித்திரத்தை மாற்ற முடியும்.' Genetics loads the gun; but environment triggers it' (மரபணுத்தன்மை துப்பாக்கியைத் தயார் செய்கிறது, சூழ்நிலை விசையைத் தட்டுகிறது) என்ற வாசகம் மாரைடப்பு நோயைப் பொறுத்தவரை மிகவும் உண்மையாகும். எல்லோருமே தங்கள் எடையை மிதமாக வைத்துக்கொள்வதால் இந்த நோயின் சாத்தியக்கூறுகளைக் குறைக்கலாம். அளவான உணவு, வாரத்தில் 3-4 முறை 20-30 நிமிட உடற்பயிற்சி, புகைபிடிப்பதை அறவே நிறுத்துதல், கொழுப்புச் சத்தைக் குறைத்தல் இவை முக்கியம். தங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை அறிந்து கொள்ள வேண்டும். நல்ல கொழுப்பு என்று கருதப்படும் HDL வகைக் கொழுப்பு பெண்களின் ரத்தத்தில் கூடுதலாகக் காணப்படுகிறது. ஆனால், மாதவிடாய் நின்ற பிறகு இந்த நல்ல கொழுப்பின் அளவு குறையும் அபாயம் உள்ளது. நன்மைசெய்யும் கொழுப்பை உடற்பயிற்சி ஒன்றின் மூலமே அதிகப்படுத்த முடியும்.

BMI என்று சொல்லப்படும் எடை, மற்றும் உயரம் கொண்டு, அளக்கப்படும் எண்ணிக்கையை 20-25க்குள் வைத்திருக்க வேண்டும். (BMI பற்றிய கட்டுரை 'தென்றல்' ஏப்ரல், 2004 இதழில் வெளியாயிற்று). தெற்காசியர்களாகிய நாம், நமது இடுப்புச் சுற்றளவு குறைப்பதன் அவசியம்பற்றித் தனியாக ஒரு புத்தகமே போடலாம். இந்தப் பழக்கங்களினால் நீரிழிவு நோய் வருவதையும் தவிர்க்கலாம். மாமிசம் உண்ணாத சைவர்களிடமும் இந்த நோய் காணப்படுவதிற்கான காரணம் அதிகமாக மாவுப்பொருள் (Carbohydrate) கொண்ட உணவை உண்பதுவே என்று சொல்லலாம். ஆகவே தகுந்த முறையில், அளவாக உண்டு, உடற்பயிற்சி செய்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மேலும் விவரங்கள் அறிய: women.americanheart.org

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com