மின்னியாபொலிசுக்கு வந்த பேய்
"ராஜா கண்ணு, ராஜா கண்ணூ...."

யார் இந்த நேரத்தில்? அதுவும் ஊரில் கூப்பிட்ட பெயரில் கூப்பிடுவது? ராஜசேகரன் திடுகிட்டு எழுந்தான்.

கதவு தொடர்ந்து தட்டப்படும் ஓசை கேட்டது.

911-க்கு போன் செய்யலாமா என யோசித்தான். போனை கையில் எடுத்துகொண்டு பீப்ஹோல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான்.

"கிட்டு தாத்தா!" என திடுக்கிட்டபடி கதவைத் திறந்தான்.

"எப்ப தாத்தா வந்தே? என்ன திடீர்னு? உனக்கு பாஸ்போர்ட்டே கிடையாதே..."

வெளியே மைனஸ் இருபது டிகிரி குளிர்.

"உள்ளே வா தாத்தா" என்றான். உடல் வெடவெடத்தது.

"என் பேத்திய கைவிட்டுட்டு இங்கே வந்து எவளையோ கட்டிகிட்டே. எத்தனை ஃபோன் செஞ்சும், லெட்டர் போட்டும் பதிலே இல்லை. அதைவிட கொடுமையா குழந்தைய வேற இங்கே தூக்கி வந்திட்டே" என்றார் கிட்டுத் தாத்தா.

"உள்ளே வா பேசிக்கலாம். குளிருது" என்றான் ராஜசேகர். ஒருமுறை அவன் உடல் குளிரில் உதறியது. கோட்டை எடுக்கப் பக்கத்திலிருந்த க்ளாசட் அறையினுள் நுழைந்தான்

"குழந்தைய அம்மாகிட்ட சேத்திடு.இல்லைன்னா..." என்றார் தாத்தா.

"இல்லைன்னா என்ன பண்ணிடுவ? தாத்தவாச்சேன்னு மரியாதை தர்றேன்" என அறையினுள்ளிருந்தபடி கத்தினான் ராஜசேகர். கோபத்துடன் வெளியே வந்தான்.

கதவு மூடியிருந்தது. கதவைத் திறந்து பார்த்தான். யாரும் இல்லை.

"எங்கே போச்சு கிழம்?" ஆத்திரத்துடன் போனை எடுத்தான். வீட்டுக்குச் சுழற்றினான். அவன் மனைவி செண்பகம் போனை எடுத்தாள்.

"அந்தக் கிழவனை இங்கே அனுப்பி மிரட்டறியாடி?" போனில் கத்தினான்.

"யாரை!" என்றாள் செண்பகம்.

"கிட்டுத் தாத்தாவை.."

"என்ன சொல்றீங்க? கிட்டுத் தாத்தா செத்து ரெண்டுமணி நேரத்துக்கு மேல ஆவுது. ஊர்ல எல்லாரும் இங்கேதான் இருக்காங்க. பாடி ஹாலில் வெச்சிருக்கு. உங்க செல்போனுக்கு தம்பி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கான்.."

"என்னது?!"

"நீங்க வரலையா? கடைசியா உங்க பேரைச் சொல்லிகிட்டுதான் செத்தார்...."

ராஜசேகரனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

"குழந்தைய அம்மாகிட்ட சேத்திடு.இல்லைன்னா..." தாத்தாவின் குரல் வீடெங்கும் எதிரொலிப்பது போல பிரமை...

இரண்டாவது நாளில் குழந்தையை இந்தியாவுக்குப் போன தன் நண்பன் தாமுவுடன் பிளைட்டில் ஏற்றி அனுப்பிவிட்டான் ராஜசேகரன்

"கிட்டுத் தாத்தா.." குழந்தை ஓடிப்போய் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த தாத்தாவைக் கட்டிகொண்டது.

"தாத்தா... நீங்க செத்துப் போனதா..." தாமுவின் குரலில் தயக்கம்.

"ராஜசேகரனைப் பொறுத்தவரைக்கும் செத்ததாவே இருக்கட்டும்" என்றார் தாத்தா கண்சிமிட்டியபடி." என்னா குளிர் மின்னியாபொலிஸ்ல? ஒரு சின்ன டிராமா. அதுக்கே பயந்து நடுங்கிட்டான். எம்பொண்டாட்டி பேய்க்கதையா இல்ல சொல்லி அவனை வளர்த்தியிருக்கா..?"

பேரனைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு மெதுவாக நடந்து மறைந்தார் தாத்தா.

செல்வன்

© TamilOnline.com