மனிதமனம்
பிளாஸ்கில் காபியுடனும் மூன்று டம்ளர்களுடனும் அறைக்குள் நுழையப் போன ரஜினி சட்டென நின்று விட்டாள். அறையின் உள்ளேயிருந்து வந்த பேச்சுக் குரல்கள் காதில் அறைந்தன.

"ஒண்ணு ஞாபகத்திலே வச்சுக்கோங்க. காவ்யாவுக்கு சட்டு புட்டுனு ஒரு கல்யாணத்தை நடத்திப்புடணும்" மூத்தவன் சதீஷ்.

"என்ன அண்ணா, திடீர்னு சீர்திருத்தவாதியாயிட்டே..." நக்கலாகக் கேட்டான் இரண்டாமவன் சந்தோஷ்.

"அது இல்லடா. காவ்யாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சின்னா கௌதமோட பங்கைத் தர வேண்டியதில்லை இல்லையா அதான்." இது சுந்தர் - உறவு மாமா.

"ஓ. இப்படி ஒரு பிரச்சனை இருக்குதா இதுல... " சந்தோஷ் இழுத்தான்.

"போனவன் மூணு மாசம் முன்னாடியே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா" என்று சதீஷ் சலித்துக்கொள்ள, மற்ற இருவரும் புரியாமல் அவனைப் பார்த்தனர்.

"அவன் கல்யாணச் செலவாவது மிச்சமாயிருக்கும். இப்படி அவன் பெண்டாட்டிக்கும் நாம மறு கல்யாணம் பண்ண வேண்டியது இல்லாமப் போயிருக்கும். ஹேஹ்ஹஹே..." என்ற சிரிப்புச் சத்தம் நாராசமாகக் காதில் ஒலித்தது. வந்த சுவடு தெரியாமல் ரஜினி வந்து விட்டாள். "நான் பெத்த புள்ளைங்களா இதுங்க. கூடப் பிறந்தவன் அல்பாயுசுல போனதைப் பத்திக் கூடக் கவலைப்படாம... இது என்ன பேச்சு!" கண்ணீர் வழிந்தோடியது. அறைக்குள் நுழைந்தவளின் கண்கள் கணவரைத் தேடின.

"ஏங்க... நம்ம பிள்ளைங்க பேசின..." என்று துவங்கியவளை இடைவெட்டியது ராகவனின் குரல். "நானும் அவங்க பேசினதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் ரஜினி" அவள் கேவினாள். அவர், அவள் தோளையும் முதுகையும் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார்.

கௌதம், ரஜினி-ராகவன் தம்பதியரின் கடைசி மகன்.

முதல் பையனுக்கு 14 வயதும், அடுத்த பையனுக்கு 10 வயதும் இருக்கும்போது - வயிற்றில் தங்கிய கருவை "இது பெண் குழந்தைதான்" என்று ஆசை ஆசையாகப் பெற்றுக் கொண்டவளுக்கு ஏமாற்றம் தந்து பிறந்தவன். வயது வித்தியாசத்தால் அண்ணன்களிடம் அவ்வளவாக ஒட்டுதல் இல்லாமல் போனாலும், அம்மா பிள்ளையாகவே வளர்ந்து, எதற்கெடுத்தாலும் பயம் என்றிருந்த பிள்ளை, படிப்பை முடித்து, புனேவில் சாஃப்ட்வேர் என்ஜினியர் ஆகி, ரஜினியின் உறவிலேயே ஏழைப் பெண் காவ்யாவைக் கைப்பிடித்தான்.

மணமாகி மூன்றுமாதம் கூட முழுதாக முடியவில்லை. எங்கிருந்துதான் வந்ததோ அந்த ராட்சத லாரி. வேலைக்குச் சென்றவன் மீது கண நேரத்தில் மோதி, அங்கேயே காலன் அவனை ஆட்கொண்டான். மலர்ந்தும் மலராமல் அரும்பாக நிற்கிறாள் காவ்யா.

"மாமா... மாமா.." யாரோ கதவைத் தட்டியபடி உள்ளெ நுழைந்தார்கள். அப்போதுதான் லேசாகக் கண்ணயர்ந்த ராகவன் விழித்தெழுந்து உட்கார்ந்தார். "அத்தே.. மாமா.. நீங்கதான் என்னையும் என் தங்கையையும் காப்பாத்தணும்" என்றவாறே காலில் விழுந்தாள் நித்யா.. காவ்யாவின் அக்கா.

"என்னம்மா? என்னாச்சு? எழுந்திரு, எழுந்திரு..." என்று பதறினர் ராகவனும் ரஜினியும்.

"மாமா. எங்க வீட்டுக்காரர் உங்ககிட்டே சண்டை போட்டு காவ்யாவுக்காகச் சொத்தைப் பங்கு போட்டு வாங்குவாராம்..." நித்யா.

"சண்டை எல்லாம் எதுக்கு நித்யா? காவ்யாவுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமைதானே அது?" ரஜினி சமாதானமாகப் பேசினாள்.

"அய்யோ அத்தே! அது இல்லே.. சொத்தை உங்க கிட்ட இருந்து பிரித்து வாங்கின பிறகு, சொத்து கை மாறாம இருக்க கொஞ்ச நாளானதும் காவ்யாவை அவரே கல்யாணம் பண்ணிக்கப் போறாராம். வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்குற தங்கச்சிக்காக அழறதா. இல்ல வாழ்க்கையைத் தொலைக்கப் போற எனக்காக அழறாதான்னு எனக்குத் தெரியலை. காவ்யாவை தயவுசெய்து என் கூட அனுப்பி வச்சிடாதீங்க. இந்த வக்ர புத்திக்காரனால எந்தக் கெட்டதும் நடக்காம இருக்கணும் ஆண்டவா" என்றவாறே வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நித்யா வெளியேற, ரஜினி-ராகவன் தம்பதிக்கு நெருப்புக் குளத்தில் போட்டது போல் மனம் எரிந்தது.

பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்தன. மறுநாள்....

"ரஜினி. வக்கீலய்யா வந்திருக்கார். காபி எடுத்துவா" ராகவன் குரல் கேட்டதும் மகன்கள் இருவரும் ஆணியடித்தாற் போல் சட்டென்று நின்று விட்டனர். நித்யாவின் கணவரும், அதாவது காவ்யாவின் மாமாவும் அறைக்குள் இருந்து பாய்ந்து வந்து வெளியே நின்று கொண்டார். மகன்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஹாலில் ஒரு நிசப்தம் கனமான கம்பளியாகக் கவிழ்ந்தது போல் இருந்தது.

"பாருங்க ராகவன். நீங்க சொன்ன மாதிரியே இரண்டு மகன்களுக்கு, உங்க ரெண்டு பேருக்கு, காவ்யாவுக்குன்னு சொத்தை சமமாக நான்கு பாகமாகப் பிரிச்சாச்சு. காவ்யாவை நீங்க மகளாகத் தத்து எடுக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செஞ்சாச்சு" என்று லாயர் முடிக்கும் முன்பே... "என்ன நான்சென்ஸ் இது?" என்று சீறினான் சதீஷ்.

"என்னப்பா இது... காவ்யாவை தத்து எடுக்கறீங்களா. உங்களுக்கு தத்து எடுக்க ஆசையாயிருந்தா எங்க பிள்ளைகள்லே யாரையாவது தத்து எடுத்து வளர்த்துக்கங்க. அதை விட்டுட்டு இந்த அதிர்ஷ்டம் கெட்டவளையா. சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு" சந்தோஷ் படபடத்தான்.

குரல் உயர்த்திப் பேச ஆரம்பித்தார் ராகவன்.

"உஷ். யாரும் எதுவும் பேச வேண்டாம். நான் எல்லாம் யோசிச்சுத்தான் முடிவெடுத்து இருக்கேன். காவ்யாவுக்குப் பெற்றோரும் இல்லை. அக்கா வீட்டுல எத்தனை காலம் பாரமா அவ உட்கார முடியும்?" இடையில் குறுக்கிட வந்த காவ்யாவின் மாமாவைப் பேச விடாமல் கையமர்த்திய ராகவன், தொடர்ந்தார். "காவ்யா எங்க மருமகளா இந்த வீட்ல தங்கறதைவிட மகளாத் தங்கறதுதான் சரின்னு எங்க ரெண்டுபேருக்கும் படுது. நாங்க அவளைச் சட்டப்படி மகளா தத்து எடுத்துக்கிட்டா எங்க காலத்துக்குப் பிறகும் இந்த சட்ட ரீதியான உறவு அவளுக்குப் பாதுகாப்பா இருக்கும்" என்று பேசி முடித்த ராகவன், மேல்துண்டால் முகத்தை அழுந்தத் துடைக்க, ஹாலில் நிசப்தமான சூழல் நிலவியது.

காவ்யா சாய்ந்து கொண்டிருந்த பெரிய புகைப்படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருந்தான் கௌதம், ஊதுபத்தி வாசனையில்.

கௌரி கனகேசன்,
போனிக்ஸ், அரிசோனா

© TamilOnline.com