தஞ்சை பெரிய கோயில்
'சோழ மண்டலம்' எனும் சோழநாடு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. தண் + செய் என்பது தான் தஞ்சையானது. இதற்கு குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த பகுதி என்பது பொருள். 'சோழ வளநாடு சோறுடைத்து', 'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என்றெல்லாம் புகழப்படுவது இந்தப் பகுதிதான். தமிழக வரலாற்றில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் ஆன்மீகக் கருத்தினையும் பண்பாடுகளுடன் கூடிய சமுதாய மரபுகளைப் போற்றிப் பாதுகாத்தனர் என்பதைத் தெரிவிக்கும் வகையில் மாமன்னன் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டி, அதில் 'பிரகதீஸ்வரர்' என்னும் பெருவுடையாரை ஸ்தாபனம் செய்தான். இறைவியின் நாமம் உலகமுழுதுடை நாயகி என்னும் 'பெரிய நாயகி'.

காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதைக் கவர்ந்து அவன் மனதில் ஏற்பட்ட பக்திப் பெருக்கின் விளைவே தஞ்சைப் பெரியகோயில் உருவாகக் காரணம். பெரியகோயில் கி.பி. 1006ல் தொடங்கி கி.பி. 1010ல் முடிக்கப்பட்டது. ராஜராஜனின் இயற்பெயர் அருள்மொழி வர்மன். பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கிய அவனால் பல திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றில் தலைசிறந்து விளங்குவது தஞ்சை பெரிய கோயில். கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, கல்வெட்டுக்கள் எனப் பலவற்றுக்கும் சிறப்பிடமாக விளங்குகிறது இக்கோயில். 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இதனை அறிவித்தது.

கோயில் அமைப்பு
ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் அமைந்தது கோயில். கருவறைக்கு மேலே உயரமான 'தக்ஷிண மேரு' என்னும் விமானம் 13 தளங்களும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. விமானம் முழுதும் செப்புத் தகடுகளைப் போர்த்தி அதன்மேல் பொன் வேய்ந்ததாக ராஜராஜனைப் பற்றிய கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. கோயிலின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்கள் 'கேரளாந்தகன் திருவாயில்' என்றும், 'ராஜராஜன் திருவாயில்' என்றும் அழைக்கப்படுகின்றன. கோயிலின் திருச்சுற்று மாளிகையில் 36 பரிவார தேவைகள் காணப்படுவது சிறப்பு.

இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகப் பெரியதாகும். இது தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. 54 அடி சுற்றளவும், 6 அடி உயரமும் கொண்டது ஆவுடையார். 13 அடி உயரம், 23.5 அடிச் சுற்றளவும் கொண்டது லிங்கம். அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறை ஒரு திருச்சுற்று உடையது. இதில் தெற்கில் அகோர சிவர், மேற்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்கப் பெற்று, சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாக அற்புதக் காட்சி தருகிறார். 13ம் நூற்றாண்டில் இறைவியின் கோயில் கட்டப்பட்டது. தமிழ்க் கலாசாரம், பண்பாட்டின் சிகரமான இக்கோயில் ஒப்பற்றதொரு கலை, வரலாற்றுக் களஞ்சியம்.

தஞ்சைக் கோயில் என்றாலே பிரமாண்டமான நந்தியும், விமானமும்தான் நினைவுக்கு வரும். 19.5 அடி நீளம்; 8.75 அடி அகலம்; 12 அடி உயரம், 25 டன் எடையுள்ள இந்த நந்தி, அழகும் கம்பீரமும் கொண்டது. தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. அவர்களின் சிலைகள் மண்டபத் தூணில் உள்ளன. கோயிலைச் சுற்றி 28 அடி உயரத்தில் ராட்சத மதில் சுவர்கள் அமைந்துள்ளன. மதில் சுவர்கள் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பிரகாரச் சுற்றில் தஞ்சை மன்னர் 2ஆம் சரபோஜி 1803ல் தளம் அமைத்தார்.

மன்னன் ராஜராஜன் தானே கோயில் கட்டியதற்கான ஆதாரத்தைக் கல்வெட்டில் பொறித்ததோடு, எந்த எந்த வகையில் கோயிலுக்குப் பொருள் வந்தது, அது யார், யாருடைய பங்களிப்பு, கோயிலை உருவாக்கிய தச்சர்கள் பெயர், கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் அவரது நிர்வாகத் திறமையையும், ஈடுபாட்டையும் அறிய முடிகிறது. சோழர்காலத் தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டிடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய கலைகளுடன் சமுதாயப் பண்பியல், இறைக் கொள்கை ஆகிவற்றையும் இவற்றின் மூலம் அறியத் தந்துள்ளார்.

தமிழகத்திலேயே இக்கோயிலில் தான் சோழர்கால, நாயக்கர்கால, மராட்டியர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. காலத்தால் அழியாத வண்ண ஓவியங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சை கெட்டிக் கதம்பம், தஞ்சைக் குடைமிளகாய், தஞ்சை டிகிரி காபி என யாவும் தஞ்சைக்குப் பெருமை சேர்ப்பவையே.

சமீபத்தில் தமிழக அரசு தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. நகரெங்கும் கரகாட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், இசை, கருத்தரங்கு, சொற்பொழிவு எனத் திரும்பிய இடமெல்லாம் கலை உணர்வு பொங்கித் ததும்பியது. 1000 ஆண்டு விழாவை முன்னிட்டு பத்மா சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் சேர்ந்து பிரமாண்டமான நாட்டிய நிகழ்வை நடத்தியது கண் கொள்ளாக் காட்சி. விழாவின் நிறைவு நாளில் ராஜராஜன் உருவம் பொறித்த சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

ஆயிரம் ஆண்டு ஆனாலும் இன்னும் கலைநயம் குன்றாமல், ஆன்மீகத்தின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிபோர்னியா

© TamilOnline.com