கொடைக்கானலில் நடைச் சுற்றுலா
ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

1979ல் தமிழ்நாடு அரசு உதகையிலும் கொடைக்கானலிலும் முதன்முதலாக நடைப் பயணத் திட்டத்தை ஆரம்பித்தது. நான் கல்வித்துறையில் உதவிச் செயலராக இருந்து கொண்டே அதன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தேன். கொடைக்கானலுக்குச் சென்று நடைப் பயணத்தைத் துவக்கி வைக்குமாறு கல்வி அமைச்சர் கேட்டுகொண்டார். எங்கள் குடும்பத்திலும் அண்டை அயலார் வீடுகளில் உள்ளவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்த்து, நடைப்பயணத்தில் கலந்து கொள்ளச் செய்தேன். ஒரு குழுவாக நாங்கள் பாண்டியன் எக்ஸ்பிரசில் புறப்பட்டோம். பாடிக் கொண்டும் சீட்டு ஆடிக்கொண்டும் பயணித்தோம். அதிகாலையில் கொடைக்கானல் ரயில் நிலையத்தில் இறங்கினோம். அங்கிருந்து அரசாங்கப் பேருந்தில் கொடைக்கானல் போனோம். மறுநாள் காலை நான் நடைப்பயணத்தைத் துவக்கி வைத்தேன். ஆனால் சென்னை திரும்புவதற்குப் பதிலாக பயணத்தில் கலந்து கொள்ளவும், இயற்கை அழகை ரசித்து அனுபவிக்கவும் அடுத்த நான்கு நாள்கள் அங்கேயே தங்க முடிவு செய்தேன்.

பறக்கும் தொப்பிகள்
முதல்நாள் பயணம் 'பாரிஜாம்'. வழியில், பில்லர் ராக்ஸ் என்ற இடத்தில் இறங்கி, பள்ளத்தாக்கிலிருந்து பனி எழும்புவதைப் பார்த்தோம். காட்டு மலர்களைப் பறித்துக் கொண்டு 'கோக்கர்ஸ் வாக்'கைச் சுற்றிவந்தோம். அடுத்து 'தொப்பி தூக்கும் பாறை'யில் சற்று தங்கினோம். இந்த முனையிலிருந்து பள்ளத்தாக்கில் தொப்பியை வீசினால் அது திரும்பி மேலே வந்து விடும். நாங்கள் பலப்பல தொப்பிகளை வீசினோம். அவற்றில் பல திரும்பி வந்தன. பாரிஜாமில், ஏரிக்கரை அருகில் மதிய உணவை வெட்டிவிட்டு ’பலவண்ண ஷோலா காடு'களைப் பார்த்தோம். இந்தக் காடுகளில் ஒரே சமயத்தில் நிழல்கள் சிகப்பு, பழுப்பு, பச்சை நிறங்களில் தெரிகிறது. நாட்டில் உள்ள மிக அழகிய காடுகளில் இதுவும் ஒன்று.

தீயைச் சுற்றி நடனம்
மதிய உணவுக்குப் பிறகு ஊசிமரக் காட்டுக்கு நடந்து சென்று பிற்பகல் வெயிலில் மிருதுவான பைன் இலைப் படுக்கையில் ஒரு தூக்கம் போட்டோம். மாலையில் விறகுகள் சேகரித்துக் கொண்டுபோய் முகாமில் தீ மூட்டி நள்ளிரவு வரை எல்லோரும் பாடல்கள் பாடி, சுற்றி நடனமாடிக் களித்தோம்.

காலையில், நேரத்தோடு எழுந்து, சூரிய உதயத்தைப் பார்க்க உயரமான இடத்தைப் பிடித்தேன். பம்பாயிலிருந்து வந்திருந்த லோபோ என்ற இளைஞர் எனக்கு முன்னாலேயே அங்கே இருந்தார். இருவரும் நண்பர்களானோம். இயற்கை பற்றி ஏராளமாகப் பேசினோம். அவர் கால்நடைப் பயணத்தில் கில்லாடி. ஆனால் கொடைக்கானலில் முதன்முறையாக நடக்கிறார். இமாலயத்தில் பல சிகரங்களில் ஏறி வெற்றி கண்டவர். மன உறுதி மிக்கவர். நெடுநெடுவென்று உயரமானவர். நீண்ட கால்களுடன் தாண்டித் தாண்டி அடி எடுத்து வைத்து எல்லோருக்கும் முன்னால் நடப்பார். திடீரென ஒருநாள் குரங்கைப் போல அவர் ஒரு மரக்கிளை மீது உட்கார்ந்திருப்பதைக் கண்டோம். ரிசர்வ் வங்கியில் பணி புரிகிறார்.

மெய்யப்பனின் பாடல்கள்
எங்கள் அணியில் மற்றோர் உற்சாகமான இளைஞர் மெய்யப்பன். தமிழ் கிராமியப் பாடல்களைப் பாடி எங்களைக் கிறுகிறுக்க வைத்தார். இன்று அவர் தமிழ்நாடு இளைஞர் ஹாஸ்டல் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இன்னொரு இளைஞரான தேவராஜ், இயற்கை நல ஆர்வலர். அந்தமானிலுள்ள 'நண்டு தின்னும் மகாவ்' உள்ளிட்ட பலவகைப் பிராணிகளைப் பற்றி ஆய்வுகள் செய்திருக்கிறார். மிகவும் துறுதுறுப்பான பெருமாள்சாமி என்ற இளைஞரும் இருந்தார். அவர் தற்சமயம் மாநில சுற்றுலாத்துறையில் பொறுப்பாளராக இருக்கிறார்.

ராமன் பருந்தும் ரோமியோவும்
என்னுடன் அண்டை வீட்டுக்காரர்கள் தம்பி பிரேம் ராஜ் (இளம் வயது பயிற்சி மருத்துவர்), அவரது தங்கை ஜெயந்தி (உயர்நிலைப்பள்ளி மாணவி) ஆகியோர் இருந்தனர். இப்போது இருவரும் பெயர்பெற்ற கண் மருத்துவர்கள். கல்லூரி மாணவியான என் நாத்தனார் லதா தற்போது மன நல மருத்துவராகவும் மனநோய் ஆராய்ச்சி மையத்தின் உதவி இயக்குனராகவும் இருக்கிறார். மறக்க முடியாத ஒருவர், 'இளம் பறவைக் காப்பாளர்' ராஜாராம். அவர் எனக்கு, ராமன் பருந்து, நீல ஜாய்ஸ், ஏழு சகோதரிகள், ரகூன்கள், பாராகீட்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள் மற்றும் ஆந்தைகளை இனங்காணக் கற்றுக் கொடுத்தார். இன்று அவர் மனோதத்துவ இயலில் முனைவர் படிப்பை முடித்திருக்கிறார். ஒரு ரோமியோவும் கூடவே இருந்தார். அவர் பெயர் வெங்கடேஷ். அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவர் அணியின் கணக்குகளை கவனிப்ப்பார். பெண்களுடன் மிக நட்பாக இருப்பார். அவர்களது பைகளை எடுத்துச் செல்வார். சமயங்களில் அவர்களுக்குக் கைகொடுத்து உதவுவார். விடாமல் வளவளவென்று பேசிய அவரை 'வாயாடி' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட நடை மன்னர்கள் அணியில் நான் இருந்தேன்.

இரண்டாவது நாள்
மறுநாள் காட்டின் மிக முக்கியமான பகுதி வழியாக உயரமான பைன் மரங்கள், ஆஸ்பென்ஸ், நெடிய யூகலிப்டஸ் மரங்கள், காட்டு மலர்கள் ஆகியவற்றை ரசித்தபடி நடந்தோம். நினைவுச் சின்னமாகக் கொண்டுபோக எராளமாக பைன் மரக் காய்களைச் சேகரித்துக் கொண்டோம். இரவு தங்கும் இடமான காட்டுக் கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்குள்ள கூகல் அழகான பச்சை நிறப் புல்வெளிகள் கொண்டது. நாங்கள் மாலைப் பொழுதை அங்கே கழித்துவிட்டு கொட்டகையில் மரக்கட்டை போலத் தூங்கினோம்.

மறுநாள் தங்கப் பள்ளத்தாக்கின் உள்புறம் உள்ள மணவானூர் கிராமத்துக்குச் சென்றோம். சிறிய காய்கறி தோட்டங்கள், சிறு வீடுகள் நிறைந்த கிராமம். கால்நடைகள் அங்குமிங்கும் மேய்ந்து கொண்டிருந்தன. விவசாயிகள் உழுது கொண்டிருந்தனர். பெண்கள் விறகுக் கட்டு அல்லது தண்ணீர்க் குடத்தைச் சுமந்தபடி வந்தனர். ஒரு கனவுக் காட்சி போல இருந்தது எனக்கு.

மணவானூரிலிருந்து பூம்பாறை செல்ல வேண்டி இருந்தது. வழியில் ஒரு நீரோடை. உடைகளுடன் அப்படியே ஓடையில் தொப்பென்று குதித்தோம். உடம்பு குளிர்ந்தது. ஈரத்தை உலர்த்திக் கொள்ள முதலையைப் போலப் பாறைகளில் படுத்துக் கொண்டோம். அடுத்த நாள் காலை நாங்கள் கொடைக்கானல் சென்று, பிறகு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதால் புறப்பட்டோம்.

கடைசி இரவில்
இரவில் குளிர்காயும் தீ மூட்டத்தைச் சுற்றி ஒரே கூக்குரலும் கும்மாளமும். சிரிக்கும் ஒலி கூரையைத் தொட்டது. ஆனாலும், மறுநாள் காலையில் பிரியப் போகிறோமே என்ற வருத்தம் எல்லோர் இதயத்திலும் இருந்தது. பிரிவு உபசாரங்கள் ஒலித்தன. உறுதிமொழிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. முகவரிகள் கைமாறின. அன்போடு தழுவிக் கொள்வதும், தட்டிக் கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும்.... அனைவரது கண்களிலும் நீர் மல்க நடந்தன. என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத சுகமான அனுபவம் இந்த கால்நடைப் பயணம்.

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.)
தமிழ்வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை

© TamilOnline.com