தீபா ராமானுஜம்
டி.வி. தொகுப்பாளர், நாடக நடிகை என்று வளர்ந்து பின்னர் கே. பாலசந்தரின் பிரபல 'பிரேமி' தொடரில் பெயர் வாங்கி, சில திரைப்படங்களிலும் நடித்தவர் அமெரிக்காவில் 'க்ரியா' நாடகக் குழுவை நடத்தி வரும் தீபா ராமானுஜம். இவர் அண்மையில் 'தனிமை' நாடகத்தைச் சென்னையின் அரங்குகளில் மேடையேற்றியபோது, அரங்குகள் நிரம்பி வழிந்தன; பத்திரிகைகளும் பிரபலங்களும் புகழுரைகளை அள்ளி வீசினர். சென்னை நாடகக் குழுவினர் அமெரிக்காக்குவுக்கு வந்து அமர்க்களப்படுத்திய காலத்தில், இங்கிருந்து அங்கே போய்க் கலக்கியுள்ளன 'சுருதி பேதம்', 'தனிமை' ஆகிய நாடகங்கள். ஓலோனி கல்லூரியில் நடிப்பு, டைரக்‌ஷன் குறித்து மேற்கொண்டு படித்துள்ள தீபா, குறும்படங்கள் தயாரித்துள்ளார். 'அச்சமுண்டு, அச்சமுண்டு' படத்தின் திரைவடிவத்தை மேற்பார்வை செய்துள்ளார். சுவையான இவரது பின்னணி மற்றும் அனுபவங்களை அவரே சொல்லக் கேட்கலாம்...

*****


கே: நாடகத் துறை ஆர்வம் வந்தது எப்படி?

ப: நான் அமெரிக்கா வருவதற்கு முன்பு இந்தியாவில் டி.வி. ஷோக்களுக்குக் காம்பியரிங், மேடை நிகழ்ச்சிகள், டி.வி. தொடர்கள் செய்து கொண்டிருந்தேன். ஒருமுறை பாம்பே ஞானம் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தனது நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கேட்டார். அதில் நடித்தேன். அதுதான் ஆரம்பம். அதற்கு முன் கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறேன்.

கே: தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கிறீர்கள் இல்லையா?

ப: தேர்ந்தெடுத்த சில தொடர்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதில் ஒன்று பாலசந்தரின் 'பிரேமி'. என் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஷூட்டிங்குக்காக மலேசியா போனபோது 'வாழாவெட்டி செண்பகம் அத்தை மலேசியா வருகை' என்று நாளிதழில் செய்தி போடார்கள். அத்தனை பிரபலம் அந்தக் கேரக்டர். ஆபாவாணனின் சுந்தரவனத்தில் நடித்தேன். இந்துமதியின் கதை. அதில் மலேசியா வாசுதேவனின் மருமகளாக நடித்திருந்தேன். பிரபலமான பலரோடு அதில் நடித்தேன். இப்படிப் பல தொடர்கள். பிரேமியில் நடிக்கும்போது தீபா வெங்கட், துர்கா, நான் என எல்லாம் ஒரு குடும்பம் போலப் பழகினோம்.

கே: க்ரியாவின் ஆரம்பம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: பாங்காக்கிலிருந்து நான் 2000ல் அமெரிக்காவுக்குப் போனேன். ஒரு நண்பர் தீபாவளி விருந்துக்கு அழைத்தார். அவர் தமிழ்மன்றத்தில் ஒரு நாடகம் டைரக்ட் செய்ய வேண்டும். அனுபவம் இருக்கிறதே, நீங்கள் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லித் தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் மூலம் இரண்டு நாடகங்களை அடுத்தடுத்துப் போடும் வாய்ப்புக் கிடைத்தது. நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது தோன்றியதுதான் நாடகக்குழு தொடங்கும் எண்ணம். நான், எனது கணவர் ராமானுஜம், நண்பர் நவீன் நாதன் ஆகியோர் இணைந்து 'க்ரியா'வை உருவாக்கினோம்.

கே: உங்கள் நாடகங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

ப: முதலில் ஒரு அரசியல் நையாண்டி நாடகம் போட்டோம். பின்பு ஒரு குடும்பக் கதை. இரண்டுக்கும் நல்ல வரவேற்பு. அடுத்து வேறு என்ன செய்யலாம் என்று நாடகக் குழுவினர் அனைவருமே அமர்ந்து விவாதித்து முடிவு செய்தோம். எங்கள் நாடகம் நடக்கும் போதே நாங்கள் பார்வையாளர்களிடம் feedback form கொடுத்து அதன்மூலம் அவர்களது ரசனை, எதிர்பார்ப்பு, எது பிடிக்கவில்லை, ஏன் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு விடுவோம். இங்கே பெங்காலி, கன்னடம், ஹிந்தி, மராத்தி என்று பலமொழி நாடகக் குழுவினர் உண்டு. ஆனால், இவ்வளவு நாடக ஆர்வலர்கள், குழுவினர் இருந்தும் எங்கள் நாடகங்கள் தமிழில் மட்டுமே இருந்ததால் அவர்கள் பார்க்க வருவதில்லை. இந்தியர்கள் அனைவரையுமே கவரும் எண்ணத்தில் ஆங்கில நாடகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டோம். அதை மேடையேற்றினோம். அது இந்தியர்களைப் பற்றிய கதை என்பதால் அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. அதே நாடகத்தை பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களிலும் அரங்கேற்றினோம். எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு. எங்களிடமிருந்து காபிரைட் வாங்கி, அதை ஹிந்தியில் வெற்றிகரமாக அரங்கேற்றினார்கள்.

தொடர்ந்து மேலும் இரண்டு ஆங்கில டிராமாக்களைப் போட்டோம். புலிட்சர் அவார்ட் பெற்ற ஒரு நாவலின் காபிரைட்டை வாங்கி நாடகமாக்கினோம். ஹிந்தி உலகின் புகழ்பெற்ற டைரக்டர் ராம் மாத்வானியின் கதையின் காபிரைட்டுக்குப் பலர் போட்டி போட, எங்களுக்குத்தான் அனுமதி கிடைத்தது. அது க்ரியாவின் பயணத்தில் ஒரு மைல் ஸ்டோன். எல்லாவற்றுக்குமே பலத்த வரவேற்பு, பாராட்டு.

கே: சென்னை நாடக அனுபவம் குறித்து...

ப: நான் அமெரிக்காவில் மேற்படிப்புப் படித்து, டைரக்‌ஷன் கோர்ஸ் எல்லாம் முடித்து இந்தியாவில் ஜூலை 10, 2005ல் கிருஷ்ணகான சபாவில் இசை சம்பந்தப்பட்ட 'சுருதி பேதம்' என்ற நாடகத்தை மேடையேற்றினேன். அந்த நாளை வாழ்வில் மறக்க முடியாது. அமெரிக்காவிலிருந்து வந்து முதன்முதலில் இந்தியாவில் அரங்கேறிய நாடகம் அதுதான். இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் நாடகம் போட்ட காலத்தில், நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் போய் நாடகம் போட்டோம். அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு இந்தியாவில் அரங்கேற்றினால் என்ன என்று தோன்றியது. நடிகர் வரதராஜன் ஒத்துழைத்தார். தொடர்ந்து வருடா வருடம் இந்தியாவில் நாடகம் போட ஆரம்பித்தோம்.

வித்தியாசமான என்னால் மறக்க முடியாத அனுபவம் என்றால் சமீபத்தில் 'தனிமை' நாடகத்தைச் சென்னையில் போட்டபோது உட்கார இடமில்லாமல் நின்று கொண்டு மக்கள் பார்த்ததுதான். அங்குள்ளவர்களுக்கு நாங்கள் யார் என்றே தெரியாது. எங்கள் நாடகங்களை முன்பே பார்த்ததனாலோ, நண்பர்கள், சபாக்கள் மூலம் அறிந்தோ பார்க்க வருகிறார்கள். அதுபோலத்தான் பத்திரிகை நண்பர்களும். இப்படி முன்பின் தெரியாதவர்கள் வந்து எங்கள் நாடகத்தின் தரத்தைப் பார்த்து விட்டு, பாராட்டி எழுதுவது பெரிய விஷயம். இதற்கெல்லாம் காரணம் எங்கள் நாடகத்தின் தரம், குழுவினரின் நடிப்பு, உழைப்புத்தான் என்னும்போது பெருமையாக இருக்கிறது. 'தனிமை'யை பே ஏரியா மக்களுக்கு நவம்பர் 6 அன்று மேடையேற்றுகிறோம்.

கே: தமிழகத்தில் நாடகம் நடத்துவதற்கும், அமெரிக்காவில் நாடகம் நடத்துவதற்கும் இடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

ப: அமெரிக்காவில் லைட்டிங், சவுண்ட் என எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பவர்புல்லான லைட்கள் உள்ளன. அதுபோல சவுண்டை எடுத்துக் கொண்டால் எல்லாம் பவர்ஃபுல் மைக்ஸ். ஆகவே எந்தப் பக்கம் பார்த்துப் பேசினாலும் பார்வையாளர்களுக்குக் கேட்கும். ஆனால் இந்தியாவில் அதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. மைக்கைப் பார்த்து, ஆடியன்ஸைப் பார்த்துத்தான் பேச வேண்டும். இல்லாவிட்டால் காதில் விழாது. சபாக்களில் என்ன வசதிகள் இருக்கிறதோ அதைத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேடையமைப்பை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் அதற்கான ப்ரொபஷனல்ஸ் இருக்கிறார்கள். ஆனால் இங்கே நாங்கள்தான் செட் போட வேண்டும். எங்கள் குழு உறுப்பினர்களே கலந்து பேசி, ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக்கொண்டு எல்லாவற்றையும் நாங்களே செய்தாக வேண்டும். அது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நாங்கள் அதேபோல இந்தியாவிலும் செய்தோம்.

அமெரிக்காவில் நாடகம் போடுவது நண்பர்களுக்காகவும், இங்குள்ள மக்களுக்காகவும். பல நாடகங்கள் மூலம் க்ரியா இங்கே ஏற்கனவே பாப்புலர். இந்தியாவில் அப்படி இல்லை. முன்பின் தெரியாதவர்கள் எங்கள் நாடகங்களைப் பார்த்துவிட்டு மனம் மகிழ்ந்து பாராட்டும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

கே: தொலைக்காட்சி சீரியல்களால் மேடை நாடகத்திற்குப் பாதிப்பு உள்ளது என்ற கருத்து சரிதானா?

ப: அமெரிக்காவில் நிறைய சேனல்கள் உள்ளன. பலவித ஷோக்கள் உள்ளன. ஆனால் நாடகத்துக்கும் மக்கள் கூட்டமாக வந்து பார்க்கத்தான் செய்கிறார்கள். அதே போன்று தமிழ்நாட்டிலும் மக்கள் வந்து நாடகம் பார்க்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். டி.வி.யில் என்ன சீரியல் அல்லது படம் ஓடினாலும் அதை விட்டுவிட்டு நாடகத்தை மக்கள் வந்து பார்க்கும் காலம் நிச்சயம் வரும் என்பது என் நம்பிக்கை. நல்ல தரமான நாடகங்கள் போட்டால், நிச்சயம் வந்து பார்ப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

நாங்கள் இந்தியாவில் இரண்டு வாரங்கள் நாடகம் போட்டபோது எல்லா ஷோக்களும் ஹவுஸ்ஃபுல். நான் அங்கு இருக்கும் போது நிறைய நாடகங்களுக்குச் சென்றேன். எல்லா அரங்குகளும் நிறைந்துதான் இருந்தன. தற்போது கோபால், வரதராஜன், ஒய்.ஜி., காத்தாடி ராமமூர்த்தி, க்ரேஸி மோகன், எஸ்.வி. சேகர் என்று பலரும் சிறப்பாக நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. நல்ல டிராமா போட்டால் மக்கள் காசு கொடுத்துப் பார்ப்பார்கள் என்பது உண்மை.

கே: உங்களைக் கவர்ந்த நாடக நடிகர்கள் யார், யார்?

ப: அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சமீபத்த்தில் வெங்கட்டின் 'எதிர்பாராதது' பார்த்தேன். அதில் டி.வி. சுந்தர்ராஜன் சிறப்பாக நடித்திருந்தார். அதுபோல விவேகானந்தர் நாடகத்தில் மிகச் சிறப்பாக இரட்டை வேடங்களில் அப்சர் நடித்திருந்தார். கனவுகள் கொண்ட இளைஞனாகவும், விவேகானந்தராகவும் மாறி மாறி நடிப்பில் வித்தியாசம் காட்டியிருந்தார். அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும்.

கே: உங்களது திரைப்பட அனுபவம் குறித்து....

ப: நான் ரஜினி நடித்த 'அருணாசலம்' படத்தில் நடித்திருக்கிறேன். பாலாவின் 'சேது'வில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போதுதான் அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் அதில் நடிக்கவில்லை. இப்போதுகூட வாய்ப்புகள் வருகின்றன. ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், அண்ணி, அக்கா போன்ற கேரக்டர்களில் நடிக்க எனக்கு ஆர்வமில்லை. என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் பாத்திரம் இருந்தால் அதில் நடிப்பதில் தவறில்லை. ஆனால் அதற்காக நிறைய நேரம் ஒதுக்க வேண்டி வரும். நான் இப்போது நடிப்பு மட்டுமில்லாமல் டைரக்‌ஷனிலும் கவனம் செலுத்தி வருகிறேன். அதற்காகவே டைரக்‌ஷன் கோர்ஸ் சேர்ந்து படித்திருக்கிறேன். குறும்படம் எடுத்த அனுபவம் உண்டு. அதுபோக 'அச்சமுண்டு, அச்சமுண்டு', 'கதை' போன்ற படங்களிலும் பங்காற்றியிருக்கிறேன். ஒரு நல்ல டைரக்டராகச் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆகவேதான் திரைப்படங்களில் என்னால் தற்போது அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கி அளிப்பது என் எதிர்கால லட்சியம்.

கே: க்ரியாவின் அடுத்த படைப்பு?

ப: இப்போதைக்கு எங்களது கவனம் 'தனிமை' மீதுதான். அடுத்து வருவது எங்களது பத்தாவது ப்ரொடக்‌ஷன். அடுத்த வருடம் அதை அரங்கேற்றுவோம். எங்கள் குழுவில் பெங்காலிகள், கன்னடிகர்கள், மராத்தியர்கள், மலையாளிகள் என்று பல மொழிக்காரர்கள் உள்ளனர். அவர்களோடு அடுத்த நாடகம் குறித்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது.

"எங்களைப் பொருத்தவரை, இந்தியாவை விட்டுப் பிரிந்திருக்கிறோம்; கலை, கலாசாரத் தொடர்பற்ற நாட்டில் இருக்கிறோம்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதை விட, இங்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்குத்தான் 'க்ரியா' உருவானது. இந்தச் சூழலில் எந்த அளவிற்குத் தமிழர்களாக, இந்தியர்களாக இருக்க முடியுமோ, தமிழ்ப் பற்று, நாட்டுப் பற்றோடு இருக்க முடியுமோ அந்த அளவுக்கு நாங்கள் இருக்கிறோம். இருக்க முயற்சிக்கிறோம்.

ஒரு படைப்பாளிக்கே உரிய பெருமிதத்தோடு இதைச் சொல்லுகையில், இவர் செய்யக்கூடியவர்தான் என்று கூறியது அவர் கண்களில் தெரிந்த ஒளிக் கீற்று. "அப்படியே ஆகுக" என்று வாழ்த்தி விடை பெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


"உனக்குப் போட்டியாக வருவேன்" என்றார் பாலசந்தர்!

கே.பி. சாருக்கு இயல்பாக நடிப்பவர்களை மிகவும் பிடிக்கும். பிரேமியில் எனது வில்லத்தனமான நடிப்பை அவர் மிகவும் பாராட்டினார். எனது முதல் நாடகமான சுருதிபேதத்தைப் பார்க்க அவரை அழைத்திருந்தேன். அவரும் வந்தார். நாடகம் முடிந்ததும் டைரக்டர் மேடையேறினார். அவர் சொன்னார். 'நான் சூப்பர் ஸ்டாரைக் குட்டியிருக்கிறேன். கமல்ஹாசனைக் குட்டியிருக்கிறேன் என்று சொல்வார்கள். நான் தீபா ராமானுஜத்தையும் குட்டியிருக்கிறேன். தீபா பெரிய ஆளாக வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் டைரக்‌ஷன் இப்படிப் பண்ணுவாங்க என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஷாக்கிங்க் ரிவல்யூஷனாக இருந்தது' என்று சொன்னார். மேலும், "தீபா, நான் உனக்குப் போட்டியாக வருவேன். இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு உனக்குப் போட்டியாக வருவேன்" என்று சொன்னார். அவர் சொன்னதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த தடவை 'தனிமை' நாடகத்தை சென்னையில் அரங்கேற்றிய போது அதை அனுபவித்துப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டுப் பாராட்டினார்.

*****


ஒரு சுவையான சமாளிஃபிகேஷன்!

'சுருதிபேதம்' நாடகத்தில் நான் நித்யா. எனக்குத் தந்தையாகப் பாடகர் பஞ்சாபகேசன் ரோலில் ராஜீவ் நடித்தார். அம்மாவாக வித்யா சுப்ரமணியம் செய்திருந்தார். அவர் நல்ல நடிகை. சிறந்த நடனக் கலைஞரும் கூட. அவர் கல்யாணி என்ற பாத்திரத்தில் இரண்டாவது மனைவி வேடத்தில் நடித்திருந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டு அப்பா பார்க்க வருவார். உறவினர்கள் எல்லாரும் அம்மாவைப் பற்றியும், அவளது வாழ்க்கை முறை பற்றியும் கேலி பேசியதால் நான் அப்போது மிகுந்த கோபத்தில் இருப்பேன். அப்போதுதான் அவர் பார்க்க வருவார். அவர் என்னைப் பார்த்து, "என்னம்மா நித்யா, எப்படி இருக்கிறே, நல்லா இருக்கியா?" என்று கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக "என்னம்மா கல்யாணி, எப்படி இருக்கிறே; அம்மா எப்படி இருக்கிறாள்?" என்று கேட்டுவிட்டார். எனக்கு ஒரே கோபம். சமாளித்துக் கொண்டு அடுத்த செகண்டிலேயே, "பொண்ணு பேரே ஞாபகம் இல்லை, இதுல என்ன விசாரிப்பு வேண்டிக் கிடக்கு" என்று பதிலடி கொடுத்தேன். அவர் அப்படியே ஸ்தம்பித்து விட்டார். பின் சமாளித்துக்கொண்டு நடித்தார். இந்தச் சம்பவம் என்னால் மறக்க முடியாது.

© TamilOnline.com