தென்றல் வந்த வழியில்: நேர்காணல்கள்
தென்றல் தனது பத்தாண்டுக் காலப் பயணத்தில் பலவகைப் பக்கங்களையும் தாங்கி வந்துள்ளது. ஆனாலும், நேர்காணல், சிறுகதை இவையிரண்டும் தென்றலுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தந்தவை என்பதை வாசித்த பலரும் கூறுகின்றனர். அறிவியல், இலக்கியம், மருத்துவம், சமூகம், இசை, ஓவியம், நிர்வாகம், பொதுநலம் என்று வெவ்வேறு துறைகளில் தடம் பதித்த சாதனையாளர்களைச் சந்தித்து அவர்களின் சத்தான வாழ்வையும் வாக்கையும் தருவதில் தென்றல் உலகின் தமிழ் இதழ்களில் முன்னிலை வகித்து வருகிறது. பத்தாண்டுக் காலம்... எண்ணற்ற பேட்டிகள், விதவிதமான முகங்கள், வேறுபட்ட கருத்துகள். அவற்றிலிருந்து சில முத்துக்கள், ஒரு மீள்பார்வையில், இதோ....

*****

பரத்பாலா (தென்றல், டிசம்பர் 2000)
இன்றைக்கு தேசப்பற்று என்பதை வேறுவிதமாகத்தான் சொல்லவேண்டியுள்ளது. சுதந்திரத்துக்கு முன், தேசப்பற்றானது, தேச விடுதலையைப் பற்றியதாய் இருந்தது. சுதந்திர இந்தியாவில் அது புது உத்வேகமாக, புதிய சக்தியாக, புதிய பார்வையாக, இளைய தலைமுறையை எங்களால் சாதிக்கமுடியும் என்ற எழுச்சியைக் கொள்ளக்கூடிய உணர்வாகப் பரிணமித்துள்ளது. விழிப்புணர்வும், நம்பிக்கையும்தான் தேசப்பற்றின் வெளிப்பாடுகள். தேசப்பற்று என்பது வெறும் உணர்வுடன் நின்றுவிடாமல், உத்வேக செயலாற்றமாக, நாட்டுக்காகப் புதிய விஷயங்களைத் தரக்கூடிய, கடுமையான சவால்களை சந்திப்பதாக இருக்கவேண்டும்.

*****

மதுரை சின்னப் பிள்ளை (தென்றல், மார்ச் 2001)
ஆண்களைப் போல பெண்களுககும் சரிசமமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும். கிராமப் பெண்கள் இன்னும் சமையல் அறையிலேயே இருக்க வேண்டி உள்ளது. மீதி நேரத்தில் துணி துவைக்கும் கல்லாக இருக்கிறாள். பொழுதுபோக்காக சினிமாவுக்குப் போவதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. கிராமப் பெண்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அவர்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. புதுடெல்லியில் பிரதமரிடம் விருதுபெற்ற பிறகு மேடையில் பேசவேண்டும், அதில் 33% இடஒதுக்கீடு பற்றியெல்லாம் கூற வேண்டும் எனக் கற்பனை செய்து கொண்டு போயிருந்தேன். ஆனால், எனக்குப் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பல பெண்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக உள்ளனர். புதுடெல்லி, மும்பை என நான் விமானத்தில் போனபோது விமானப் பைலட்டாகப் பெண்கள் பணியாற்றுவதைப் பார்த்தேன். இந்த நிலையில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதை அனுமதிக்க வேண்டும்.

*****

மு. அனந்த கிருஷ்ணன் (தென்றல், ஆகஸ்ட் 2001)
Speech synthesiser தமிழில் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது. Text to speech, Speech to text என்று இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தமிழில் உள்ள மெல்லின வல்லின இடையின ஒலிப்பு முறைகளுக்கு ஏதுவாக ஆங்கில மொழி ஒத்துப் போகவில்லை. இதனால் ஆங்கிலத்தில் மாற்றுவது இப்போதைக்குக் கடினம். ஒலி அமைப்பு என்று எடுத்துக் கொண்டால் பெண்கள் பேசுவதற்கும் ஆண்கள் பேசுவதற்கும் ஒலிப்பு முறைகளில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால் இதைத் தரப்படுத்துவது கடினம். இந்தப் பணிக்காகத் தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதியுதவி ஒதுக்கியுள்ளோம். அதற்கான ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. Optical character recogonizer சிறப்பாகச் செயல்படவும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. Data Base மூலம் வார்த்தைகளைச் சேகரித்து வைத்து உச்சரிக்கும் ஒலிகளின்படி அந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும்படி தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்துகிற கட்டத்துக்கு வருகிற பட்சத்தில் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்களும் கணிப்பொறியைப் பயன்படுத்த ஏதுவாகும்.

*****

பேரா. எம்.எஸ். சுவாமிநாதன் (தென்றல், ஜூலை 2002)
1925ல் என் தகப்பனார் சாம்பசிவனை ‘கொசு ஒழிச்ச சாம்பசிவன்’ என்று சொல்வார்கள். அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்தபோது அவரது பேராசிரியர் அவரைக் கும்பகோணத்துக்குப் போகச் சொன்னார். ஏனென்றால், அப்போது கும்பகோணத்தில் கொசுக்கள் நிறைய இருந்தன. எனவே வியாதிகள் நிறைய இருக்கும், அதனால் மருத்துவர்களுக்கும் நிறைய நோயாளிகள் கிடைப்பார்கள்! அங்கே போங்கள் என்றார். அது போல, எங்கே போனாலும், நம்முடைய அறிவும், ஆற்றலும், பணமும், தொழில்நுட்பமும் எங்கே பயன்படும், எங்கே தேவை என்று தெரிந்து போக வேண்டும்

*****

பேராசிரியர் பாலா பாலசந்திரன் (தென்றல், டிசம்பர் 2002)
கல்வி நிலையத்துக்கு இடம் தேடி சென்னை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என்ற நான்கு நகரங்களுக்கு எங்கள் குழு சென்றது. திரு. சந்திரபாபு நாயுடு மட்டுமே விமான நிலையத்துக்கே வந்து மாலையுடன் எங்களை வரவேற்றார். 210 ஏக்கர் நிலத்தை அளித்து, நிலையம் அமைக்க வேண்டியதைக் கவனிக்க ஒரே அரசுத்துறையிடம் கொடுத்தார். 1998ல் அனுமதி அளித்து, டிசம்பர் 99ல் அடிக்கல் நாட்டி, மளமளவென்று ஒன்றரை ஆண்டில் முடித்து, 2001ல் திறக்கப் பட்டது இந்திய மேலாண்மைக் கல்விநிலையம் (Indian School of Business, www.isb.edu). பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை விடச் சிறப்பாகவும், கெல்லாக், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களுக்கு இணையான வசதியுள்ளதாகவும் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தின் முதல் மாணவர்கள் இந்த ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் பட்டம் வாங்கினார்கள்.

*****

ராதிகா சூரஜித் (தென்றல், நவம்பர் 2004)
சரவணபவன் மினிடிபன்தான் எனக்கு ‘தீம் தரிகிட’ நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கு உந்துதல். இதில் குட்டி தோசை, குட்டி இட்லி, கொஞ்சம் கேசரி என்று எல்லாவற்றையும் வைத்திருப்பார்கள். எல்லாவற்றையும் சாப்பிட்ட உணர்வு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும். அதுபோல நடனமே தெரியாதவர்களுக்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கலாம் என்றெண்ணி உருவானதுதான் இந்நிகழ்ச்சி.

*****

முனைவர் நன்னன் (தென்றல், நவம்பர் 2003)
பல்கலைக்கழகத் தேர்விலே நான் முதல் மாணவனாகத் வந்தேன். அதைப் பார்த்தவுடன் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் எனக்கு 50 ரூபாய் பரிசுத்தொகை வழங்கினார். என் இறுதியாண்டுப் படிப்புக்கு வேண்டிய அத்தனை புத்தகங்களையும் அதில் வாங்கிவிட்டேன். அவரிடமே ஒரு 20 புத்தகத்திற்கான பட்டியல் எழுதிக் கொடுத்துவிட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார். எனக்குப் பரிசு கொடுத்த மறு ஆண்டே உ.வே.சா. அவர்கள் காலமாகிவிட்டார். தமிழ்ப்புலவர் பட்டம் வாங்கினேன். அது இன்றைய எம்.ஏ. ஆனர்ஸுக்கு இணை. அதற்குப் பிறகு நிறைய மேல்நிலை வகுப்புகளுக்கு நான் பாடம் நடத்தியிருக்கிறேன். எனக்கு இப்பவும் என் புலவர் படிப்புதான் உதவி செய்கிறதே தவிர அப்புறம் நான் படிச்ச எல்லாம் சும்மா காசு சம்பாரிக்கிறதுக்குதான்.

*****


தென்கச்சி கோ. சுவாமிநாதன் (தென்றல், மே 2009)
கும்பகோணத்துல இருந்து எங்க டைரக்டருக்கு ஒரு கடிதம் வந்தது: 'உங்க வானொலில இன்று ஒரு தகவலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு வயது 85. நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியன். அந்த நிகழ்ச்சில யாரோ ஒரு பெரிய மகான் தினமும் பெரிய பெரிய கருத்தெல்லாம் சொல்றார். அவரை நான் தரிசிக்கணும்னு ஆசைப்படறேன்' அப்படின்னு எழுதியிருந்தார் ஒருத்தர். டைரக்டர் அதைப் படிச்சிட்டு உடனே என்னைக் கூப்பிட்டனுப்பி கடிதத்தைக் கொடுத்தார். யாருன்னு வாங்கிப் பார்த்தா அது எங்க வாத்தியார். கே.ஜி. கிருஷ்ணமூர்த்தின்னு பேரு. நான் அவருக்கு பதில் கடிதம் எழுதினேன். சார், நான் உங்ககிட்ட படிச்ச ஸ்டூடண்ட் தான். இப்போ ரேடியோவுல வேலை பாக்குறேன். ஒண்ணும் பெரிய மகான்லாம் இல்லன்னு பதில் எழுதினேன். அவர் உடனே சிரஞ்சீவி சுவாமிநாதனுக்கு ஆசிர்வாதம்ன்னு சொல்லி பதில் கடிதம் எழுதியிருந்தார். அதுல, நான் தினம் உன் வார்த்தைய காது கொடுத்துக் கேட்டுக்கிட்டிருக்கேன் அப்படின்னு எழுதியிருந்தார். நான் அதுக்கு பதில் எழுதினேன்: சார் நா படிக்குற காலத்துல என் காது உங்ககிட்ட இருந்தது. இப்போ உங்க காது என்கிட்ட இருக்குதுன்னு எழுதினேன். இன்னும் உனக்கு அந்தக் குறும்புத்தனம் போகவில்லைன்னு பதில் எழுதினார் அவர்.

*****

அனு நடராஜன் (தென்றல், அக்டோபர் 2010)
இங்குள்ள இந்தியர்கள் அரசியலில் அதிகம் பங்கேற்க வேண்டும். அரசியலிலும் நிர்வாகத்திலும் மாற்றங்களைக் கொண்டுவருவதில் முனைந்து செயல்பட வேண்டும்.

*****

க்ரேஸி மோகன் (தென்றல், செப்டம்பர் 2009)
எல்லோரும் சொல்வார்கள், மோகன் சுந்தரம் கிளேட்டன் வேலையை விட்டதற்குக் காரணம் சினிமா ஆசை, நாடக ஆர்வம் என்று. ஆனால் அது உண்மையில்லை. உண்மையான காரணம் நாய் பயம். சுந்தரம் கிளேட்டனில் நைட் ஷிப்ட் முடித்து வீட்டுக்கு வரும் போது ஜெமினியில் ஒரு க்ரூப் நாய் என்னை பிடித்துக் கொள்ளும். அப்படியே ஸ்டெல்லா மாரிஸ் வரை கூடவே வந்து, என்னை அங்கே விட்டுவிட்டுப் போய்விடும். அங்கே இன்னொரு க்ரூப் நாய் காத்துக் கொண்டிருக்கும். அது ம்யூசிக் அகாடமி வரைக்கும் கொண்டு வந்து விடும். பின் அங்கிருந்து வீடு. எனக்காகவே பிளான் பண்ணி அந்தக் காலத்தில் நாய்கள் க்ரூப் வாழ்ந்து வந்திருக்குமோ என்று சந்தேகம். ரிலே ரேஸ் மாதிரி என்னை அவை சுற்றிச்சுற்றி வந்தன. என்னால் முடியவேயில்லை ரொம்ப பயமாகிப் போய்விட்டது. குரைக்கிற நாய் கடிக்காது என்பதெல்லாம் பொய். நான் நம்பவே மாட்டேன். நாய் பத்தின எந்த பழமொழியையும் நான் நம்ப மாட்டேன். எனக்கு நாய் பயம் ரொம்ப ஜாஸ்தி. அதனால்தான் வேலையை விட்டேன். அதுதான் உண்மை.

*****

பேரா. வி. ராமநாதன் (தென்றல், ஏப்ரல் 2007)
வளிமண்டலத்தில் சேரும் கரியமில வாயு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் அங்கேயே இருக்கிறது. நூறாண்டு என்பது ஒரு மனிதனின் வாழ்நாள் அளவு. சென்ற சில நூற்றாண்டுகளில் மக்கள்தொகையும் தொழிற்சாலைகளும் மிகவும் பெருகிவிட்டதால் கரியமில வாயுவின் அளவு கூடிக்கொண்டே போகிறது. வளிமண்டலத்தில் வீசும் காற்றினால் இந்தக் கரியமில வாயு இடம்விட்டு இடம் நகர்ந்து, இந்தப் புவியுருண்டையை ஒரு போர்வை போலச் சூழ்ந்துவிட்டது.

*****

செல்வி ஸ்டானிஸ்லாஸ் (தென்றல், நவம்பர் 2006)
இங்குள்ள ஒவ்வொரு குடிமகனும் அரங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் அவர்களது கடமைகளுக்குப் பொறுப்பேற்கச் செய்யும் உரிமையைப் பெற வேண்டும். எங்கள் நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது, முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, அதன் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் என்ன, இன்ன பிற தகவல்களும் நடைமுறைகளும் ஒரு திறந்த புத்தகம்போல இருக்க வேண்டும். மக்கள் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஒரு அங்கத்தினர் போல பங்கேற்கும் நிலை உருவாக வேண்டும்.

*****

வெங்கட் சாமிநாதன் (தென்றல், பிப்ரவரி 2010)
முன்பெல்லாம் பத்திரிகைகளில் கதை, கட்டுரை என்று நிறைய வரும். ஆனால் தற்போது வெறும் துணுக்குகள்தாம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் மோசமான சினிமாவுக்கு மிக அதிக முக்கியத்துவம். அது பெரிய ஆக்கிரமிப்பாக இருக்கிறது. சினிமா அரசியலைத் தீர்மானிக்கிறது. அரசியல் சினிமாவைத் தீர்மானிக்கிறது. ஒரே விஷச்சூழல் இரண்டு பக்கமும் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சினிமாவும், சினிமாக்காரர்களுக்கு அரசியலும் அதிகமாக வேண்டியிருக்கிறது. அது ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. அவர்கள் பத்திரிகை என்றில்லாமல் எல்லா ஊடகங்களிலும் விரவியிருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல...

© TamilOnline.com