வெந்தயக்கீரை வகைகள்
வெந்தயம் ஒரு பயனுள்ள தாவரம். இது லெக்யூம் (legume) வகையைச் சேர்ந்தது. இதன் தாவர இயல் பெயர் Trigonella foenum-graecum. ஃபீனம் கிரேக்கம் என்றால் கிரேக்க வைக்கோல் (Greek hay) எனப் பொருள். இதன் இலைகள் முக்கோண வடிவில் இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். இதன் பூக்களும் முக்கோண வடிவில் வெண்ணிறத்தை உடையன. ஆங்கிலத்தில் ஃபெனுக்ரீக் (Fenugreek) என்றும் இந்தியில் மேதி என்றும் இதை அழைக்கிறார்கள்.

இதன் இலைகளில் முக்கியமாக 86.1% ஈரம், புரதம் 4.4%, கொழுப்பு 0.9%, தாதுப்பொருட்கள்1.5%, மாவுச்சத்து 6%, நார்ப்பொருள் 1.1% உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முழு வெந்தயத்தில் 26.2% புரதச் சத்து இருக்கிறது. அதிகப் புரதத்தில் வெந்தயம் சோயாவுக்கு இணையானது. வெந்தயம் உண்பதால் உடலில் உள்ள சர்க்கரை, கொழுப்புச் சத்து ஆகியவை குறைவதாக ஹைதராபாதில் உள்ள தேசியப் போஷாக்கு நிறுவனம் (National Institute of Nutrition) கண்டுபிடித்துள்ளது. இதை அழகுப் பொருளாகவும் நாம் உபயோகிக்கலாம்.

வெந்தய இலைகளையும், வெந்தயத்தையும் வைத்துச் செய்யும் சில உணவுவகைகளின் செய்முறையைப் பார்க்கலாம். இதன் தண்டுகளிலிருந்து இலைகளை மட்டும் உருவி உபயோகம் செய்யவேண்டும் பழுத்த இலைகளை உபயோகிப்பதில்லை. பொதுவாக, உப்புக் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்துப் பின்னர் பிழிந்து எடுத்துச் செய்தால் இதன் கசப்புத் தன்மை சற்று நீங்கும்.

முழு வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் அதைக் காலையில் வடிகட்டி, காயவைத்துக் கொண்டு பின்னர் அதை பொடி செய்ய வேண்டும். (சற்று முளைவந்த வெந்தயத்தையும் இவ்வாறு செய்வது மிக நல்லது). இந்தப் பொடியை அன்றாட உணவு வகைகளில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி சேர்த்து வந்தால் எண்ணிலடங்காத நன்மைகளைப் பெறலாம்.

வெந்தயக்கீரை தக்காளி சூப்

தேவையான பொருட்கள்
வெந்தயக்கீரை (நறுக்கியது) (அ) பதப்படுத்திய வெந்தயக்கீரை - 1/4 கிண்ணம்
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுப் பொடி - தேவைக்கேற்ப

செய்முறை:
வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் விட்டு, காய்ந்த பின்பு அதில் பூண்டு போட்டு வதக்கவும். பின்னர் வெந்தய கீரையைப் போட்டு, சற்று வதக்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் உப்புச் சேர்த்து, 2 கிண்ணம் தண்ணீர் விட்டு இதை குக்கரில் நான்கு சத்தங்கள் வரும்வரை வேகவிடவும். குக்கரின் உள்ளழுத்தம் தானாக அடங்கியபின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்து, தேவையான அளவுக்கு தண்ணீரோ அல்லது சிறிது பாலோ சேர்த்துத் தளர்த்தி அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதித்த பின்னர் இறக்கி மிளகுப் பொடி தூவிப் பருகலாம்.

வெங்காயம் சேர்த்தும் இதைச் செய்யலாம். அதற்குத் தக்காளியுடன் நறுக்கிய வெங்காயம் கால் கிண்ணம் சேர்த்து வதக்கிக் கொண்டு செய்யவேண்டும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com