இன்று இந்த நாள்; நாளை நல்ல நாள்
அன்புள்ள சிநேகிதியே

உங்களிடம் என்ன குறைப்பட்டுக் கொண்டு என் கவலைகள் தீரப்போகிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு வேகத்தில் எழுதுகிறேன். உறவு, உறவு என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்களே, பணம் இல்லாதவர்களுக்கு என்ன உறவு இருக்கிறது? பணம்தான் உறவு. பணம்தான் பாசம். பணம்தான் சொந்தம்.

என் கணவருக்கு வேலை போய் இரண்டு வருடம் ஆகப்போகிறது. அவ்வப்போது ஏதோ தற்காலிக வேலைகள் செய்து வருகிறார். எனக்கு ஏதோ ஒரு வேலை 'Doctor Office'. இதுமட்டும் நிரந்தரம். ஆனால் சம்பளம் அதிகம் இல்லை. என் குடும்ப நிலை தெரியும். அதனால் வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப மாட்டார் என்று ஒரு கணிப்பு. பையன் அடுத்த வருடம் காலேஜ் போகவேண்டும். பாவம், குழந்தைதானே ஏதோ யுனிவர்சிடிகளைப் போய்ப் பார்த்துக்கொண்டு வந்தான். நன்றாகப் படிக்கிறான். ஆனால் சரியான வழிகாட்ட யாரும் இல்லை. கணவருக்கு வேலை போனதிலிருந்து நான் இரண்டு வேலை செய்கிறேன். லீவ் எடுக்க முடிவதில்லை. வசதியும் இல்லை. அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டிவிட. பெண் டான்ஸ் கற்றுக் கொண்டிருந்தாள். நிறுத்தி விட்டேன். அரங்கேற்றம் செய்ய வசதியில்லை.

இதற்கிடையில் இவருடைய அண்ணா திடீரென்று சீரியஸாக இந்தியாவுக்கு ஒரு ட்ரிப் போக வேண்டி இருந்தது. நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இந்த கோடைக்காலத்தில் உறவினர் வருகை வேறு. நாங்கள் பெரிய வீட்டில் இருக்கிறோம் என்று எதிர்பார்த்து வந்துவிட்டு, சும்மா இல்லாமல், மற்ற உறவினர் வீடுகள் எப்படிப் பெரிதாக இருந்தன, எந்தெந்த மாடல் லக்சுரி கார் வைத்திருக்கிறார்கள் என்று எங்களிடம் விவரிப்பார்கள். கொஞ்சம் இங்கிதம் தெரிய வேண்டாமா? இதுபோன்ற சொந்தங்கள் ஒரு பக்கம் இருக்க, உண்மையான சொந்தக்காரர்கள் ஏதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு இங்கே அமெரிக்காவிற்கு வந்தால், அவர்களுடைய நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து கொண்டு (எல்லாம் மில்லியன் டாலர் வீடுகள்) எங்களை வந்து பார்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். என் பெண் என்னிடம் கேட்கிறாள், “ஏம்மா அத்தை நம்முடன் தங்கவில்லை?” என்று. எதிர்காலத்தை நினைத்தாலே பயமாக இருக்கிறது. வயது ஆக ஆக வேலை வாய்ப்புக்களும் குறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. நான் செய்யும் இரண்டு வேலைகளில், ஒன்றில் நின்றுகொண்டே இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்தால் எதையும் செய்வதற்கு எனர்ஜி இருப்பதில்லை. நண்பர்கள் என்று அடிக்கடி யாரையும் கூப்பிடுவதில்லை. நாங்களும் போவதில்லை. அவர்களும் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டார்கள். எது செய்தாலும் பணம் தேவைப்படுகிறதே!

இரண்டு வாரம் முன்பு திடீரென்று எனக்கு வயிற்றுவலி வந்து மிகவும் கஷ்டப்பட்டேன். கடவுளே, இது என்ன சோதனை. ஏதேனும் சீரியஸ் ஆகிப் போனால் என் வேலை என்ன ஆவது, குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள்? இவர் ஏற்கனவே depressed ஆக இருக்கிறார். நாம் இப்படி நாதியில்லாமல் இருக்கிறோமே என்று துக்கமாக இருக்கிறது. கொஞ்சம் பணவசதி இருந்தால் தைரியம் இருக்கும். எல்லா உறவுகளும் 'டாலர்'தான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

இப்படிக்கு
.................

அன்புள்ள சிநேகிதியே,

உங்கள் வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் பணம் அடிப்படைக் காரணமாக இருந்திருப்பது ஓரளவுக்கு உண்மை என்பது நிச்சயம். திருமண பந்தத்தில் தாம்பத்ய உறவு எவ்வளவு முக்கியமாகக் கருதப்படுகிறதோ, அதேபோலப் பணம் குடும்ப வளர்ச்சிக்கு ஆதாரமாகத்தான் இருக்கிறது. உங்களுடைய பேச்சில்/எழுத்தில் இருக்கும் கசப்பு, வெறுப்பு மூலம் நீங்கள் எந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறீர்கள் என்று தெளிவாகப் புரிகிறது. நமக்குப் பிறருடைய துக்கத்தை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாத நிலை. “எனக்குப் பணம் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைத்தது போலத்தான்” என்ற வாதம் நான் எழுதப் போவதற்குப் பொருந்தாது.

உங்கள் கணவருக்கு வேலை போய், நீங்கள் இரண்டு வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால்தான் இந்த வேதனையா, இல்லை எப்போதுமே சாதாரண வசதியில்தான் இருந்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. இதை எழுதிக் கொண்டிருக்கும்போது நிச்சயம் உங்கள் நிலையில் நல்ல மாறுதல் இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக நினைத்துக் கொள்கிறேன்.

நான் உறவுகளைப்பற்றி எழுதும்போது பிறரோடு இருக்கும் உறவுகளைப்பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. நமக்குள்ளேயே நாம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு மிகவும் முக்கியம். அந்த உறவுதான் நம் சிந்தனைகளை, உணர்ச்சிகளை உருவாக்குகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். “I can do it" என்பது Personality Developement-ல் மூல மந்திரமாக இருக்கும். அந்த 'என்னால் முடியும்' என்ற உணர்ச்சி எப்போது வரும்? நம்மை நாமே ஆய்வு செய்து, நமக்கு நாமே அறிவுரை கொடுத்துக் கொள்ளும்போதுதான். ஆயிரம் முறை பிறர் எடுத்துச் சொன்னாலும் அந்த நம்பிக்கை, அந்த உணர்ச்சி நம்முடன் நாமே ஏற்படுத்திக் கொள்ளும் உறவினால்தான் ஏற்படும். ஒரு Training Session-ல் அந்த ட்ரெய்னர் கையை உயர்த்தி, “I can do it" என்று சொல்லி, எல்லோரும் கையை உயர்த்திக் கத்தும் போது, நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கும். அப்போது எதையும் சாதித்து விட முடியும் என்ற உணர்வு பெருகும். ஒரு காற்றடைத்த பலூன் போல நாம் மிக அழகாக மிதந்து கொண்டிருப்போம். பிறகு, வீட்டிற்கு வந்து நம்முடைய பிரச்சினைகளை திரும்பிச் சந்திக்கும்போது அந்தக் காற்று 2-3 தினங்களில் குறைந்து ஒரு சுருங்கிய பலூன்போல மறுபடியும் ஆகிவிடுவோம். அந்த ட்ரெய்னர் மேல் குறை சொல்ல முடியுமா? அவர் அழகான வழியைத்தான் சொல்லி இருக்கிறார். ஆனால் நம்மோடு நமக்கு இருக்கும் உறவைப் பலப்படுத்திக் கொண்டால்தான் அந்த வண்ணக் கலர் பலூன் போல நாம் அவ்வப்போது நாமே காற்றை ஏற்றிக் கொண்டு பிரச்சனைகளைச் சமாளிக்கத் தயாராவோம். இதை Auto Counseling என்றுகூடச் சொல்லிக் கொள்ளலாம். எனக்குப் பல அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள் ஆசை. ஆனால் அதுவே ஒரு புத்தகமாக மாறி விடும்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்க என்னுடைய நான்கு கருத்துக்களைத் தெரிவித்து விடுகிறேன்.

* பணம் பெரிய பிரச்சனை. வியாதியும் பெரிய பிரச்சனை. பொருளிழப்பு பெரிய துக்கம். மனித இழப்பு அதைவிடப் பெரிய துக்கம். ஆகவே, ஏதோ ஒரு பிரச்சனை எல்லோருக்கும் எந்த வகையிலோ வந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது, இருக்கும். சில நம்மால் ஏற்படும். சில பிறரால் ஏற்படும். சில நமக்கும் அப்பால் இருக்கும் சக்தியால் ஆட்டி வைக்கப்படும். எப்படி யார் மூலம் ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பது நம்மால்தான் முடியும்.

* அந்தச் சமாளிக்கும் சக்திக்கு நமக்குத் தன்னம்பிக்கை நிறைய வேண்டும். அந்த நம்பிக்கைக்கு நம்முடன் நமக்கு ஏற்படும் உறவுதான் உரம். அந்த உறவில் நாம் அலுத்துக் கொள்ளாமல், நமக்கே நாம் ஆதரவு கொடுத்துக்கொண்டு, நம் நிலைமையைச் சீர்படுத்தப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்ப்போம். வலி இருக்கத்தான் இருக்கும். நமக்கு நாமேதான் ஒத்தடம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

* நமக்கு அப்பால் இருக்கும் சக்தியில் நம்பிக்கை வேண்டும். எந்தச் சக்தி எதிர்பாராத சோதனைகளைக் கொடுக்கிறதோ, அதே சக்தி எதிர்பாராத நல்ல வாய்ப்புக்களையும் கொடுக்கும்.

* 'இன்று இந்த நாள். நாளை நல்ல நாள்' என்ற நம்பிக்கை வேண்டும். நாளை என்றால் அந்த 24 மணிநேர நாளையை நான் சொல்லவில்லை. எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். வாழ்க்கையில் மிகச் சிலருக்குத்தான் 'சிகப்புக் கம்பளத்தில்' ஒரே சீராக நடப்பது போல் அமையும். மற்ற எல்லோருக்கும் உயர்வு, சரிவு, மேடு, பள்ளம். இருப்பது நமக்கே தெரியாது. இன்றைக்கு நல்ல வசதி படைத்தவர்களைப் பார்த்து நாம் ஏங்கினால், அவர்கள் ஆரம்பத்தில் எத்தனை சோதனைகளைச் சந்தித்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களது வரலாறைப் படித்தால் தவிர?

இந்தப் பகுதியைப் படித்த பின்பு ஒன்று செய்து பாருங்கள். இரண்டு கைகளையும் கோர்த்து, பத்து விரல்களையும் ஆதரவாக அமுக்கி கூப்பினாற் போலப் பிடியுங்கள். கூப்பிய நிலையில் கை விரல்களைப் பிரித்துக் கூப்பி விடுங்கள். ஒரு 30 வினாடிக்கு. ஒரு நல்ல உணர்ச்சி மனதுக்குள் உண்டாகும். அதைப் பற்றி பின்னால் விவரிக்கிறேன்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com