கவிஞர் தாமரை
திரைப்படத் துறையில் பாடலாசிரியராக வெற்றி பெற்ற முதல் பெண் என்று கவிஞர் தாமரையைக் கூறலாம். 'தூய தமிழில்தான் பாடல்கள் எழுதுவேன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்' என்றெல்லாம் நிபந்தனைகளுடன் திரைப்பாடல்களை எழுதும் இவர் பெரிய போராட்டத்துக்குப் பின்னர்தான் இத்துறையில் நுழையவும், வெற்றி பெறவும் முடிந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு முன்னரே எழுத்தாளராக, கவிஞராகப் பல இதழ்களில் அறியப்பட்ட தாமரை மிகுந்த கொள்கைப் பிடிப்பு உடையவர் என்பதோடு, ஈழத்தமிழர் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு வருகை தந்த கவிஞரைத் தென்றலுக்காகச் சந்தித்தார் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் பாகீரதி சேஷப்பன். இவர் மேடை வடிவமைத்து இயக்கிய கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பெற்ற வெற்றி தென்றல் வாசகர்கள் அறிந்ததே. இனி நேர்காணல்...

*****


பாகீரதி சேஷப்பன்: ஒரு பெண்ணான நீங்கள் திரைப்படத் துறையில் நுழைந்து பெரிய வெற்றி கண்டுள்ளீர்கள். உங்களைப் பற்றிய பின்னணியைத் தென்றல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தாமரை: என் பெற்றோர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள். நகராட்சிப் பள்ளியிலே வேலை செய்தார்கள். நாங்கள் மூன்று பிள்ளைகள். மூவரையும் நல்ல தமிழ்ப் பற்றுடன் வளர்த்தார்கள். படிப்பறிவு பெற்றதில் என் பெற்றோர் முதல் தலைமுறை. நாங்கள் இரண்டாவது தலைமுறை. எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதனால் படிப்பு மிகவும் முக்கியம் என்ற சூழ்நிலையில் வளர்க்கப்பட்டோம். நாங்கள் மூவருமே மிகவும் நன்றாகப் படித்து, பொறியாளர்கள் ஆனோம்.

கே: நீங்கள் ஆரம்ப நாட்கள் முதலே திரைப்படக் கவிஞர் ஆகிவிடுவது என்ற முடிவில்தான் இருந்தீர்களா?

ப: இல்லை. நான் சிறு வயதிலிருந்து சினிமாப் பாடல்களைக் கேட்பதில் ஈடுபாடு கொண்டிருந்தேன். ஆனால் பாடலாசிரியராக வருவேன் என்று நினைத்தது இல்லை.

கே: அப்படியானால் சென்னைக்கு என்ன செய்ய எண்ணி வேலையைத் துறந்து விட்டு வந்தீர்கள்?

ப: நான் கல்லூரியில் படிக்கும் பொழுது ஜூனியர் விகடன், ஆனந்த விகடனில் மாணவ நிருபராக இருந்தேன். இரண்டாவது குழுவில் அதாவது 1985, 86ல் நான் இருந்தேன். நான் படிக்கும்பொழுது எழுதிய ஒரு கவிதை, 'மென் பாதங்கள்' என்ற தலைப்பில், கல்கியில் பிரசுரமானது. சுமார் 3 கதைகள் சாவியில் பிரசுரமாயின. உதவி ஆசிரியர் பணிக்கு முதலில் சாவியில் விண்ணப்பம் செய்தேன். கிடைத்தது. ஆனால் அதைவிட 10 மடங்கு அதிகச் சம்பளத்தில் பொறியாளராக இருந்ததால், உதவி ஆசிரியர் வேலையை ஏற்க முடியவில்லை. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்ததால் மிகுந்த சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது. நான் வேலையை விட்டுவிட்டு, எழுத்தாளராக வேண்டும் என்ற முயற்சியில் சென்னைக்கு வந்ததில் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. எல்லோரையும் பகைத்துக் கொண்டு, வேலையையும் விட்டுவிட்டு ஒரே ஒரு சூட்கேசுடன் சென்னைக்கு வந்து விட்டேன். வெற்றியடையாமல் திரும்பிப் போகமுடியாது. ஒருவேளை அதனால்தான் ஜெயித்தேனோ என்னவோ. (சிரிக்கிறார்).

கே: சென்னைக்கு வந்து என்ன செய்தீர்கள்?

ப: பொறியாளராக வேலை செய்து சேர்த்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை வைத்துச் சிக்கனமாக வாழ்ந்துகொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வாய்ப்புத் தேடி அலைந்தேன்.

கே: பத்திரிகை ஆசிரியர் பணி இன்னமும் கிடைக்க இருந்தது அல்லவா? அதை எடுத்துக் கொள்ள முயற்சிக்க வில்லையா?

ப: இந்தச் சமயத்தில் எனக்குத் தீர்மானமான ஒரு அரசியல் பார்வை, கொள்கைகள் போன்றவை வந்துவிட்டன. பத்திரிகைகளில் சேர்ந்தால் நான் என் விருப்பப்படி எழுத முடியாது. எனவே சேரவில்லை. சினிமாப் பாடலாசிரியராகத் தீர்மானித்து வாய்ப்புத் தேடி அலைந்தேன்.

கே: சினிமாத் துறையில் பெண் பாடலாசிரியர்கள் யாருமே இல்லாத காலத்தில் எப்படி அதில் நுழைந்து முன்னுக்கு வர முடிந்தது?

ப: ஆமாம். நான் வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் கிடையாது. நான் மிகவும் போராடித்தான் புக முடிந்தது. நான் என் திறமைகளை மிகவும் சிரமப்பட்டு நிரூபிக்க வேண்டி இருந்தது. சில சமயங்களில் சோர்வு ஏற்படும். அப்போது முயற்சியைக் கைவிட்டு விடுவோமா என்றுகூடத் தோன்றும். ஆனால் இதற்குள் நான் சினிமாத் துறையில் வர முயற்சி செய்கிறேன் என்று எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. இதற்காக மிகவும் முயற்சி செய்கிறேன் என்ற செய்தி பத்திரிக்கைகளில் எல்லாம் பிரசுரமாகி விட்டது. எனவே, இப்போது நான் கைவிட்டால் 'பெண்களால் இந்த துறையில் வெற்றி பெறவே முடியாது' என்று என்னைக் காரணம் காட்டி முத்திரை குத்தி விடுவார்களோ என்று தோன்றியது. மற்றப் பெண்களுக்கு இது ஒரு தடங்கலாகி விடும். எனவே, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். இனி பின்வாங்கக் கூடாது என்று கடினமாக உழைத்தேன். ஓரளவு வெற்றியும் பெற்றேன்.

கே: சுவாரசியமான போராட்டங்கள்தான். இயற்கையான தமிழ்க் கவிதைகளின் வழிமுறைகள், கொள்கைப் பாடல்கள், உணர்ச்சி பூர்வமான பாடல்கள் என்ற வகைகளில் இருந்து தமிழ்த் திரையுலகம் வெளிவந்து விட்ட கால கட்டத்தில் நீங்கள் உள்ளே நுழைந்தீர்கள். மீண்டும் இந்த வழிமுறைகளை உள்ளே புகுத்தினீர்கள். அது மீண்டும் ஒரு போராட்டமா?

ப: (சிரிக்கிறார்.) ஆமாம். நான் 'தூய தமிழில்தான் பாடல்கள் எழுதுவேன், ஆங்கிலமும், ஆபாசமும் கலக்காமல் தான் எழுதுவேன்' போன்ற கொள்கைகளுடன் சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். அதில் வெற்றி பெற மக்கள்தான் காரணம். மக்களிடம் இதுபோன்ற பாடல்களுக்குத் தேவை இருக்கிறது. வேறு மாதிரியான பாடல்கள் மக்களிடம் சலிப்பையும் கசப்பையும் ஏற்படுத்தி இருந்தது. நான் இதற்கு ஒரு மாற்று ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

கே: திரைப் படத்தில் நீங்கள் முதலில் யார்மூலம் பாடல்கள் எழுத ஆரம்பித்தீர்கள்?

ப: நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். கிடைக்கவில்லை. ஊருக்குத் திரும்பிப் போய்விட்டேன். அதன் பிறகு கதை, கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். முதலில் போட்டிக் கதைகள் எழுதினேன். எந்தப் பத்திரிகையில் போட்டி அறிவிக்கப்பட்டாலும், அதில் என் கதையோ, கவிதையோ கண்டிப்பாகப் பங்குபெறும். என்னை எனக்கும், மற்றவர்களுக்கும் நிரூபிக்க இது பயன்பட்டது. பரிசாக வந்த தொகை மிகவும் பயன்பட்டது. நல்ல இலக்கியப் பரிசுகள் எனக்குக் கிடைத்தன. அதன்மூலம் என்னைப் பிறருக்கு அடையாளம் தெரிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 15 பரிசுகள் கிடைத்தன. பரிசுகள் வாங்குவதற்காக அடிக்கடி சென்னை வருவேன். குமுதம்-ஏர் இந்தியா சேர்ந்து நடத்திய கவிதைப் போட்டியில் 'தொலைந்து போனேன்' என்ற என் கவிதை பரிசு பெற்றது. பரிசாக சிங்கப்பூர் செல்ல எனக்கு இலவச டிக்கட் கிடைத்தது. அப்போது சுஜாதா அவர்கள் குமுதம் இதழின் ஆசிரியராக இருந்தார். அந்தப் பரிசு என்னை எல்லோருக்கும் தெரிய வைத்தது. 1996ல் நான் சிங்கப்பூர் போனேன். என்னுடைய அனுபவங்கள் விரிவடைந்தன. அதன் பிறகுதான் சென்னையிலே நிரந்தரமாக வந்து தங்க முடிவு செய்தேன்.

இரண்டாம் கட்டமாக நான் மீண்டும் வாய்ப்புத் தேடியபோது, என்னுடைய பிரசுரமான கதைகள், பரிசுபெற்ற கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் முன்பே எல்லோருக்கும் தெரிந்திருந்த காரணத்தால் மிக உதவியாக இருந்தது. சாவி அவர்கள் தம் கைப்பட 'நான் உங்கள் விசிறி' என்று கடிதம் எழுதினார். என்னிடம், சாவியில் தொடர்கதை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார். 'நேற்றைய மிச்சங்கள்' என்ற ஒரு தொடர்கதையை சாவிக்காக எழுதி வந்தேன். 21 வாரங்கள் வெளிவந்தது. அதிலும் நான் பிரபலமானேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளரிடமோ இயக்குனரிடமோ சென்று வாய்ப்புக் கேட்கும் பொழுது எனக்கு ஒரு அடையாளம் இருந்தது. நான் சீமான் அவர்களைச் சந்தித்தேன். அவர் தேவாவின் இசையில் ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். இந்தப் பாடல் ஸ்டூடியோவில் தயாராகிக் கொண்டிருந்த பொழுது விக்ரம் அவர்களின் உதவியாளர் என்னைச் சந்தித்தார். அவர் பாடலைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னதுடன், விக்ரம் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்தார். விக்ரம் அப்போது 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' என்ற படம் செய்து கொண்டிருந்தார். அந்த படத்தில் ஒரு பாடலுக்கு வாய்ப்புக் கொடுத்தார். 'மல்லிகைப் பூவே, மல்லிகைப் பூவே' என்ற அந்தப் பாடல் மிகுந்த வெற்றி அடைந்தது. படமும் பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு எனக்கு வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தன. ஆனாலும், ஒவ்வொரு வாய்ப்பை அடையவும், என்னை நிரூபிக்கவும் மிகவும் கடினமாக இருந்தது. பெண் கவிஞர் என்பதால், ஒவ்வொரு புது இயக்குனரிடம் போகும்போதும் எனக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினமாக இருந்தது. என்னால் கையாள முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி ஒவ்வொரு முறையும் வருகிறது. அதனால் என்னை மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டி இருக்கிறது. என்னிடம் பாடல்காட்சியை விவரிக்க அவர்களுக்குத் தயக்கம் இருக்கும். நானும் சில கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறேன். நிபந்தனைகள் போடுவேன். அதாவது, தூய தமிழ்ப்பாடல்கள் தான் எழுதுவேன், மோசமான இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுத மாட்டேன், ஆங்கிலம் கலக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விடுவேன். இதன் காரணமாக நான் சுமார் ஒரு நூறு வாய்ப்புக்களுக்கு மேல் இழந்திருக்கிறேன். ஆனால் அது எனக்கு நன்மையே செய்தது. எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கள் நல்ல தரமான இயக்குனர்களிடம் கிடைத்தது. நான் தரமான பாடல்களுடனே ஆரம்பித்தேன். இப்படித்தான் கௌதமைச் சந்தித்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் பாடல்கள் கொடுத்தார்.

2002ம் ஆண்டில் 'காக்க காக்க' என்ற படத்துக்குப் பாடல் எழுதினேன். படம் பெரிய வெற்றி கண்டது. சூர்யாவுக்கு அது அடுத்த கட்டம். கெளதமுக்கு அந்தப் படம் நல்ல பெயர் வாங்கித் தந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் நல்ல இசை அமைப்பாளராக உருவானார். எனக்கும் அந்தப் படத்திற்குப் பிறகு பெயர் நிரந்தரமானது. 'வேட்டையாடு விளையாடு', 'கண்டநாள் முதல்' போன்ற படங்களில் முழுப்படத்துக்கும் நானே பாடல்கள் எழுதினேன். இந்த வரிசையில் 'வாரணம் ஆயிரம்' ஒரு பெரிய வெற்றி.

கே: வருங்காலப் பெண் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

ப: நான் முன்னணிக்கு வருவதற்கு, 1997 முதல் இதுவரை 13 1/2 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இன்று உள்ளே வந்து விட்டு, நாளைக்கே பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கடின உழைப்பும், தியாகமும், பொறுமையும் கட்டாயம் வேண்டும். நேர்மையாகவும், ஊக்கத்துடனும் ஒரு முயற்சியில் ஈடுபட்டால் அது கட்டாயம் பலன் தரும். நீண்டகால நோக்கில் அதுதான் சரியான அணுகுமுறை. நான் அதைத்தான் பார்த்தேன்.

கே: உங்கள் அமெரிக்க விஜயம் பற்றிப் பேசலாமா?

ப: FeTNA சுமார் 12 ஆண்டுகளாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கடுமையான மைக்ரைன் (தலைவலி) நோயாளி. எனவே, என்னால் அதிகம் பயணம் செய்ய முடிவதில்லை. மேலும், நான் வெளியூர் வந்துவிட்டால், சென்னையில் பட வாய்ப்புக்கள் நழுவிவிடும். 2002ல் எனக்குத் திருமணம் ஆனது. அதன்பிறகு குழந்தை பிறந்தான். இதுபோன்ற காரணங்களால் நான் அமெரிக்கப் பயணத்தைத் தள்ளிப்போட்டு வந்தேன். இந்தமுறை குழந்தையும் சற்று வளர்ந்து விட்டதால் எல்லோருமாக வந்தோம். நிறைய மாநிலங்களுக்குப் போனேன். நிகழ்ச்சிகள் நன்றான இருந்தன. என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு மகிழ்ச்சியான பயணம்தான். இந்தப் பயணம், ஊர் சுற்றிப் பார்ப்பதற்கோ, மக்களைச் சந்தித்துப் பழகவோ வந்ததில்லை. சமூக நோக்குடன் தான் வந்தேன்.

சென்ற ஆண்டு ஈழப் போர் நடந்து முடிந்த போது, 'எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் தமிழக மக்கள் கொதித்து எழவில்லை, தட்டிக் கேட்கவில்லை' என்ற வருத்தம் எனக்குண்டு. இந்தக் கொடுமைக்கு ஒரு நியாயம் சொல்லுங்கள். என் வீட்டிலே அம்மாவோ, உங்கள் சகோதரியோ அங்கே செத்துப் போயிருந்தால் நாம் சும்மா இருப்போமா? அங்கே செத்தவர்கள் தமிழர்கள்தானே? அப்போது நமக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு கிடையாதா? இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் வேண்டும். இந்த 21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

கே: ஜாலியன்வாலாபாக் நினைவுக்கு வருகிறது இல்லையா?

ப: ஆமாம். அங்கே ஒரு 400 பேர் செத்தார்கள். இங்கே 50,000 பேர். உலக நாடுகள் எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றன. இலங்கை அரசைப் போர்க் குற்றவாளி என்று ஐ.நா. அறிவித்து விட்டது. அதன் அடிப்படையில் பொருளாதார ரீதியில் இலங்கை அரசைத் தனிமைப்படுத்தவும், குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரிக்கவும் நான் எல்லாத் தமிழ் மக்களிடமும் ஆதரவு கேட்கிறேன்.

இந்த உணர்ச்சிகரமான கட்டத்தில் நேர்காணலை முடித்துக்கொண்டு கவிஞருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com