பவித்ரா நாகராஜன் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 22, 2010 அன்று செல்வி. பவித்ரா நாகராஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலிஃபோர்னியாவில் ஃப்ரீமாண்ட் நகரிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது. இவர் ஆறு வயது முதல் குரு தீபா மகாதேவனிடம் நாட்டியம் பயின்று வருகிறார்.

ஆனை முகத்தோனே என்ற குரு. மதுரை ஸி. முரளிதரனின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து அலாரிப்பு இந்தோள ராகத்திலும் கண்ட நடையிலும் அமைந்தது. அங்கசுத்ததுடன் அடவுகளிள் மூலம் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளைத் தெளிவுற விளக்கினார் பவித்ரா.

சுத்த நிருத்யம் என்று கூறப்படும் ஜதீஸ்வரம் தொடர்ந்தது. ரூபக தாளத்துடன் ஆடிய ஜதிக்கோர்வைகள் அழகுடன் மிளிர்ந்தன. பவித்ராவின் வர்ணம் கண்ணன் யசோதையிடம் தன் குறைகளைக் கூறி முறையிடுவதாக அமைந்திருந்தது. தான் தாய்முகம் பாராத சேயாக இருப்பதாலும், கருவண்ணனாய்ப் பிறந்ததாலும், அலட்சியப்படுத்தப் படுவதாகவும் பலராமனுக்கு எல்லாமே கிட்டுவதாகவும் குறை கூறுகிறான் கண்ணன். பலமணி நேரம் மாடு மேய்த்து ஓய்ந்து உண்ணக்கூட நேரம் இன்றி பிறகு வெண்ணையை திருடித் தின்ன வேண்டியுள்ளதகாகக் கூறுகிறான். யசோதையின் இரக்கதிற்குப் பாத்திரம் ஆவதுபோல், தான் உரலில் கட்டப்பட்டதாகவும், பலமுறை பாய்மரத் தோணியாகத் தவித்ததாகவும் கூறிப் பொய்யாக அழுகிறான். மனமிறங்கிய யசோதை கண்ணனை அலங்கரித்து வெண்ணை தருகிறாள். இறுதியில் தானும் பலராமனும் யசோதையின் இரு கண்களே என்று வலியுறுத்தி, யசோதையை நாடகமாடி ஏய்த்ததாகச் சிரித்து, மண்ணில் நிகரிலா மாயவன் நானே என்று விடைபெற்றார் கண்ணனாகவே மாறிவிட்ட பவித்ரா. கடினமான ஜதிகளை நன்றாக ஆடிய முறையும், நிறைவான அபிநயத்துடன் தாளக்கட்டும் ஒருசேர ஆடியது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

பத்மஸ்ரீ குரு ரி.ழி. தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்கள் இயற்றிய ராம காதையின் பின்னணியில் நவரச விருந்து படைத்தார். மதுரை மீனாக்ஷியின் திருக்கல்யாணத்தை விளக்கும் பாடலும் பவித்ராவின் ஆடலும், இறைவியின் அழகினையும், வீரத்தையும், கருணையையும் அழகுறப் பறை சாற்றியது. பவித்ரா ஆடிய பஞ்சரத்ன தில்லானா நம்மை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது. "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" அப்பர் தேவாரப் பாடலுக்கு, நாட்டிய வழக்கில் பதினெட்டு வயதுக்கு மேலான நாட்டியமணிகளால் தான் உணர்வுபூர்வமாக அபிநயிக்க இயலும். ஆனால் பதினொன்றே வயதான பவித்ரா வியக்கும் வகையில் ஆடிய அழகு மெய்சிலிர்க்கச் செய்தது.

2009ஆம் ஆண்டு "Demonstrated Enjoyment of Dance" என்ற விருது ஃப்ரீமாண்ட் நகரவை நடத்திய போட்டியில் பவித்ராவுக்கு அளிக்கப்பட்டது. தவிர OSAAT, BATM, BATA போன்ற நிறுவனங்கள் நடத்திய போட்டிகளில் தனியாகவும், குழுவுடனும் ஆடிப் பரிசுகள் வென்றுள்ளார். 2005 முதல் திருச்சிற்றம்பலம் நாட்டியப்பள்ளியை நடத்தி வரும் குரு தீபா மகாதேவன் ஒரு சிறந்த நடனமணியும் நடன ஆசிரியரும் ஆவார்.

திருமதி சாந்தி ஸ்ரீராமன் (குரலிசை), திரு ரவீந்த்ர பாரதியின் (மிருதங்கம்), திருமதி சுபா நரசிம்மன் (வயலின்), திருமதி தீபா மகாதேவன் (நட்டுவாங்கம்) ஆகியோரின் சிறப்பான ஒத்துழைப்பில் அரங்கேற்றம் மிளிர்ந்தது.

சாவித்ரி,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com