ந. சிதம்பரசுப்பிரமணியன்
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடி காலம்' புதிய வகையிலான இலக்கிய மரபு உருவாவதற்குக் காரணமாக இருந்தது. 'மணிக்கொடி' இதழின் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமான பலரும் தனித்துவமும் கொண்டவர்களாக விளங்கியுள்ளார்கள். இந்த மரபில் வந்தவர்தான் ந. சிதம்பர சுப்பிரமணியன்.

'சக்கரவாகம்', 'சூரியகாந்தி', 'வருஷப் பிறப்பு' முதலிய சிறுகதைத் தொகுப்புகள், 'இதயநாதம்', 'நாகமணி', 'மண்ணில் தெரியுது வானம்', முதலிய நாவல்கள், 'ஊர்வசி' என்ற ஓரங்க நாடகம் ஆகியவை இவரது படைப்புகள். மணிக்கொடி எழுத்தாளர்களின் தாக்கம் இவரது படைப்புக்களில் உண்டு. ஆனால் வாழ்க்கை பற்றிய நோக்கிலும் தத்துவ விசாரணையிலும் இவர் தனக்கென்று ஒரு பாணி வைத்திருந்திருந்தார். இந்திய மரபின் கலாசாரத் தொன்மையின் ஐதீகங்களின் நம்பிக்கைப் பற்றாளராகவும் விளங்கினார். தொன்மையைக் காப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது இலக்கிய வாழ்வை, கலைப்பார்வையை, இந்தியத் தொன்மை ஒரு கருத்துநிலையாகவே வழிநடத்தியது. சுப்பிரமணியத்தின் படைப்புலகம் இந்த லட்சியப் பிடிமானத்தின் இசைவாகவே வெளிப்பட்டது.

தனது அறுபத்து ஐந்து வருட வாழ்க்கையில் சிதம்பர சுப்பிரமணியன் எழுதிய கதைகள் மொத்தம் ஐம்பது அல்லது அறுபது வரையில் இருக்கலாம் என்பது எழுத்தாளர் மாலனின் கணிப்பு. 'சிறுகதை என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒரு உணர்வு, ஒரு நிகழ்ச்சி மின்வெட்டுப் போல ஒரு அனுபவம் இவைகளைக் கொண்டதுதான் சிறுகதை' என்று சிதம்பர சுப்பிரமணியன் வகுத்துக் கொண்ட இலக்கணம். இதுவே இவரது சிறுகதை படைப்புலகத்தின் ஆதார சுருதியாக இருந்தது. உற்சாக மிகுதியில் எழுத வந்து தனக்கான எழுத்து பற்றிய கண்ணோட்டத்தை வகுத்துக் கொண்டவர் அல்லர் இவர். மாறாக தமிழ், ஆங்கில, சமஸ்கிருத மொழிகள் சார்ந்த அனுபவம், [[தாடனம்]] படைப்பு பற்றிய நுணுக்கங்கள் அறிந்து கொண்டதன் காரணமாக, அந்த உந்துதல் கொடுத்த தன்னம்பிக்கையினால் எழுத வந்தவர். ஆனால் தொன்மையைக் காப்பதில் இருந்த பற்று நவீனத்துவத்தின் சாயலை உணர்வுகளை உள்வாங்கத் தடுத்துவிடுகிறது.

இருப்பினும் சிதம்பர சுப்பிரமணியத்தின் படைப்புகள் தத்தமக்கான வடிவம் என்ன, அதன் அதிகபட்ச சாத்தியங்கள் என்ன என்று தெளிவாகத் தெரிந்து கொண்டு அதைச் சிறப்பாகக் கையாளும் பண்புகளால் வார்க்கப்பட்டது. இவரது பலம் உருவம் பற்றிய அக்கறை என்றே கூறலாம்.

'சிதம்பர சுப்பிரமணியத்தின் மனிதர்கள் அற்பமானவர்கள். அதே சமயம் அற்புதமானவர்கள். அவநம்பிக்கை, பயம், துக்கம், தன்னுடையது என்ற அகங்காரம், சந்தேகம் ஆகியவற்றால் வதைபடுபவர்கள். இந்த வதையின் காரணமாகத் தங்களைத் தாங்களே ஒரு மன அழுத்தத்துக்குள் தள்ளிக் கொள்கிறவர்கள். ஆனால் அந்த இறுக்கத்தின் ஒரு அபாரமான கணத்தில் அவர்களுக்கு ஒளி கிடைத்துவிடும். தங்களுடைய அழுக்குகளைத் தூக்கி எறிந்து மிக உன்னதமான, மனிதகுலம் முழுமையும் நேசிக்கிற மனநிலைக்குச் சென்றுவிடக் கூடியவர்கள்.

சந்தர்ப்பங்கள் எப்படி மனிதனை அசுரனாகவும் தேவனாகவும் ஆக்கிவிடுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சித்தரிப்பதில் சிதம்பர சுப்பிரமணியன் வெற்றி கண்டவர்' என்று மாலன் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. அதே நேரம் மனித உறவின் சிக்கல்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது தொன்மையின் சுமை அந்தந்த பாத்திரங்களின் அதற்கேயுரிய குணங்களைக் கண்டடைவதற்குத் தடையாக உள்ளமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். இது படைப்புக் களத்தின் உயிர்ப்பைச் சேதாரம் செய்யும் பண்பு கொண்டது எனலாம்.

கலையில் தனித்தன்மை என்பது கருத்துச் சார்ந்தது. மனோபாவம் சார்ந்தது. வடிவம் சார்ந்ததல்ல என்பது சிதம்பர சுப்பிரமணியத்தின் கருத்து. இந்த அடிப்படையை வைத்துத்தான் இவரது படைப்புலகம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும் தனித்துவப் பண்புகளுடன் கூடிய எழுத்து நடை, வாழ்வியல் அனுபவம் இவரது சிறப்புகளாக வெளிப்பட்டதன. இதனாலேயே பலரது பாராட்டுக்கும் காரணமாக இருந்துள்ளார். இவரது கருத்துலகம் சார்ந்து வெளிப்பட்ட கலைத்துவம் ஒரு பொதுப் போக்காக வெளிப்படமுடியாது. அவற்றின் அனுபவமும் முழுமையானதல்ல ஒரு விதத்தில் கற்பனையான இலட்சியவாத நம்பிக்கையின் கீற்றுகளாகவே உள்ளன. இது இவரது சிறுகதைகளுக்கும் பொருந்தும். வேறு கோணத்தில் சொன்னால் 'இந்தியத் தத்துவம்' என்று இவர் நம்பிய கொள்கையின்பாற்பட்ட வாழ்வியல் சார்ந்த எழுத்துரைப்புத்தான் படைப்புகளாக வெளிப்பட்டன. மனிதனும் தெய்வமும் வேறுவேறு அல்ல. இவை இரண்டும் ஒன்றே என்கிற அத்வைதக் கொள்கை இவருடையது. இதுவே இவரது படைப்பியக்கத்தின் பலமாகவும், பலவீனமாகவும் இருந்தது.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com